Site icon சக்கரம்

மார்க்சியம் இன்று

கார்ல் மார்க்ஸ்

ன்று வரையிலும் மார்க்சியம் உலகில் செலுத்திவரும் தாக்கத்தை உணர வேண்டுமானால் லண்டனில் உள்ள ‘ஹைகேட் கல்லறைக்குச் செல்லுங்கள்.’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ‘19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ், ஹெர்பர்ட் ஸ்பென்சர் இருவரும் அருகருகே இங்கே புதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், ஹெர்பர்ட் வாழும் அரிஸ்டாட்டிலாக மதிப்பிடப்பட்டார். மாறாக, ஹாம்ப்ஸ்டெட் கீழ்ப்பகுதியில் தன் நண்பரின் பணத்தில் உயிர் வாழும் நபராக கார்ல் மதிப்பிடப்பட்டார். இன்றோ ஸ்பென்சர் இங்கே இருக்கிறார் என்பதே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் இந்தியாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும்கூட பார்வையாளர்கள் கார்ல் மார்க்ஸின் கல்லறையைத் தரிசிக்கிறார்கள்.’

வலிமையானது மட்டுமே பிழைத்திருக்கும் என்னும் புகழ்பெற்ற பதத்தை அறிமுகப்படுத்தியவர் ஹெர்பர்ட் ஸ்பென்சர். அறவியல், மதம், மானுடவியல், தத்துவம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் ஸ்பென்சர். ஐரோப்பாவின் ஒரே தனிப்பெரும் சிந்தனையாளர் என்று பெருமிதத்துடன் அவர் அழைக்கப்பட்டார். ஆனால் 1900க்குப் பிறகு ஐரேப்பா ஸ்பென்சரைக் கடந்து சென்றது. தொடக்க காலத்தில் ஸ்பென்சருக்குக் கிடைத்த புகழ் அவர் மரணம் வரைகூட நீடிக்கவில்லை. ஸ்பென்சரை இன்று ஒருவரும் நினைவுகூர்வதில்லை.

ஸ்பென்சரைப் போலவே மார்க்ஸும் அறவியல், மதம், மானுடவியல், தத்துவம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கியிருக்கிறார். ஸ்பென்சரைப் போலன்றி மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் எழுத்துகள் விரிவாக வாசிக்கப்படவில்லை. ஸ்பென்சருக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் ஒரு பங்குக்கூட மார்க்ஸுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ‘இறப்புக்குப் பிறகு மார்க்ஸுக்குக் கிடைத்த புகழ் சாதாரணமானதா என்ன?’ என்று வியக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

ஹெர்பர்ட் ஸ்பென்சர் – Herbert Spencer (27 April 1820 – 8 December 1903)

மார்க்ஸ் இறந்து இருபத்தைந்து ஆண்டுகளில், ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக அவர் பெயரில் கட்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 1918ம் ஆண்டுக்குப் பிறகு மார்க்ஸின் பெயரைச் சூட்டிக்கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமரத் தொடங்கின. ஜனநாயகம் இல்லாத நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் மார்க்சியம் பயின்ற மாணவர்கள் புரட்சிகரப் படைகளை அமைக்கத் தொடங்கினர். ‘மார்க்ஸ் மறைந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்குள் உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியில் கீழ் திரண்டுவிட்டனர்.’

இன்றுவரை உலகம் முழுவதிலும் அவர் படைப்புகள் பெரும் பகுதியினரிடையே அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வரலாற்றாசிரியர்கள், சமூக அறிஞர்கள், தத்துவஞானிகள், அரசியல் நிபுணர்கள் என்று பலரும் மார்க்சியத்தின் துணை கொண்டு உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இன்னொரு பிரிவினர் நடைமுறையில் மார்க்சியத்தைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

மார்க்ஸே முதல் பெரும் சிந்தனையாளர் என்று கருத்து கணிப்பு நடத்தி அறிவித்த பிபிசியை ‘நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்கிறார் ஹாப்ஸ்பாம். மாறாக, ‘இன்று கூகிளில் மார்க்ஸ் பெயரைத் தட்டச்சு செய்து பாருங்கள். டார்வின், ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மார்க்ஸே மிகப்பெரிய அறிவுத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தெரியவரும். நிச்சயம், ஆடம் ஸ்மித், ஃபிராய்ட் இருவரையும்விட அதிகமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.’

ஆனால், உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் தாய் நாடாகக் கருதப்பட்டு வந்த சோவியத் யூனியன் தகர்ந்துவிட்ட நிலையில், புரட்சியின்மூலம் நிறுவப்பட்ட செஞ்சீனம் சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவி நிற்கும் தருணத்தில் மார்க்சியத்தில் இருந்து நாம் எத்தகைய நம்பிக்கையை பெறுவது?
ஹாப்ஸ்பாம் இந்தக் கேள்வியை வேறு கோணத்தில் இருந்து அணுகுகிறார்.

