தமிழ் கட்சிகளின் மகஜர் கையளிப்பு ஒத்தி வைப்பு!

லங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் இயங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முகவரியிட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாலும் அவற்றின் சில நேசக் கட்சிகளாலும் கையெழுத்திடப்பட்டிருந்த மகஜரை கெழும்பிலுள்ள இந்தியத் தூதுவரிடம் கையளிப்பதற்கு நேற்றைய தினம் (ஜனவரி 11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தியத் தூதுவரை இந்திய மத்திய அரசு அவசரமாக புது தில்லிக்கு அழைத்ததால் கையளிப்பு நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்த சில பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி-

தமிழ் கட்சிகளின் இந்த மகஜர் தயாரிக்கும் விவகாரம் இந்திய மத்திய அரசின் ஆலோசனையைப் பெறாமல் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் தனிப்பட்ட ஆலோசனையின் பேரில் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக இலங்கை – இந்திய உறவில் அக்கறையுள்ள சிலர், இந்த மகஜரை இந்திய அரசு பெற்றுக் கொண்டால் அது, இரு நாட்டு உறவுகளில் தேவையில்லாத மனக் கசப்புகளை ஏற்படுத்தும் என இந்திய மத்திய அரசின் கவனததுக்குக் கொண்டு போனதைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் சா தலைமையிலான ஒரு குழுவினர் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் மேலதிக ஆலோசனைகளுக்காக புது தில்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய உயர் ஸ்தானிகர் கொழும்பு திரும்பிய பின்னரே தமிழ் கட்சிகளின் மகஜரை ஏற்பது சம்பந்தமான இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது

Tags: