பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்!

ழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவரான “தெணியான்”என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் 22.05.2022 அன்று மாலை வல்வெட்டித்துறை – பொலிகண்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன், இலக்கிய உலகில் பிரவேசித்ததும் ‘தெணியான்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் கற்று பின்னாளில் அங்கேயே நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தெணியான். மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் இவர் வர்ணிக்கப்பட்டவர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் சில நாவல்களையும் சில விமர்சனக் கட்டுரைத் தொகுதிகளையும் படைத்துள்ள தெணியானின் ‘பாதுகாப்பு’ என்ற சிறுகதை இலங்கைப் பாடசாலைகளில் 11 ஆம் தரம் மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலிலும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான ‘விவேகி’ இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை ‘பிணைப்பு’ வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, தினகரன், வீரகேசரி, தினக்குரல், ஜீவநதி உட்பட பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.

தெணியானின் கழுகுகள் (நாவல்), சொத்து (சிறுகதைத் தொகுதி), குடிமைகள் (நாவல்) என்பன தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டு, தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ். கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர்.

தேசிய சாகித்திய விருது, வடக்கு, கிழக்கு மகாண அமைச்சுப் பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவை – மற்றும் தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு மற்றும் தமிழ்நாடு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது ஆகியனவற்றுடன் இலங்கை அரசின் உயர் இலக்கிய கௌரவமான ‘சாகித்திய ரத்னா’ விருதும் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Tags: