ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஓட்டல் சரவணபவன் அதிபர் பி.ராஜகோபாலின் ஆயுள் தண்டனை ஜூலை 7 முதல் தொடங்குகிறது.
பளிச்சென வெள்ளை வேட்டி, சட்டை, நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் பூசி, ஆன்மீக மணம் கமழ காட்சி தருபவர் ஓட்டல் சரவணபவன் அதிபர் பி.ராஜகோபால். தென்மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1981-ல் சென்னைக்கு வந்து முதலில் மளிகை கடையைத்தான் தொடங்கினார். அதன்பிறகு உணவுத்தொழில் மீது நம்பிக்கை வைத்து ஓட்டல் சரவணபவனைத் தொடங்கினார். சுடச்சுட இட்லி, தோசை, பல வகை சட்னி, கமகமக்கும் சாம்பார் என வீட்டு சமையல் பக்குவத்தை தனது ஓட்டலில் புகுத்தியதால் இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சரவணபவன் தனது சங்கிலித் தொடர் கிளைகளை பரப்பியுள்ளது. கடின உழைப்பின் மூலம் புகழின் உச்சாணி கொம்புக்கு சென்ற ராஜகோபாலின் சரிவு பெண் மோகத்தால் மளமளவென சரிந்தது.
கடந்த 2000-ல் ஜோசியர் ஒருவரின் ஆலோசனைப்படி தனது ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக அடைய நினைத்ததுதான் ராஜகோபால் மூட நம்பிக்கையால் செய்த தவறு. இதற்காக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் சிக்கிய ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2004-ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2009-ம் ஆண்டு, ‘‘குற்றவாளிகளுக்கு கொலைக்குற்றத்தை கருத்தில்கொண்டு தண்டனை வழங்காமல் கீழமை நீதிமன்றம் தவறு இழைத்துவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றம் இழைத்துள்ளனர். இது மன்னிக்க முடியாத குற்றம்’’ எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் மற்றும் பட்டுராஜன், ஜனார்த்தன், டேனியல், தமிழ் என்ற தமிழ்ச் செல்வன், கார்மேகம் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ கோபால் உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 10 ஆண்டுகள் கழித்து இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பின்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் வரும் 7-ம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைக்கு செல்ல உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கெடு விதித்துள்ளது. அதன்படி, 71 வயதாகும் சரவணபவன் ராஜகோபாலின் ஆயுள் தண்டனை வரும் 7-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
-தமிழ் இந்து
ஜுலை 4, 2019