பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன் 60. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகள் மேற்கொண்டுள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் குவித்த முழு நேர எழுத்தாளர். இவர் பல்வேறு சினிமாக்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார்
நேற்று இரவு அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். பொருட்கள் வாங்கும்போது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளனர். எனவே சம்பவம் குறித்து அவர் வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். (செய்தி: தினமலர்)
தாக்கப்பட்டேன், ஜெயமோகன் கூறுகிறார்…
இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரியகுடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை.
என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன .
வழக்கு பதிவு செய்யப்படும் என நினைக்கிறேன். நீதி கிடைக்குமென்றும். (எழுத்தாளர் ஜெயமோகன் இணையத்திலிருந்து)