மஹாகவியின் கிராமம்

எம்.ஏ.நுஃமான்

இக்கட்டுரை செங்கதிரோனை ஆசிரியராக் கொண்டு கொழும்பு தமிழ் சங்க மாதாந்த ஏடாக வெளிவந்த ‘ஓலை’ சஞ்சிகையின் 17வது இதழில் (2003) வெளிவந்தது. மஹாகவியின் 50 வது நினைவு தினத்தையொட்டி (ஜுன் 20) இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.

ஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ்க்கையே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மஹாகவியின் கிராமியச் சித்தரிப்பில் கால அடிப்படையில் இருவேறுபட்ட நிலைகளைக் காணமுடிகிறது. அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் கிராமம் ஓர் இலட்சியபூமியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதையும், அவரது பிற்காலப்படைப்புகளில் கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். ஆரம்பகாலத்தில் அவரிடம் காணப்பட்ட கற்பனாவாதமும் (Romanticism) பிற்காலத்தில் அவரிடம் வலுப்பெற்ற யதார்த்தவாதமும் (Realism) இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்று கூறத் தோன்றுகின்றது.

மஹாகவியின் ஆரம்பக்காலக் கவிதைகளில் நகரமும் கிராமமும் எதிர்நிலைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. நகரம் மனித வாழ்வுக்கு உகந்ததன்று. பொய் நாகரிகம் மிகுந்தது. மனித மனத்தை மரத்துப்போகச் செய்வது. பதிலாக கிராமம் மனோரம்மியமானது. மனித மனத்துக்கு உயர்வைத் தருவது. அதுவே மனிதன் முட்டொழிந்து வாழத் தக்க இன்பபுரி. இந்தக் கண்ணோட்டம் 18, 19ம் நூற்றாண்டு மேலைத்தேயக் கற்பனாவாதக் கவிதை மரபின் வழிவருவது எனலாம். கைத்தொழிற் புரட்சியின் விளைவான நகர்ப்புற நாகரிக வளர்ச்சி கிராமத்தின் அமைதியிலும் இயற்கை எழிலிலும் மேலைக் கவிஞர்களுக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்திய காலம் அது வில்லியம் பிளேக், வில்லியம் வேர்ட்ஸ்வேத், கோல்றிஜ் லோட் பைரன், ஷெல்லி, ஜோன் கீற்ஸ் போன்றவர்களை ஆங்கிலக் கவிதை மரபில் றொமன்ரிக் கவிஞர்கள் (Romantic Poets) என அழைப்பர். இவர்கள் இயற்கை எழிலுக்குத் தங்கள் கவிதைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள். இயற்கை எழில், மாசுறாத கிராமத்துடன் இணைத்தே நோக்கப்பட்டது.

காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் நகரமயமாக்கலுக்கு உட்பட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் நாம் இந்தக் குரலைக் கேட்கிறோம். இந்தியச் சூழலில் போலியான கைத்தொழில் நாகரீகத்திலிருந்து விடுபட்டு இயற்கையோடியைந்த வாழ்வை நோக்கி கிராமத்துக்குத் திரும்புமாறு மகாத்மாக் காந்தி அழைப்பு விடுத்தமையும், இது தொடர்பாக நாம் நினைவுகூரத்தக்கது. ஐரோப்பிய கற்பனாவாதக் கவிதையின் செல்வாக்கு கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இந்தியக் கவிதையில் பெருமளவு காணப்பட்டது. குமாரன் ஆசான், உள்ளுர், வள்ளத்தோல் முதலிய கவிஞர்கள் மூலம் இது மலையாளக் கவிதையில் அதன் உச்சநிலை அடைந்தது என்பர். பாரதி மூலமே இது தமிழுக்கு அறிமுகமாயிற்று. ஆயினும் பாரதிதாசனும் அவரது வாரிசுகளுமே இதைத் தமிழில் பெருமளவு முன்னெடுத்துச் சென்றனர். எனினும், இவர்கள் ரொமன்டிஸத்தின் ஓர் அம்சமான இயற்கை அழகில் மனம் பறிகொடுத்தலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் எனலாம். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு இதற்கு உதாரணம். 1950,60 கள் வரை தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த பாரதிதாசன் பரம்பரையினரின் கவிதைத் தொகுதிகளில் இயற்கை என்ற தலைப்பில் ஒரு தனிப்பகுதி தப்பாமல் இடம்பெற்றிருக்கக் காணலாம். சங்க இலக்கிய மரபில் நாம் காண்பதுபோல் இயற்கை கவிப்பொருளின் பின்னணியாக இல்லாமல் இயற்கையே கவிப்பொருளாகிய தன்மையை இவர்களிடம் காணலாம்.

