வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும்

மோகன் பரன்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது

குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் .

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளில் இருந்து செத்தல் மிளகாய், நெல், அரிசி, மற்றும் கடலுணவுப்பொருட்கள் ஏற்றிய பொருட்கள் தென்னிலங்கையை நோக்கிச் சென்றன .

திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து, கடலுணவுப் பொருட்கள், நெல் என்பன லொறிகள் மூலம் சென்றன.

இத்தகைய பொருட்களைச் சந்தைப்படுத்திய வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்மக்கள், மண்ணெண்ணை, பெற்றோல் போன்ற எரிபொருட்கள் மற்றும் கட்டட பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்களை தென்னிலங்கையில் இருந்து வரும் போது கொள்வனவு செய்து வாங்கி வருவார்கள்.

கிட்டத்தட்ட பணப்புழக்கம் இருந்தாலும், பண்டமாற்று மாதிரியான விடயம் இடம்பெற்றது .

இந்தக்காலப்பகுதியில் தமிழர்பகுதிகள், முன்னேற்றகரமான அபிவிருத்தியை நோக்கிச் சென்றது.

ஒரு உற்பத்திப் பொருளாதாரம் தமிழர்களின் கையில் இருந்தது.

மாணவர்கள் கூட பாடசாலையில் இருந்து வீடு வந்தவுடன். மேற்குலக விவசாய செய்கையாளரின் குடும்பங்களைப்போல வயல்களிலும் தோட்டங்களிலும் பெற்றோர்க்குத் துணையாக வேலை செய்து படித்து வந்தார்கள்.

பெரியளவு பணம் இல்லாவிட்டாலும், வீட்டின் நாளாந்த வாழ்க்கைச் செலவைக் கழித்து சொற்ப பணத்தைச் சேமித்து வந்தார்கள். அத்தகைய வாழ்க்கை முறை அன்றிருந்தது .

ஆனால் தற்போது இலங்கை சென்று திரும்பியபோது அவதானித்த விடயம் ,
அன்றைய காலம் போல தமிழர்களிடம் உற்பத்திகள் எதுவும் இல்லை . உற்பத்திப் பொருளாதாரத்தில் ஒப்பீட்டு ரீதியில் வளர்ச்சி இல்லை.

தமிழர்பகுதியில் இருந்து கடலுணவு, நெல், அரிசி தவிர்ந்த ஏனைய உற்பத்திப் பொருட்கள், தென்னிலங்கைச் சந்தைகளுக்கு செல்வது அருகிவிட்டது.

அத்தகைய உற்பத்தி முயற்சிகள் சொல்லும் அளவுக்கு பெரிதாக செய்வதும் இல்லை.

வடக்கு கிழக்கு மாகணங்களில் இருந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் குறைவடைந்து, கொழும்பு, தம்புள்ள, புத்தளம், மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில் இருந்தே பெருமளவு உற்பத்திப்பொருட்கள் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள் வருகின்றன.

அன்று தென்னிலங்கையில் சந்தைவாய்ப்பைக் கொண்டிருந்த தமிழர்கள், இன்று தென்னிலங்கை மக்களுக்கு தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களில் சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, சோம்பெறிச் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம்.

இதற்கான காரணங்கள் முற்றுமுழுதாக புலம்பெயர் தமிழர்களே காரணம்.

பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களில் உற்பத்திப்பொருளாதார முறைமையின் கீழ் , இலங்கையில் வாழ்ந்து, கஷ்டங்கள் பலவற்றை சந்தித்தவர்கள் .

அந்த கஷ்டங்கள் துன்பங்களின் நினைவுகளோடு வாழும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களின் மனநிலை.

அந்த மனநிலையின் பிரகாரம் அந்த வாழ்வியலின் உணர்வாக, தனது தாய் , தந்தை சகோதரர்கள், உறவினர்கள் கஷடப்படக்கூடாது என்பதற்காக, பெருமளவு பணத்தினை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமது உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

பாடசாலைகள் சனசமூக நிலையங்கள், மற்றும் பொது அமைப்புக்கள் என்பவற்றின் கட்டுமானங்களுக்கு எனவும் பெருமளவு பணத்தை அனுப்புகிறார்கள்.

உள்ளக கட்டுமான செயற்பாடுகள் என்பற்றுக்கும் பணத்தை அனுப்புகிறார்கள்.

அதனைவிட, புலம்பெயர் தேசத்தில் யுத்தம் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு என, சமூக சேவைநிறுவனங்கள், அறங்கட்டளைகள், நலன்புரி அமைப்புக்கள் என பலவற்றை அமைந்து, அவை மூலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளுக்காக நன்கொடைகளை அனுப்பி உதவுகிறார்கள்.

