இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். புயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீட்டிக்கட்ட இந்தச் சட்டம் அண்மையில் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் பெற்று 14 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்ட நீடிப்புக்கு ஆதரவாக ஐ.தே.கவின் 19 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் தந்திரக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்களும் வாக்களித்தனர். எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், ஆளும் கட்சியில் சுமார் 117 பேர் வரையிருந்தும் இந்தத் தீர்மானம் சபையில் வந்த நேரம் ஆக 19 உறுப்பினர்களே இருந்துள்ளனர். அதேபோல, எதிர்க்கட்சியில் சுமார் 95 பேர்வரை இருந்தும் ஆக 03 பேரே சமூகமளித்துள்ளனர். எதிர்த்து வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் இருக்கின்றபோதும் சரிபாதியான 08 பேரே சபையில் பிரசன்னமாகி இருந்துள்ளனர்.
அதேநேரத்தில், இந்தச் சட்டத்தை விமர்சித்து வந்த ஜே.வி.பியினர், சட்ட நீடிப்பு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நழுவியுள்ளனர்.
நாட்டின் மிக முக்கியமான விடயம் ஒன்று நாடாளுமன்றத்தக்கு வந்தபோது, 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆக 30 பேரே சமூகம் அளித்ததிலிருந்து எமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ‘சிறப்பை’ அறிந்துகொள்ள முடிகிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அல்லது நீடிப்பதற்கு குறைந்தபட்ச வாக்குகள் இவ்வளவு இருக்க வேண்டும் என்ற வரையறுப்பு நமது நாட்டு நாடாளுமன்றத்துக்கு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த அவசர காலச் சட்டத்தின் கீழ், பொலிஸாருக்கு மாத்திரம் இருந்த பல அதிகாரங்கள் தற்போது முப்படையினர் வசமாகிறது.
இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் முப்படை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை நீதிமன்றத்தினால் கூட பிணை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், அவசரகால சட்டத்தில் காணப்படுகிற அதிகாரங்களுக்கு அமையவே, நாட்டில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.