மஹாகவி தன் ஆரம்ப காலத்தில் இந்தக் கற்பனாவாதக் கவிதை மரபின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார் எனினும், பாரதிதாசன் மரபினர்போல் இயற்கையை இயற்கையாக அன்றி, அதை கிராமியப் பண்பாட்டின் ஒர் பிரிக்கமுடியாத அம்சமாகவே நோக்கியுள்ளார். இயற்கையோடியைந்த வாழ்வு கிராமத்திலேயே, கிராமியப் பண்பாட்டிலேயே கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரது ஆரம்பாலக் கவிதைகள் சில காட்டுகின்றன. இந்த வகையில் கிராமம், யாழ்ப்பாணம் செல்வேன், செல்லாக்காசு ஆகிய அவரது மூன்று கவிதைகள் முக்கியமானவை.

கிராமம் 1950களின் ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை, கிராம மக்களின் உயர்ந்த பண்பாடு பற்றிய பின்வரும் படிமத்துடன் அது தொடங்குகின்றது.

நாள்முழுதும் பாடுபடுவார்கள்;- ஒயார்;

நன்று புரிவார் இரங்குவார்கள்;

ஆள் புதியன் ஆனாலும்

ஆதரிப்பர், போய் உதவுவார்கள் – ஊரார்கள்.

பின்னர் கவிதை கிராமத்தின் இயற்கை வனப்பை நோக்கிச் செல்கிறது. அதன் நெல் வயல், மாந்தோப்பு, ஆட்டிடையனின் இசை, வேப்பமர நிழல், பூமலியும் பொய்கை, குயில்பாட்டு இவற்றையெல்லாம் அனுபவிக்கும் போது “நீமடிந்ததென்றிருந்த நின் கவிதை உணர்வுதலைதுாக்கும் பா ஆக்கும்” என்று பாடுகிறார் கவிஞர்.

கடைசியாகக் கவிதை இவ்வாறு முடிகிறது.

நல்லவர்களுக் கிதுதான் நாடு – பொய்

நாகரிகத்துக் கப்பால் ஒடு!

முல்லை நாடு பக்கத்தில்

மூன்றறைகளோடு சிறு வீடு போதும் எடு ஏடு!

இங்கு நகரம் பொய்நாகரிகம் என்றும் கிராமம் நல்லவர்களுக்குரிய நாடு என்றும் கட்டமைக்கப்படுவதைக் காணலாம். இந்த கிராமநகர முரண் யாழ்ப்பாணம் செல்வேன் கவிதையில் இன்னும் கூர்மையாக வெளிப்படுகிறது. இதுவும் 50களின் ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை. இது பத்திரிகையில் பிரசுரமானபோது, ஒரு ஆங்கிலக் கவிதையின் கருத்தைத் தழுவியது என்ற குறிப்பையும் மஹாகவி கொடுத்திருக்கிறார். வள்ளி தொகுப்பில் இது இடம்பெற்றபோது அந்தக் குறிப்பு காணப்படவில்லை. கவிதையைப் படிப்போருக்கு இது எந்த வகையில் ஆங்கிலக் கவிதையின் தழுவல் என்ற வியப்பு ஏற்படும். அவ்வளவு தற்புதுமையானதாக உள்ளது மஹாகவியின் கவிதை. பரபரப்பான கொழும்பில் வேலை செய்யும் ஒரு நடுத்தர வர்க்கத்தவன் சித்திரை விடுமுறையில் யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமாகும் உணர்வு நிலையைக் கவிதை வெளிப்படுத்துகின்றது. நகர நாகரிகத்தின் முட்டில் இருந்து விட்டு விடுதலையாகும் உணர்வு நிலையே கவிதையின் மையம், இது கவிஞரின் உணர்வுநிலையாகவும் இருக்கலாம். கவிதை தற்கூற்றாகவே அமைகின்றது.