ஆகவே ஒட்டுமொத்தமாக, புலம்பெயர் தமிழர்களின் பெருந்தொகைப் பணம், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள, தமிழர்களைச் சென்றடைகிறது.

இந்தப்பணமே, வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பாலான தமிழர்களைச் சோம்பேறி ஆக்கியுள்ளது.

இந்தப்பணத்தின் வருகையால் குழந்தைப் பிறப்பில் இருந்து மரணச்சடங்குவரை கேளிக்கைகளும் செல்வச்செருக்கும் மிகுந்த வாழ்வியலாக மாறியிருக்கிறது.

உடல் உழைப்பு பின்தள்ளப்பட்டு விட்டது . இதனால் அங்கு வாழும் இளைய சமூகத்திற்கான ஒய்வு நேரங்கள் அதிகமாகின்றன.

தேவைக்கு அதிகமான பணமும் , அதிக ஒய்வு நேரமும் ஒரு சமூகத்தைச் சோம்பெறிகள் ஆக்குவதோடு, குற்றச்செயல்களிலும் ஈடுபட வைக்கிறது.

இதன் தாக்கம் வடக்கு கிழக்கு இளைய சமூகத்தின் பெரும்பாலனவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை, சமூகப்பெரியவர்களிடம் இருக்கிறது.

அதைவிட புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படும் , பெருந்தொகைப் பணம் வடக்கு கிழக்கில் தங்கி நிற்பது கிடையாது. நிதிநிறுவனங்கள், வங்கிகள் மூலமாக, தென்னிலங்கை முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது.

வடக்கு கிழக்கில் உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழ்க்கைக்கான பொருட்கள், சேவைகள் பெருமளவு தென்னிலங்கைப் பகுதியில் இருந்தே வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு கிடைப்பதால், அவற்றுக்கான கொடுப்பனவாக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பபடும் பணம், இன்னொரு மார்க்கமாக தென்னிலங்கையைச் சென்றடைகிறது.

அடிப்படையில் நோக்கினால் புலம்பெயர் தமிழர்களால் வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம், தென்னிலங்கைச் சமூகத்தினைச் சென்றடைகிறது என்கின்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் உள்ள சொந்தங்களுக்கு பணம் எதிர்காலத்திலும் அனுப்ப முடியுமா என்றால், அது விவாத்திற்கு உட்பட்டதே.
அதற்கு ஒரு சமூகவியல் பார்வை அவசியம்.

1985/1990 களில் புலம்பெயர்ந்து வந்த ஊர் மண்வாசனையை நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த புலம்பெயர் சமூகம் மூப்படைந்துவிட்டது .

ஓய்வூதியத்தினை அண்டிவிட்டது .

அவர்களால் இனி பணம் அனுப்புவது குறைவடையப் போகிறது .

அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்பனவற்றிலேயே அக்கறை காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

புலம்பெயர் நாடுகளில் பிறந்த பிள்ளைகள் இலங்கை வந்து திரும்பிய போது, ஏற்பட்ட வாழ்வியல் ஒப்பீடு திருப்திகரமானது இல்லை .

அவர்கள் இலங்கையில் உள்ள தாய்வழி உறவுக்கோ, தந்தைவழி உறவுக்கோ உதவுவார்கள் என கட்டியம் கூற முடியாது .

எனவே இன்னும் 10 வருடங்களில புலம் பெயர் தமிழர்களின் பணம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வருவது வீழ்ச்சியடையும் .

இது வடக்கு கிழக்கு தமிழர்களை மேலும் பாதிப்படைச் செய்யும் .

எனவே வடக்கு கிழக்குத் தமிழர்கள் கொள்முதல் பொருளாதாரமாக தங்கி இருக்காமல், உற்பத்திப் பொருளாதாரத்தினை கட்டி அமைக்கவேண்டிய தேவை, அவசியமாகவும் அவரமாகவும் இருக்கிறது .

இதன் அவசியப்பாட்டை உணர்ந்து அனைவரும் செயலாற்றவேண்டும் .

(இக்கட்டுரை முழுக்க முழுக்க தமிழ் தேசியவாத நோக்குடனேயே எழுதப்பட்டுள்ளது என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் யுத்தத்திற்கு முன்னரான வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார நிலைமையின் ஒரு பகுதியைச் சொல்லுவதாலும், வடக்கு கிழக்கு மக்கள் புலம்பெயர் சமூகத்தில் தங்கி வாழும் நிலையில் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுவதாலும் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

-சக்கரம் ஆசிரியர் குழு)

Tags: