அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவின் நேசநாடான ஈராக் தனது ஆதரவை ஈரானுக்கு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிப் ஈரக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் ஈராக் வெளிவிவகார அமைச்சர் முகமது அலி அல்ஹக்கிமுடன் வளைகுடாப்பகுதியில் உருவாகியுள்ள புதிய நிலைமைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் பின்னர் இருநாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்கள் தலைநகர் பக்தாத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய ஈராக் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதாரத் தடைகளையும், யுத்த முஸ்தீபுகளையும் வன்மையாகக் கண்டனம் செய்தார். அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமானதும், அநீதியானதும் என அவர் சாடினார். இந்தச் சூழலில் தமது நாட்டின் ஆதரவு ஈரானுக்கே என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தமது நாடு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மட்டுமின்றி, யுத்த சவாலையும் எதிர்நோக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஈராக் தனது ஆதரவை ஈரானுக்கு தெரிவித்திருப்பது வளைகுடாப்பகுதியில் அமெரிக்க கொள்கை தோல்வியடைந்துள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் ஈராக்கில் ஆட்சியிலிருந்த சதாம் ஹுசைனை போலிக்குற்றச்சாட்டுகள் மூலம் ஆட்சியிலிருந்து கவிழ்த்த அமெரிக்கா அவரைத் தூக்கிலிட்டும் கொன்றது. அதன்பின்னர் ஈராக்கில் உருவாக்கப்பட்ட அரசுகள் யாவும் அமெரிக்க ஆதரவுடனேயே உருவாக்கப்பட்டதுடன், அவை தொடர்ந்தும் அமெரிக்காவுக்கு விசுவாசமாகவே இருந்துவந்தன. இந்தச் சூழ்நிலையில் தற்போதைய ஈராக் அரசு, அமெரிக்க – ஈரான் மோதலில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அமெரிக்காவின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.