Site icon சக்கரம்

அரசாங்கம் பதவி விலக வேண்டும்!

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கோரிக்கை!!

ஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் சர்வதேச சமூகத்தின் தேவைகளுக்காக நாட்டை நிலைகுலைய வைப்பதற்காக நடத்தப்பட்டவை என கொழும்ப மாவட்டப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சென்.செயஸ்தியன் தேவாலயத்தின் மீள்திறப்பு வைபவம் யூலை 21ஆம் நடைபெற்றபோது அதில் கலந்து உரையாற்றுகையிலேயே பேராயர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அங்கு அவர் மேலும் கூறுகையில்:

இந்தத் தாக்குதல்களுக்கு முஸ்லீம் சமூகம் பொறுப்பல்ல. சர்வதேச சமூகத்தின் தேவைகளுக்காக நாட்டை சீர்குலைப்பதற்காக தவறாக வழிநடத்தப்பட்ட சில இளைஞர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளின் தேவை கருதிச் செயற்படுகின்றனர். தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களையும், தொண்டு நிறுவனங்களையும் திருப்திப்படுத்துவதற்காக நாட்டின் சக்தி வாய்ந்த புலனாய்வு வலையமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது.

மாவனல்லையில் புத்தருடைய சிலையைச் சேதப்படுத்தியவர்களைப் பற்றிப் பொலிசாருக்குத் தகவல் கொடுத்தவரை சுட்ட தீவிரவாதிகளை வனாத்தவில்லுவ பகுதியில் வைத்து கைதுசெய்திருந்தபோதிலும் எவ்வித முன்யோசனைகளுமின்றி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்ரோபரில் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் மோதல் ஏற்பட்ட பின்னர் தேசிய பாதுகாப்புச் சபை கூடவில்லை. அதன் காரணமாக இந்தத் தாக்குதல்கள் சம்பந்தமாகக் கிடைத்த இரகசியத் தகவல்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் அரசாங்கமே பொறுப்பு என்றபடியால், அது பதவி விலகிக்கொண்டு நாட்டை நிர்வகிக்கக்கூடியவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

Exit mobile version