Site icon சக்கரம்

அமைச்சார் ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

-பிரதீபன்

கிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்தத் தீர்மானத்தில் அமைச்சருக்கெதிராக 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிரேரணையில் 60இற்கும் அதிகமான எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதல்களில் பலவழிகளிலும் தொடர்புபட்டுள்ளார் என்பதே அவர் மீதான பொதுவான குற்றச்சாட்டாகும். ஆனால் அவர் அதை ஆரம்பம் முதல் மறுத்து வருகின்றார்.

இந்தச் சூழ்நிலையில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க, தெகிவளையில் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததிற்காக கைது செய்யப்பட்ட நபரோருவரை விடுவிக்குமாறு மூன்று தடவைகள் தன்னுடன் தொடர்புகொண்டு அமைச்சர் ரிசாத் வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

ஆனால் இதையும் மறுத்துள்ள ரிசாத், தான் அந்த நபரை விடுவிக்கும்படி இராணுவத்தளபதியிடம் கோரவில்லை என்றும், அந்த நபர் பற்றி விசாரித்ததாக மட்டும் விளக்கமளித்துள்ளார். இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. அதாவது, கைதுசெய்யப்பட்ட அந்த நபரை விடுவிக்குமாறு கோரவில்லையென்றால், ஏன் அமைச்சர் இராணுவத்தளபதியிடம் மூன்று தடவைகள் அவரைப்பற்றி விசாரிக்க வேண்டும். அந்த நபர் ரிசாத்துக்கு வேண்டியவர் என்றபடியால்தான் அவர் மீது ரிசாத் அதிக அக்கறை எடுத்திருக்கிறார்.

இந்த விடயத்தில் நாட்டின் மிகமுக்கியமான பதவி வகிக்கும், அதாவது நாட்டைப் பாதுகாக்கும் அதிமுக்கிய பதவி வகிக்கும் இராணுவத்தளபதி பொய் சொல்கிறாரா அல்லது அமைச்சர் பதவி வகிக்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பொய் சொல்கிறாரா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

அமைச்சர் ரிசாத்தைப் பொறுத்தவரை அவர் தான் சார்ந்த முஸ்லீம் இனத்துக்காக பக்கச்சார்பாகச் செயல்படுவதுடன், இரகசியமான நிகழ்ச்சிநிரல்களையும் முன்னெடுத்து வருகின்றார் என்ற குற்றச்சாட்டு சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் நீண்டகாலமாகச் சுமத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக வில்பத்து வனப்பகுதியிலும், மன்னார் மாவட்டத்திலும் அவர் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றார் என்ற குற்றச்சாட்டு பலமாக உண்டு.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால், ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் ரிசாத்துக்கு தொடர்பு உண்டு என்பதுதான் தற்போதைய பாரிய குற்றச்சாட்டாகும். அதற்காக அவரைக் கைதுசெய்து விசாரணைக்கு உள்படுத்தும்படி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.திசாநாயக்க உட்பட பலரும் கோரி வருகின்றனர்.

ரிசாத் மட்டுமின்றி, இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி போன்றவர்களுக்கும் தொடர்புண்டென்றும், அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகின்றது.

அமைச்சர் ரிசாத்தும், மற்றைய இரண்டு ஆளுநர்களும் அரசியல்வாதிகள். இவர்கள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், அவர்கள் நேர்மையாளர்கள் என்றால் செய்ய வேண்டியது, முதலில் தாம் வகிக்கும் பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகி, தம்மீதான விசாரணைக்கு ஒத்துழைத்து, தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிப்பதுதான். ஏனெனில் இது ஒரு தனிநபர் பற்றிய முறைப்பாடல்ல. முழுநாட்டினதும் வாழ்வா சாவா என்ற பிரச்சினை.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் எதிர்க்கட்சி முதல் நடவடிக்கையாக ரிசாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளது. ஆனால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

எதிரணியினர் முழப்பேரும் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தாலும், ஏறத்தாழ 95 உறுப்பினர்களின் ஆதரவுதான் கிடைக்கும். அதிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களிப்பார்களா என்பது சந்தேகத்துக்கிடமான விடயமாக உள்ளது. ஏனெனில் அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், தீவிரமான மகிந்த ராஜபக்ச எதிர்ப்பாளருமான துமிந்த திசநாயக்க தமது கட்சி பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பது குறித்து இன்னம் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அண்மையில் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு வந்தபோதும், சிறீ.ல.சு.க. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் திட்டம் நிறைவேற மறைமுகமாக உதவியது.

மற்றைய இரு எதிர்க்கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. என்பனவற்றைப் பொறுத்தவரையிலும் கூட பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்கள் என நம்ப முடியாது. ஏனெனில் அவர்கள் இந்த ஆட்சி பதவிக்கு வந்த 2015 முதல் பெரும்பாலான விடயங்களில் அரசை ஆதரித்தே வந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு ஒக்ரோபரில் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட பொழுது, இவ்விரு கட்சியினரும் ஐ.தே.க. அரசை மீண்டும் அரியணை ஏற்றவே அரும்பாடுபட்டனர். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஜே.வி.பி. தவிர்க்க முடியாமல் எதிர்த்து வாக்களித்தாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தே வாக்களித்தது.

இவர்கள் தொடர்ந்து இப்படிச் செயல்படுவதற்கு முக்கியமான காரணம், சுதந்திரக் கட்சியின் துமிந்த அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. என்பனவற்றுக்கு ஐ.தே.க. அரசு பதவியில் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. எனவே இத்தகைதொரு சூழலில் இந்த மூன்று அணியினரும் ரிசாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் நிலையே இருக்கின்றது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாவிட்டாலும் இந்தத் தீர்மானத்தில் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது. அதாவது, எதிர்க்கட்சியினர் நாட்டின் நலன்கருதி தேசத்துரோகச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நடவடிக்கை வரலாற்றில் பதிவாகும்.

அதேநேரத்தில், நாட்டுக்கு எதிரான சதிகார, நாசகார செயல்களில் ஈடுபட்ட ஒருவரைப் பதவி நீக்கம் செய்யாமல் தொடர்ந்தும் அமைச்சராக வைத்திருந்த இந்த அரசாங்கத்திற்கும், அதை ஆதரித்த எதிர்க்கட்சி அணிகளுக்கும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய களங்கம் ஏற்படும்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version