முதலில் சோவியத் யூனியனையும் மார்க்சியத்தையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்கிறார் ஹாப்ஸ்பாம். சோவியத்தில் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்சியம் தோல்வியடைந்ததன் காரணமாக, மார்க்சியத்துக்கும் லெனினியத்துக்குமான தொடர்பு அறுபட்டது. இது ஒரு வகையில் நல்லதுதான் என்கிறார் அவர். மார்க்சியத்தை சோவியத் பரிசோதனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவது தவறு.

ஹாப்ஸ்பாமின் இந்த வாதத்தை இன்னும் நீட்டித்தால் மார்க்சியத்தின் வெற்றி, தோல்விக்கும் சோவியத், சீனா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றின் வெற்றி, தோல்விக்கும் தொடர்பில்லை என்பது புரியவரும்.

லெனின், மாவோ போன்றவர்கள் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் தத்துவத்தை தங்கள் மண்ணுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியவர்கள். மார்க்சியத்தை முனைப்புடன் செழுமைப்படுத்தியவர்கள். அவர்களுடைய பரிசோதனைகள் மார்க்சியத்தை எந்தவகையிலும் பாதிக்காது. இவ்வாறு சொல்வதை சோவியத் மற்றும் செஞ் சீனத்தின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளமுடியாது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியை ஏன் மார்க்சியத்தின் வீழ்ச்சியாகக் கொள்ளமுடியாது என்பதற்கு ஹாப்ஸ்பாம் சில உதாரணங்கள் அளிக்கிறார்.

ஒரு முறை யுனைட்டெட் ஏர்லைன்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்பாமை அணுகி ஒரு கட்டுரை எழுதிக்கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். ஹாப்ஸ்பாம் திகைத்துப்போனார். விமானப் பயணிகளுக்கான ஒரு பிரத்தியேக இதழில் எழுதுமாறு எதற்காக ஒரு மார்க்சிஸ்டை அவர்கள் அணுகவேண்டும்? இத்தனைக்கும் அவர்களுடைய பயணிகளில் எண்பது சதவிகிதம் பேர் அமெரிக்கர்கள். ஓர் இடதுசாரியை வாசிக்க அவர்கள் விரும்புவார்களா என்ன? குழப்பங்கள் இருந்தபோதும், அழைப்பை மறுக்காமல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார் ஹாப்ஸ்பாம்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், கம்யூனிசத்தை அடி முதல் முடி வரை வெறுத்த ஒரு எழுத்தாளர் ஹாப்ஸ்பாமை அணுகி, ‘மார்க்ஸைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது மீண்டும் அவர் திகைத்துப்போனார். நான் என்ன சொல்வேன் என்று தெரிந்தும் என்னிடம் வந்து மார்க்ஸைப் பற்றி இவர் ஏன் விசாரிக்கவேண்டும்?எதற்காக திடீரென்று முதலாளிகளும் முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் மார்க்ஸ் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்? எதற்காக மார்க்ஸ்மீது அவர்களுக்கு இந்தத் திடீர் ஆர்வம்?

சோவியத் யூனியனின் கதை முடிந்துவிட்டது, மார்க்சியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் எழுதி சலித்துவிட்ட பிறகு எதற்காக மீண்டும் மார்க்ஸை இவர்கள் இழுக்கிறார்கள்? தன்னை அணுகிய நண்பரிடம் இதே கேள்வியை ஹாப்ஸ்பாம் வீசியபோது அவர் இப்படிப் பதிலளித்திருக்கிறார். ‘ஓ அந்த மனிதன், 150 ஆண்டுகளுக்கு முன்பே முதலாளித்துவம் குறித்து சிந்தித்திருக்கிறாராமே! அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று கவனிக்கவேண்டும் அல்லவா?’

karlmarxcard ராய்டர்ஸ் செய்திக்குறிப்பின்படி 2008ல் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் கிழக்கு ஜெர்மனியில் 52 சதவிகிதிம் பேர் சுதந்தரச் சந்தையால் தங்களுக்குப் பலனில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். 43 சதவிகிதம் பேர் சோஷலிசம் மீண்டும் வேண்டும் என்கிறார்கள்.

ஜெர்மானிய வங்கி ஒன்று (Sparkasse) தனது மாஸ்டர் கார்ட் கடன் அட்டையில் யாருடைய படத்தைப் பொறிக்கலாம் என்று தங்கள் வாடிக்கையாளர்களைக் கேட்டபோது பெரும்பாலானவர்கள் கார்ல் மார்க்ஸின் பெயரை முன்மொழிந்தனர். இறுதியில் அவருடைய படமே அட்டையில் இடம்பெற்றது.

மார்க்சியம் பரவிய நாடுகளை மட்டுமல்ல மார்க்சியம் பரவாத நாடுகளையும்கூட நாம் ஆய்வு செய்யவேண்டும். அங்கே ஏன் மார்க்சியம் நுழையவில்லை என்னும் கேள்வியை எழுப்பவேண்டும் என்கிறார் The Marxists என்னும் நூலின் ஆசிரியர் சி. ரைட் மில்ஸ்.

