திண்டுக்கல் மாவட்டம் பழனி, முருகனின் 6 படை வீடுகளுள் 3வது படைவீடாக உள்ள முக்கிய தளமாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் உண்டியலில் வசூலாகிறது. இந்த கோவிலில் உள்ள நவபாசான முருகன் சிலையை தரிசிக்கத்தான் பக்தர்கள் வருகை தருகிறார்கள். இதன் காரணமாக வேறு எந்த முருகன் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உள்ளது.
கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்த சிலையாக இந்த நவபாசான சிலை உள்ளது. இந்த சிலை தமிழகத்தில் உள்ள சித்தர்களில் மிக முக்கியமானவர்களாக கருதப்படுகிற போகர், புலிப்பாணி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. போகர் இங்கிருந்து சீனாவிற்கு சென்று வந்ததாக கூறுகிறார்கள். சிலர் போகர் சீனாவில் இருந்து சித்த வைத்தியம் கற்றுக்கொள்ள இங்கு வந்தவர் என்று கூறுகிறார்கள்.
சித்த வைத்தியத்தின் மூலம் மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் செய்து மக்களுக்கு எந்த நோயும் வராமல் இருக்க பல்வேறு சித்தர்கள் பக்தியின் பேரில் கையாண்டார்கள். கற்சிலையில் மூலிகைகளை தடவி அந்த சிலையில் அபிசேகம் செய்து அதனை பிரசாதமாக வழங்குவது ஒரு முறையாகும். அதற்கு பிறகு ஐம்பொன் சிலைகளை உருவாக்கும் போதே மூலிகைகளை கலவை செய்து உருவாக்கி அதில் அபிசேகம் செய்தும் பிரசாதமாக வழங்குவது இன்னொரு முறை. இதில் போகர் நவபாசானங்களைக் கொண்டு சிலை அமைத்து புதிய வைத்திய முறையை கடைப்பிடித்ததாக கூறப்படுகிறது. போகர் சித்தரால் 2 முருகன் சிலைகள் மற்றும் 7 வேல்கள் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த ஒரு சிலை தான் உள்ளது. இன்னொரு சிலை மற்றும் 7 வேல்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை.
மேலும் பழனி மலையின் உச்சியில் முருகன் சிலை அமைத்து பக்தர்களை பாதயாத்திரையாக, ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைப்பயிற்சியாக வந்து மலை மீதேறி நவபாசான அபிசேக பாலை அருந்துவதன் மூலம் உடல் நோய் தீர்ந்து மக்கள் ஆரோக்கியமாக வாழ முருகன் பெயரால் சித்தர்கள் வழிவகுத்தனர். அதன்படி இரவில் சந்தன காப்பு வைத்து அதிகாலையில் அந்த மருத்துவகுணமிக்க சந்தனத்தை எடுத்து பக்தர்களுக்கு கொடுப்பதும், அந்த மருத்துவ குணமிக்க அபிசேக பாலை பக்தர்களுக்கு பிரசாத மாக வழங்குவதுமாக ஒரு வைத்திய சாலையாக முருகன் கோவில் விளங்கியது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சிலை சராசரி வெப்பநிலையை விட சற்று கூடுதல் வெப்பம் நிறைந்த சிலையாக இருக்கும். இதனால் தான் அந்த சிலையை குளிர்விக்க ஆறு கால அபிசேகங்கள் செய்யப்பட்டன. 1940ம் ஆண்டுக்கு முன்பு வரை பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான அபிசேகங்கள் நடைபெறும். தொடர்ந்து அபிசேகம் செய்ததாலும், அதில் உள்ள நவபாசன மூலிகையை சுரண்டி பலர் வெளியில் விற்றதாலும் முருகனின் ஒரு கால் மெலிந்து சேதமடைந்துள்ளதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த தேய்மானத்திற்கு அதிகப்படியான அபிசேகங்கள் முக்கிய காரணமாகும்.
1936ம் ஆண்டு முதல் சிலை பற்றி சர்ச்சை நிலவுகிறது. 1973ம் ஆண்டில் ஆணையராக இருந்த அர்ச்சுணன் என்பவர் சிலை காக்கும் நடவடிக்கையாக தங்கக்கவசம் அணிவதற்கு தடை விதித்தார். இப்போது வரை அந்த தடை நீடிக்கிறது. 1980க்கு பிறகு ராதா தியாகராஜன் கோவில் தக்காராக நியமிக்கப்பட்டார். அவர் தான் சிலை சேதம் குறித்த முதல் தகவல் கொடுத்தார். 1983ல் முருகன் சிலையில் காதுக்கும் தோளுக்கும் இடையில் ஏற்பட்ட சேதம் குறித்து ஏன் தெரிவிக்க வில்லை என்று ஜெகநாதன் குருக்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சிலை தேய்மானம் குறித்து சதாசிவம் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி சில பரிந்துரை களை அரசுக்கு கொடுத்தது. ஆனால் அந்த பரிந்துரைகள் அமலாகவில்லை. இந்த சிலையை கடத்தவே தங்கத்திலான சிலை செய்யப்பட்டதாக தற்போது புதிய உண்மைகள் வெளி வருகின்றன. அந்த சிலை செய்ததிலும் மோசடி நடந்துள்ளது என்பதைத்தான் சிலை கடத்தல் பிரிவு டிஐஜி பொன் மாணிக்கவேல் கண்டறிந்தார். அந்த தங்கச்சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் தொன்மை மிகுந்த நவபாசான சிலையையே கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பழனி மக்களை மட்டுமல்ல, முருக பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இப்படிப்பட்ட தொன்மை மிகுந்த இந்த சிலையை கடத்துவதற்கு முயற்சி நடப்பதாகவும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இது பற்றி முழுமையாக விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் தப்பிக்க விடாமல் கைது செய்யப்படுவார்களா?
-தீக்கதிர்