Site icon சக்கரம்

எங்களைப்பற்றி

மிழில் இன்னுமொரு இணையத்தளம் ‘சக்கரம்’. மனிதனின் அன்றாட வாழ்வில் இன்று இணையம் என்பது பிரிக்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது. முன்பெல்லாம் ஒரு செய்தியை ‘பத்திரிகையில் வாசித்தேன், வானொலியில் கேட்டேன், தொலைக்காட்சியில் பார்த்தேன்’ என்று கூறியவர்களெல்லாம், இன்று ‘இணையத்தில் பார்த்தேன்’ என்று ஒரே வார்த்தையில் கூறுமளவிற்கு இணைய ஊடகங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதேபோல இன்றுள்ள சகல பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் போலவே, கல்வி, பொருளாதாரம், வர்த்தக நிறுவனங்கள், தொடர்பாடல்கள், போக்குவரத்துகள், தொழில்நுட்பங்கள், நாட்டின் பாதுகாப்பு போன்ற எல்லாமே இணையத்திலேயே முழுமையாகத் தங்கியுள்ளன.

இன்று உலகின் எந்தவொரு மூலையில் சம்பவம் நிகழ்ந்தாலும், அதனை உடனடியாகப் பதிவு செய்வதிலும், அது தொடர்பாக அலசி ஆராய்வதிலும் இணையம் சார்ந்த ஊடகங்களே முன்னணியில் நிற்கின்றன. எனவே இந்த இணையத்தளத்தை நாங்கள் ஏன் தொடங்கினோம் என்பதை சொல்வதற்கு முன்பாக, இணையப் பாவனையின் முக்கியத்துவத்தினை ஒருசில புள்ளிவிபரங்களின் துணையுடன் விளக்குவது அவசியம்.

கணனிகளில் இணையத்தின் வரலாறு என்பது 1950 களில் ஆரம்பித்தபோதிலும், இணையத்தின் வழியாக முதலாவது செய்திப்பரிமாற்றம் 1969 ஆம் ஆண்டில்தான் நிகழ்ந்தது. உலகின் முதலாவது இணையத்தளமான, info.cern.ch 06.08.1991 இல் ஆரம்பிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு மார்ச் 26ந் திகதி வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின் பிரகாரம், இவ்வாண்டு ஜனவரி வரை உலகில் குறைந்தது 1.94 மில்லியன் இணையத்தளங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் 4100667287 (4.1 பில்லியனிற்கு சற்று அதிகம்) இணையப் பாவனையாளர்கள் இருப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில் அரைவாசிக்கு மேல் இணையத்தை பாவிக்கின்றனர். இந்த உலக இணையப் பாவனையாளர்களில் 49 வீதமானோர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

உலக இணையப் பாவனையாளர்களில், ஐரோப்பாவினதும் ஆபிரிக்காவினதும் இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளினதும் இணையப் பாவனையாளர்களின் வீதங்கள் முறையே, 16.8, 11, 10.4 ஆக உள்ளன. உலக இணையப் பாவனையாளர்களில், வட அமெரிக்காவின் இணையப் பாவனையாளர்களோ வெறும் 8.2 வீதத்தினர் மட்டுமே. ஆனால் வட அமெரிக்காவின் சனத்தொகையில் 88.1 வீதத்தினரும் ஐரோப்பாவின் சனத்தொகையில் 85.2 வீதத்தினரும் இணையத்தைப் பாவிக்கின்றனர்.

ஆசியக் கண்டத்தில் மாத்திரமன்றி, உலகிலும் சீனாவே தற்போது இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் (819 மில்லியன்) முன்னணியிலுள்ள நாடு. இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் (627 மில்லியன்) உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இணையத்தின் அபரீதமான வளர்ச்சியையும், கடந்த 27 வருட காலத்தில் சமூக வலைத்தளங்களால் நிறைந்திருக்கும் உலகினையும் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு மேலேயுள்ள தரவுகள் போதுமானவை. இந்த இணையத்தின் பயன்பாட்டில் நாங்களும் பயணித்துக் கொண்டிருப்பதால், இணையத்தளம் ஒன்றின் மூலமாக மக்களிடம் சரியான கருத்துக்களை கொண்டு செல்லலாமென்ற சிந்தனையும் எம்மிடம் நீண்டகாலமாகவே இருந்தது. அந்தச் சிந்தiனையே ‘சக்கரம்’ ஆக உருக்கொண்டுள்ளது.

பல மில்லியன் கணக்கான கருத்துக் குவிப்புகளின் மத்தியில், அவற்றுள் எது சரி, எது பிழை என்பதைப் பிரித்துக்காண முடியாத நிலையில், தமிழில் இன்னுமொரு இணையத்தளம் அவசியந்தானா என்ற கேள்வி பலரிடையே எழலாம். ஆழமான சமூக, அறிவியல் சார்ந்த கட்டுரைகளை மற்றும் கலை, இலக்கியப் படைப்புகளை பொறுமையாக வாசிக்கவோ அல்லது அருமையான காட்சிப்பதிவுகளை ஆற அமர்ந்து பார்க்கவோ நேரம் செலவழிக்க முடியாது, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவிக்கொண்டே இருக்கும் சூழலில், அவற்றுள் ஒன்றாக, எமது ஊடகத்தையும் பலர் கடந்தும் போகலாம். அதனால் புதிய இணையத்தளம், புதிதாக எதைச் சாதிக்கப் போகின்றதென கருதுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எமது இணையத்தளம் எதிர்காலத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றதென்பதைப் பொறுத்தே, வரலாறு உரிய பதிலையளிக்கும்.