மார்க்சியக் கோட்பாடு மகத்தான ஆற்றல் கொண்டது. ஏனெனில் அது உண்மையானது என்கிறார் லெனின். ‘நீ ஏழையாக இருப்பதற்கு நீ காரணமல்ல. நீ ஏழையாக நீடிக்கவேண்டிய அவசியமும் இல்லை.’ என்று எடுத்துச் சொன்னதோடு நில்லாமல் அந்த நிலையை மாற்றுவதற்கான வழியையும் சொல்லிக்கொடுக்கிறது மார்க்சியம். ‘முதலாளித்துவம் நீடிக்கும்வரை உன்மீதான சுரண்டல் ஒழியாது. முதலாளித்துவம் என்பது முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அது பாதிக்கிறது. உன்னை ஏழையாக மாற்றிவைத்திருக்கும் இந்த சமுதாய முறையை உன்னால் மாற்றிமைக்கமுடியும். உன்னை அடியில் போட்டு வைத்து ஆதிக்கம் செலுத்துபவர்களின் அதிகாரம் ஒருநாள் தகர்ந்துபோகும். அதற்கான அடியை நீ எடுத்துவைக்கப்போகிறாய். மனிதன்மீது மனிதன் செலுத்தும் அடுக்குமுறையை அழிக்க நீ புரட்சிக்குத் தயாராகவேண்டும்.’

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்கிறது என்கிறது உலகில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது புத்தகமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (முதலாவது பைபிள்).

ஹைகேட் கல்லறை – Highgate Cemetery

அமெரிக்காவில் இன்று முதலாளித்துவம் உயிர்த்திருப்பதற்கு சீனாவின் வங்கிகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சுரண்டல் இல்லாமல் செல்வம் வளர்வதில்லை. இன்று ஒரு பிரிவினர் ஐ பாட், ஐ ஃபோன் யுகத்துக்கு முன்னேறியிருப்பதற்கு விலை கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் சீனத் தொழிலாளர்கள்.

பொருளாதார நெருக்கடியின்போது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பிணையில் மீட்டெடுத்தவர்கள் தொழிலாளர்கள்தாம். ஆனால் வேலை பறிபோன பணியாளர்களைப் பிணையில் மீட்க யாருமில்லை. அப்பட்டமாக கண்முன்னால் அரசும் முதலாளித்துவமும் கூட்டணி அமைத்துக்கொண்டு செயல்படுவதைக் கண்ட தொழிலாளர் வர்க்கம் தவிர்க்கவியலாதபடி மார்க்சியத்தின் பக்கம் திரும்புகிறது. மார்க்ஸின் மூலதனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய நூல்களின் விற்பனை குறிப்பாக 2008 தொடங்கி அதிகரித்திருக்கிறது என்னும் தி கார்டியனின் செய்திக்குறிப்பை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

மார்க்சியம் தொழிலாளி வர்க்கத்துக்குத் தேவை. காரணம் அது நேரடியாக அவர்களுடன் உரையாடுகிறது. 21ம் நூற்றாண்டில் முதலாளிகளுக்கும் மார்க்சியம் தேவைப்படுகிறது. காரணம் முதலாளித்துவம் எப்படி வளர்கிறது, எப்படி செல்வம் சேர்க்கிறது என்பதை மட்டுமல்ல எப்படி, ஏன் தடுமாறுகிறது, எப்படி வீழ்ச்சியடைகிறது என்பதையும் சேர்த்தே மார்க்ஸ் அலசியிருக்கிறார்.

ஆனால் கார்ல் மார்க்ஸ் இன்று நமக்குத் தேவைப்படுவதற்கு இவை மட்டும் காரணமல்ல என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். கார்ல் மார்க்ஸின் பொருளாதாரப் பங்களிப்புக்காக அல்ல; அவர் ஓர் அரசியல் ஆய்வாளர் என்பதால் அல்ல; நவீன சமூக அறிவியலின் தந்தை என்பதால் அல்ல. ‘கார்ல் மார்க்ஸ் மனித குலம் முழுமைக்கும் சேர்த்து சிந்தித்தவர்.’

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து கால் நூற்றாண்டுக்குப் பிறகு அந்நூலில் ஆசிரியர்கள் 1872ல் அதன் ஜெர்மன் பதிப்புக்காக முன்னுரையில் இப்படி எழுதினார்கள்.‘கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியனாவையே.’ இன்றும்கூட இந்த வார்த்தைகள் பொருந்தும்.

எதிர்கால நம்பிக்கையுடனும் பெருமிதமான வார்த்தைகளுடனும் இந்த அறிக்கை முடிவடைகிறது. ‘பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கோ அனைத்து உலகமும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’

நன்றி: இணையம்

Exit mobile version