யாழ்ப்பாணக் கிராமத்தில் தன் வீட்டுச் சுற்றாடலின் இயற்கை வனப்புடன் ஆரம்பமாகிறது கவிதை.

இந்நாள் எல்லாம் எங்கள் வீட்டுப்

பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்!

முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும்

கொல்லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்கள்

அல்லவோ? வயல்கள் எல்லாம் பச்சை

நெல் நிறைந்திருக்கும் என் நாட்டில்! பாட்டுப்

பாடாத உழவன் பாடுவான் துலாக்கள்

ஆடாது நிற்கும் அன்றோ இன்றே!

கிராமத்தின் இயற்கை வனப்பில்இருந்து அதன் உணவுப் பண்பாட்டுக்கு நகர்கிறது மனம் கொழும்பின் ஹோட்டல் தரும் முட்டை ரொட்டிக்குச் சலித்துப் போன மனம் கிராமத்தில் தாய் அன்புடன் ஊட்டிய கூழையும், பழஞ்சோற்றையும் எண்ணி வாயூறுகின்றது.

கூழ்ப்பானையின் முன் கூடிக் குந்தி

இருந்து இலைகோலி இடுப்பில் இட்டு ஊட்டிய

கரம் தெரிந்து ஊற்றும் அவ்விருந்து அருந்திலனேல்

 பட்டினி போக்கா பழம்,பால்,இவ்வூர்

ஒட்டலின் முட்டை ரொட்டிகள்!

அன்னை பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து

வழங்கலை நினைத்தால் வாயூறாதோ?

இந்த வாயூறலே பயணத்தைத் துரிதப்படுத்துகின்றது.

“கடவுளே! உடனே உடுத்துக் கொண்டு

அடுத்த ரயிலைப் பிடித்துக்கொள்கிறேன்” என்கிறார் கவிஞர்.

அந்தப் பெற்ற பொன்னாட்டைப் பிரிந்து இனிமேலே

சற்றும் இக்கொழும்பில் தங்கேன்! இங்கே.

என்று தனக்குத் தானே உறுதி கூறிக்கொள்கிறார். அடுத்த வரிகளில் மன, உடல் ரீதியில் முட்டை ஏற்படுத்தும் செயற்கையான நகர நாகரிகம் படிமமாக்கப்படுகின்றது.

முலை இளம் முளைகள் முனைந்தெழுவதனை

கலை குறைத்து அணியும் கன்னியர் காட்டவும்

தலை இழந்தே நாம் தடந்தோள் ஒளிக்கும்

சட்டைகள் கைகள் முட்ட இட்டும்

பட்டிகள் கழுத்தை வெட்ட விட்டும்

கொட்டிடும் வியர்வையில் குமைவதா?

என்ற கேள்வி இந்தப் படிமத்தின் ஊடாக மனதில் மேல் எழுகின்றது. அதற்குரிய பதிலோடு கவிதை இவ்வாறு முடிகிறது. “இவற்றை விட்டெறிந்து எண்சாணி வேட்டி கட்டி முட்டொழியலாம் அம் மூதூர் செல்வேன்.”

நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள உணவு, உடைப் பண்பாட்டு வேறுபாட்டைக் குவிமையப்படுத்தி எளிமையான கிராமப் பண்பாடே உள, உடல் இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு விடுதலை உணர்வைத் தருகிறது என்ற ஒரு படிமத்தை இக்கவிதை நமக்குத் தருகின்றது. வாலிப வயதில் கிராமத்தைவிட்டு கொழும்புக்குத் தொழில் நிமித்தம் சென்ற இளம் மஹாகவியின் உண்மையான மன உணர்வையும் இக்கவிதை வெளிப்படுத்துகின்றது எனலாம்.

