வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மார்ச் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், நேற்று முன்தினம் இரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய சட்ட நடவடிக்கை குறித்து தொழில் ஆணையாளர் பிரபாத் சந்ரகீர்த்தியிடம் எமது செய்திச் சேவை வினவியது.
இதன்போது பதிலளித்த தொழில் ஆணையாளர், குறித்த வர்த்தமானியை அமுலாக்குவதற்கு அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் இணங்கியுள்ளதாக ஊடகங்களின் மூலமாக தெரிவித்துள்ளதென குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையில் செயற்படுவதாகவும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
எவ்வாறிருப்பினும், இந்த வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வேதன நிர்ணய கட்டளை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த தரப்பினருக்கு எதிராக அபாரதமோ அல்லது 6 மாதகால சிறைத் தண்டனையோ விதிக்க முடியும் என தொழில் ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில், தொழிற்சங்கங்களும், பெருந்தோட்ட நிறுவனங்களும் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வரலாம் என அவர் குறிப்பிட்டார்.
கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தமக்கு அறிவித்துள்ளமையினால், அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஒரு மாதத்திற்குள் வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளதா என தொழில் ஆணையாளரிடம் எமது செய்திச் சேவை வினவியது.
இதற்குப் பதிலளித்த அவர், அது குறித்து தொழிற்சங்கங்கள் அவதானம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
எனினும், இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கமின்மை காரணமாக, வேதன நிர்ணய சபையில், வேதனம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அது தொடர்பில் அவர்கள் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வர வேண்டும் என தொழில் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தத்தைத் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், இரு தரப்பினரும் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வரவேண்டும்
ஒரு மாத காலத்திற்குள், இரு தரப்பினரும் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வராவிட்டால், கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானியை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என தொழில் ஆணையாளர் கூறினார்.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழில் அமைச்சினால் எவ்வாறான மத்தியஸ்தத்தை வகிக்க முடியும் என தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பத்திரணவிடம் எமது செய்திச் சேவை வினவியது.
இதன்போது பதிலளித்த அவர், கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இரு தரப்பினரும் இணங்கினால், அதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
இதேநேரம், வேதன விடயத்தை தவிர்த்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி தொடர்பான உடன்படிக்கைக்கும் செல்ல முடியும்.
எவ்வாறிருப்பினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை நிறுவனங்களினால் தன்னிச்சையாக இல்லாமல் செய்ய முடியாது.
ஆனபோதிலும், அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுமாயின், அதன் தன்மை குறித்த ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்க முடியும் என தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்தார்.