இலங்கையில் தற்போது 7 மில்லியனுக்கு மேற்பட்ட இணையப் பாவனையாளர்கள் இருப்பதாகவும், அவர்களில் 90 வீதமானோர் சமூக வலைத்தளங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதும் தெரிய வருகின்றது. எனவே இலங்கையில் தமிழ்மொழி பேசும் மக்களிடையேயும் சரியான கருத்துக்களைக் கொண்டு செல்வதற்கு இணையத்தளம் என்பது முக்கிய பங்கினை வகிக்கலாம் என்பது எங்களது தீர்மானகரமான கருத்து.

எல்லா ஊடகங்களைப் போலவே, சமூக வலைத்தளங்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். உலகெங்கிலும் சமூக வலைத்தளங்கள் அதிக தீமைகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக சமூக வலைத்தளங்களால் இளஞ்சந்ததியினர் சீரழிக்கப்படுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் உண்மைகள் இல்லாமலில்லை. பொதுவாக எந்த கருப்பொருளை எடுத்துக் கொண்டாலும் நன்மைகளும் தீமைகளும் விளைவிப்பனவாகவே இருக்கும். தீமைகளை விளைவித்துவிடும் என்பதற்காக, கிடைக்கக்கூடிய நன்மைகளை புறக்கணித்துவிட முடியாது.

அண்மைக்காலமாக இலங்கை அரசியலிலும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது இனங்களுக்கிடையே பதற்றமான நிலைமைகள் உருவாகும்போது, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகள் பரப்பப்பட்டு மோதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறான சூழ்நிலைகள் எழும்போது, வதந்திகளுக்கு எதிராக, உண்மை நிலைமையை எடுத்துரைப்பதற்கும் அதே சமூக வலைத்தளங்களையே பயன்படுத்த வேண்டும் என்பதை குற்றஞ்சாட்டுபவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

இலங்கையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பல தரப்பினரும், சமூகம் சார்ந்த கருத்துக்களை, அரசியல் சம்பந்தமான பிரச்சனைகளை, கட்சிப்பிரச்சாரங்களை, அரசுக்கு எதிரான விமர்சனங்களை மற்றும் விவாதங்களை ஓரளவிற்கேனும் பரவலாக முன்வைக்கின்றனர். இச்செயற்பாடுகள் தற்போது ஆட்சியிலுள்ள அரசினால் ஜீரணிக்க முடியாமலுள்ளது. அத்தோடு இவைகள் ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது பலத்த நெருக்கடிகளையும் கொடுக்கின்றன. அதனால்தான் சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமென தற்போதைய இலங்கை அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகின்றது.

அண்மையில் (21.04.2019) இலங்கையில் நடந்த 7 தற்கொலைக் குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னர், நான்கு நாட்களாக இலங்கையின் சகல சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டன. இதற்குக் காரணம் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காகவே எனக் கூறப்பட்டாலும், அரசு மீதான கண்டனங்களையும் விமர்சனங்களையும் தடுப்பதும் பிரதான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

மாற்றங்கள் மட்டுமே நிலையானவை. ஏனையவை அனைத்துமே மாறிக்கொண்டே இருப்பன. எங்களுக்காக மாற்றங்கள் காத்திருப்பதில்லை. உலகை மாற்ற வேண்டுமெனில் சமூக வலைத்தளங்கள் அளிக்கும் நன்மைகளையும், வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தீமைகளையும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே சுட்டிக்காட்டவும் முடியும்.

இன்றுள்ள இலங்கை உள்ளக மற்றும் சர்வதேச சமூக, பொருளாதார அரசியல் நிலைமைகள், சூழலியல் மற்றும் கலை, இலக்கியமென பல்வேறு பரப்புக்களில் அவசியமாக உடனுக்குடன் ஏராளமான விடயங்களை வெளிக்கொணர்வதற்கு ஊடகமொன்றின் தேவை ஒன்று எம்மால் உணரப்பட்டததினாலேயே இதனை ஆரம்பித்துள்ளோம். இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்மொழி பேசும் மக்களிடையே இன்று விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை நிலவரங்கள் தொடர்பான சகல பிழையான கருத்துக்களுக்கும் எதிராக, சரியான மாற்றுக் கருத்துக்களை கொண்டு செல்வதற்கு எமது ஊடகம் முன்னின்று செயற்படும்.

தமிழ் எழுத்து ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் எங்களுக்கு கொஞ்சம் முன்னனுபவங்கள் இருக்கின்ற போதிலும், இணைய ஊடகத்தில் இப்போதே முதன்முறையாகக் காலடி எடுத்து வைத்துள்ளோம். எனவே ‘சக்கரம்’ இணையத்தளத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடாத்துவது என்பது எங்கள் கைகளில் மாத்திரமன்றி, வாசகர்களாகிய உங்கள் ஆதரவிலும்தான் தங்கியுள்ளது. எவ்வித பாகுபாடோ அல்லது பேதங்களோ இன்றி எப்போதும் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் ஊடகத்தர்மத்தைப் பேணுவோம் என்ற உறுதிமொழியை வாசகர்களுக்கு அளிக்கின்றோம்.

ஆசிரியர் குழு
01.05.2019

Exit mobile version