மூன்றாவது கவிதை ‘செல்லாக்காசு’ சற்றுப் பிந்தி 1960களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது என்று நினைக்கின்றேன். இதுவும் நகரம், கிராமம் என்ற எதிர்முரண்பற்றிய கவிதைதான். இக்கவிதையும் தன்கூற்றாகவே அமைகின்றது. பணத்தை மையமாகக் கொண்ட, ஒரே வட்டத்தில் சுற்றிச் சுழல்கிற, சாரமற்ற நகர வாழ்க்கைக்கு நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட ஒருவன், பிரதிபலன் எதிர்பாராத கிராம மக்களின் பரிவுக்கு ஆளாகி உயிர்தளிர்ப்புற்ற நிலையை கவிதை சித்தரிக்கின்றது.

பஸ் பயணத்துடன் கவிதை தொடங்குகின்றது. கவிசொல்லியான நகரத்தவன் பஸ்ஸில் பயணம் செய்கிறான். திட்டமான குறியிடம் நோக்கியதன்று அவன் பயணம். சாரமற்ற நகரவாழ்வில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடுவதே அவன் நோக்கமாகத் தெரிகிறது.

“வண்டி செல்கிறது எந்த வழியிலோ! பல

வாரமாய்ச் சூட்டினில் மாடுபோல். செயல்

மண்டிய நகரிலே வளைய வந்ததால்,

மானிட மனமுமோ மரத்துப் போனது!

நொண்டிய அதனை அந் நோயின் நீக்கிடும்

நோக்கமொன்றால் சில தூரம் தாண்டினேன்”

என்று தொடங்குகின்றது கவிதை. சூட்டினில்மாடு, மரத்துப்போய்நொண்டும் மனம் என்பன நகரத்தின் வரட்சியைக் காட்டும் சொற் குறியீடுகளாக உள்ளன. அவனுடைய பயணம் ஒரு ஆறுதல் தேடும் பயணம்தான் என்பது தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகின்றது.

கண்டது வழியிலே எழில் இறங்கினேன்;

காலடிப் பாதையில் கால் நடந்தன.

எனத் தொடரும் அடுத்தவரிகளில் அவன் எதிர் பாராமலே அவனது நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது தெரிகிறது. அடுத்துவரும் வரிகளில் அவன் எதிர்கொள்ள நேர்ந்த அனுபவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன.

“புல்லில் என் பாதங்கள் பட உணர்டாகிய

போதையை சொல்லினில் போட்டுக் காட்டுதல்

அல்ல என நினைவு”  

என்று தொடர்கிறான். சிலவேளை அது அவன் சொல்லுக்கு அடங்காததாக இருக்கக் கூடும். வெம்பகல் எரித்த வேளையில் அவன் அங்கு போய்ச் சேர்கிறான். அது தொலைவில் உள்ள பின்தங்கிய கிராமம். மாலையானதும் ஒரு கல்லில் அமர்கிறான். “காற்று எனை அணைத்து இன்பக் களைப்புணர்டாக்கிற்று” என்கிறான். அந்தக் களைப்பில் அவனுக்கு பொழுது போனதே தெரியவில்லை. இனிப் போகலாம் என்று எழும்பியபோது”அதோ செல்கிறதாம் இவ்வூர்க் கடைசி வண்டியும்” எனத் தெரியவருகிறது. அடுத்து வரும் இரண்டு செய்யுள்கள் முன்பின் அறிமுகமில்லாத அவனைக் கிராமத்துக் குடிசைவாசிகள் எவ்வாறு உபசரித்தார்கள் என்பதைப் படம் பிடிக்கின்றன.

போய் ஒரு படலையில் தட்டினேன். அது

பொக்கெனத் திறந்தது. பொழுதைத் தூங்க ஓர்

பாய் கிடைத்து. கிள்ளும் பசிக்கு வீட்டவர்

பச்சை அன்பொடு காய்ந்தபாணி கிடைத்தது.

