இலங்கையில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை கடந்தகால அரசாங்கங்கள் எதுவுமே கவனத்தில் கொள்ளாததின் விளைவுதான் ஏப்ரல் 21 ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்குக் காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் நிராகரித்துள்ளார். சுமந்திரனின் கருத்து தவறான விளக்கமாகும் எனவும் கொழும்பு பேராயர் தெரிவித்திருக்கிறார்.
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஆயர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சியாம் நிக்காயாவின் கோட்டை சிறீ கலயானி சமகிரி தர்ம மகா சபாவின் தலைவர் வண.இற்றபானே தம்மலங்கார நாயக்க தேரோவின் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொண்டார்.
இங்கு கலந்துகொண்ட கிறிஸ்தவ – பௌத்த மதத்தலைவர்கள் தற்போதைய சூழலை அரசியல் கட்சிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து பெரும்பாலான மக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
ஏனெனில், இலங்கையில் ஏப்ரல் 21 ல் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ். என்ற சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த அமைப்பின் தலைவர், அண்மையில் நியூசிலாந்தில் பள்ளிவாயல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என விளக்கமும் அளித்துள்ளார்.
இதுதவிர தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் இலங்கையில் புறுக்கணிக்கப்பட்டவர்களும் அல்ல. அவர்கள் அனைவரும் வசதியான பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், நன்கு கல்விகற்றவர்களும் ஆவர்.
நிலைமை இப்படியிருக்க சுமந்திரன், அந்த முஸ்லீம் இளைஞர்கள் அரசாங்கத்தின் பாரபட்சத்தினால்தான் இந்தத் தாக்குதலை மேற்கொண்டார்கள் எனக் கூறியிருப்பது உண்மையை அப்பட்டமாக மறைக்கும் செயலாகும் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை முஸ்லீம் மக்கள் உட்பட உலக மக்கள் அனைவருமே கண்டிக்கையில் சுமந்திரன் மட்டும் இந்தத் தாக்குதலுக்கு ஒரு நியாயத்தை கற்பிப்பது ஏற்கத்தகுந்தது அல்லவெனவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமந்திரன் இந்தத் தவறான கருத்தை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிங்கள வாரப்பத்திரிகையான ‘அனிட்டா’ (Annida) வின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போதே தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக பண்டாநாயக்க குமாரதுங்க, ஐ.தே.க. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்கிரமரட்ன, அமைச்சர் மனோ கணேசன், மனித உரிமை ஆணைக்குழு தலைவர் டாக்டர் தீபிகா உடகம, காணாமல் போனோர் அலுவலகத் தலைவர் சாலிய பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நலின்ட ஜெயதிஸ்ஸ ஆகயோரும் பங்குபற்றியுள்ளனர். ஆனால் இவர்களில் எவருமே சுமந்திரனின் தவறான கருத்தை மறுதலித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.