பத்திரிகையாளர் ஜமால் காஷோகியை (Jamal Khashoggi) சவூதி அரசாங்கமே திட்டமிட்டுப் படுகொலை செய்ததாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் அக்கெஸ் கலமார்ட் காஷோகி படுகொலை சம்பந்தமான தனது விசாரணையின் முதல் தகவல் அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டதின் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அவர் அங்கு வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் அவர் கட்டுரைகளும் எழுதி வந்தார்.
ஜமால் கஷோகி சவூதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 2ந் திகதி சென்றார். அதன்பின்னர் அவரைக் காணவில்லை.
துணைத் தூதரகத்தினுள் காஷோகியை கொலைகாரர்கள் முதலில் மயக்க ஊசி ஏற்றி மயக்கிய பின் அவரது தலையை பிளாஸ்டிக் பையொன்றினுள் வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவர் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. விசேட விசாரணையாளரின் அறிக்கையில் இந்தக் கொலை சம்பந்தமாக சவூதி இளவரசர் மீது நேரடியாகக் குற்றஞ்சாட்டாவிடினும், இந்தக் கொலை சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சவூதியின் நெருங்கிய நட்பு நாடாக அமெரிக்கா இருப்பதால் இந்த விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் மௌனமாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஐ.நா. விசேட விசாரணையாளரின் அறிக்கை நேரடியாகச் சவூதி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகின்றது என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.