உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னூறுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொலை செய்ததுடன், ஐந்நூறுக்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்திய சம்பவம் சம்பந்தமாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதுவிடின் வீதிக்கு இறங்கிப் போராடவேண்டி வரும் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் திருப்தியளிப்பனவாக இல்லை. இதுபற்றி விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியும். அதுபோல இதுவும் ஆகிவிடக்கூடாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தாம் கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை (Counter – terrorism Act) ஏற்கெனவே கொண்டு வந்திருந்தால் இந்தச் சம்பவங்கள் நடந்திருக்காது என்று கூறுகின்றார். புதிய சட்டம் எதற்காக? தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் (Prevention of Terrorism Act) தேவையான திருத்தங்களைச் செய்து நடைமுறைப்படுத்தியிருக்கலாமே என பேராயர் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.
பேராயருடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மதிப்புக்குரிய இற்றபான தம்மலங்கார மகாநாயக்க தேரரும் பங்குபற்றினார்.