என்ற வரிகள் தரும் கருத்தா இல்லாமலே காரியம் நடப்பதான இந்தச் சித்திரம், கிராமத்துப் பண்பாட்டில் இந்த உபசரணை சுயேச்சையான, இயல்பான நிகழ்வு என்ற உணர்வைத் தருகிறது. அன்றுதான் அவன் நிம்மதியான ஆழ்ந்த துயில் கொண்டான் போலும்

வாய் இருந்தது அங்கே நுளம்புக்கு ஆயினும்

வந்தது மரணத்தின் துளியைப்போல் துயில் என்று கூறுகிறான

காய்கிற கதிர்களின் சவுக்குப்படும் வரை தூங்குகிறான்.

விடிந்ததும்தான் வீட்டவர் அவனை அன்புடன் விசாரிக்கின்றனர். “ஏங்கிடுவார் அன்றோ தேடி நும்மவர்?” என ஆதங்கப்படுகின்றனர். இப்பொழுதுண்டு ஒரு வண்டி பட்டணம் என வழிப்படுத்துகின்றனர். அந்த வீட்டவரின் அன்பு அதேகணம் மறக் கற்பாலதன்று என்று அவன் நினைக்கின்றான். எல்லாவற்றையும் பணத்தினாலேயே அளவிடும் அவனது பட்டணத்து மனம் அவர்களது பயன்கருதா அன்பையும் அவ்வாறே அளவிட முயல்கிறது.பலர்க்கும் நாம் நீட்டும் தாள் ஒன்றை” அவன் அவர்களுக்கும் நீட்டுகிறான். அதற்கு, அவர்களுடைய எதிர்வினை அவனுக்கு வாழ்வின் மறுபக்கத்தை, நகரத்தவன் காணாத பிறிதொருபக்கத்தை உணர்த்துகின்றது. கவிதை பின்வருமாறு முடிகின்றது.

அப்பொழு தலர்ந்த இன் முகத்தின் மென்மலர்

அப்படிக் குவிந்திருள் அடைந்ததேன்! துயர்

கப்பியதேன் ஒளி விழிகள் மீதிலே!

காசையோ அவற்றின் சந்நிதிமுன் வீசினேன்!

குப்புற வீழந்தன நிலத்தில் என்விழி

கூறுதற் கின்றி என் உதடு மூடின.

எப்படியோ பின்னர் நகர் திரும்பினேன்.

எனினும் என் உளத்திலே உயிர் தளிர்த்தது.

இந்த மூன்று கவிதைகளும் கிராமம் பற்றிய மஹாகவியின் ஆரம்பகாலக் கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இங்கு கிராமம் முரண்பாடுகளும் மோதல்களும் அற்ற மனிதனின் உயிர் தளிர்க்கச் செய்யும் இலட்சிய பூமியாகவே படிமம் கொள்கிறது. கிராமம் பற்றிய மஹாகவியின் இந்த இலட்சியப் படிமம் 1960களில் அவர் எழுதிய தேரும் திங்களும் போன்ற சிறு கவிதைகளிலும் சடங்கு. கணிமணியாள் காதை, சாதாரண மனிதனது சரித்திரம், கோடை, புதிய தொரு வீடு போன்ற பெரிய படைப்புகளிலும் காணப்படவில்லை. இவையெல்லாம் கிராம வாழ்வையே மையமாகக்கொண்ட படைப்புகள். இவற்றில் சித்திரிக்கப்படும் கிராமம் இலட்சிய பூமியல்ல. இங்கும் முரண்பாடுகளும் மோதல்களும் உண்டு. பொய்மைகளும் போலித்தனங்களும் உண்டு. இங்கு அன்பும் அரவணைப்பும் மட்டுமன்றி வன்முறையும். ஒடுக்குமுறையும் படுகொலைகளும் உண்டு. நீதியை மறுதலிக்கும் கூறுகளும் நீதிக்கான போராட்டங்களும் உண்டு. இந்தக் கிராமம் யதார்த்தமானது. மஹாகவி காட்டும் இந்த யதார்த்தமான கிராமத்தின் இயல்புகள் விரிவான ஆய்வுக்குரியன.

Tags: