–கோ.ஒளிவண்ணன்
இன்று (ஓகஸ்டு 6-ந் தேதி) ஹிரோஷிமா நினைவு தினம்.
சூரியன் உதயமாகும் நாடு என்றழைக்கப்படும் ஜப்பான் நாட்டில் எல்லா நாளையும் போலத்தான் அன்றைய பொழுதும் விடிந்தது. ஆனால் அன்றைய நாள் அவர்களது வரலாற்றில் பெரும் சோகம் நிறைந்த நாளாக அமையும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். இன்றைக்கு 74 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்கா ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசியது. என்ன ஏது என்று புரிவதற்குள், அந்நகரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
சென்ற நூற்றாண்டு பல வகைகளில் சிறப்பு மிக்கது. அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது, மனிதன் புவியீர்ப்பு விசையை கடந்து விண்வெளிக்கு சென்றது, மருத்துவதுறையில் மாபெரும் சாதனைகள் கண்டது, கணினியை கண்டுபிடித்தது என அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரத்தில் மனிதன் மனிதனை கொத்துக்கொத்தாய் கொன்றது. குறிப்பாக, இரண்டு உலக போர்கள் ஏறத்தாழ 12 கோடி மக்களின் உயிர்களை பறித்த கொடூரமும் சென்ற நூற்றாண்டில்தான் அரங்கேறியது.
இரண்டாம் உலக போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ‘அச்சு நாடுகள்’ என்று ஓரணி சேர்ந்து போரினை தொடங்கின. 1939-ம் ஆண்டு ஜெர்மனி போலந்து நாட்டை தாக்கி கைப்பற்றியது. இதனையே இரண்டாம் உலக போரின் தொடக்கம் என்பர். பிரித்தானியா, ருசியா, ஐரோப்பிய நாடுகள் ‘நேச நாடுகள்’ என அணிவகுத்து இத்தாக்குதல்களை எதிர்கொண்டன. ஆனால், அச்சு நாடுகளின் கையோங்கி ஐரோப்பாவில் பல நாடுகளை கைப்பற்றினர். ஜெர்மனி ஐரோப்பிய நாட்டிலும், ஜப்பான் ஆசியாவிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த போரிட்டனர். ஐரோப்பாவில் பிரான்சு உள்பட பெரும்பாலான நாடுகள் ஜெர்மனியிடம் வீழ்ந்தன. முதலில் அமெரிக்கா இவர்களோடு சேராமல் விலகி இருந்தது. ஆனால், ஜப்பான் பசிபிக் பெருங்கடலில் முத்து துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ கப்பல்களை தாக்கி முழுவதுமாக அழித்தபோது, அமெரிக்காவும் உலகப்போரில் இறங்கியது.
தோல்வி முகத்தில் இருந்த நேச நாடுகள் மீண்டும் புத்துயிர் பெற்று வெற்றியை நோக்கி நகர தொடங்கின. 1945-ல் நேச நாடுகள் ஜெர்மனியை கைப்பற்றின. அதன் அதிபர் கொடுங்கோலன் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டவுடன் ஜெர்மனி வீழ்ந்தது. அச்சு நாடுகள் சரணடைந்தன. ஆனால், ஜப்பான் மட்டும் கடைசி வீரன் உள்ளவரை இறுதிவரை போராடி, தாய்நாட்டை காப்பாற்றுவோம் என்று தொடர்ந்து போரில் ஈடுபட்டது. ஜப்பானின் தற்கொலை படையினரின் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து பெருமளவில் கொல்லப்பட்டனர். இதனை எப்படி சமாளிப்பது, ஜப்பானை எவ்வாறு சரணடைய செய்து போரினை முடிவுக்கு கொண்டுவருவது என்று அமெரிக்கா திணறியது.
இதற்கிடையில் அமெரிக்காவில், சில விஞ்ஞானிகள் அரசின் உத்தரவின்படி ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு மான்ஹாட்டன் திட்டம் என்று பெயரிட்டிருந்தனர். 1945-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நியூ மெக்சிகோ மாநிலத்தில் அமைந்துள்ள பாலை நிலத்தில் உலகின் முதல் அணுகுண்டை அமெரிக்கா வெற்றிகரமாக வெடித்து சோதனை செய்தது. இந்த வெற்றி பெரும் பலத்தையும் நம்பிக்கையும் அளித்தது. ஜப்பானை வீழ்த்த பலவகையில் ஆலோசனைகள் நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரூமன் இறுதியில் அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தார்.
1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி, அமெரிக்காவின் பி59 விமானம் டினியன் விமான தளத்திலிருந்து அதிகாலையில் ‘சிறிய பையன்’ என்று பெயரிடப்பட்ட அணுகுண்டை தாங்கி ஹிரோஷிமா நகரத்தை நோக்கி புறப்பட்டது. சரியாக காலை 8 மணிக்கு உலகின் முதல் அணு குண்டை வீசியது.விமானத்தில் இருந்து வீசப்பட்ட 64 கிலோ எடையுள்ள ‘யுரேனியம் 235’ குண்டு தரையில் விழ 45 வினாடிகள் எடுத்துக்கொண்டது. விழுந்த அடுத்த நொடியே பெரும் நெருப்புக் கோளத்தை சுமார் 5 மைல் சுற்றளவிற்கு உருவாக்கி, ஹிரோஷிமாநகரின் 60 சதவீத பகுதிகள் கண் மூடிதிறப்பதற்குள் தரை மட்டமாயின.80 ஆயிரம் மக்கள் நொடிப்பொழுதில் கொல்லப்பட்டனர். ஒரு சில மாதங்களில் மேலும் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். கதிர்வீச்சின் காரணமாக பல மாதங்கள், தொடர்ந்து மக்கள் மாண்டது பரிதாபம்.
ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும் ஜப்பான் சரண் அடைய மறுத்தது.அணுகுண்டு தாக்குதலும், உயிர் இழப்பும் ஜப்பான் நாட்டு பேரரசர் மிச்சிநோமியா ஹிரோஹிட்டோவின் கல்மனத்தை கரைத்துவிடவில்லை. கடைசி ஜப்பானியன் இருக்கும்வரை நாட்டிற்காக போராடுவான் என்று கூறினார். இதனால், மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டினை ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது வீசியது. 50 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில், ஜப்பான் பணிந்து சரண் அடைந்தது . இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா பெருமழிவு ஏற்படுத்தும் போர் ஆயுதத்தைக் கொண்ட வலிமைமிக்க நாடாக மாறியது.
இதனால் தங்கள் நாட்டினை பாதுகாக்க பிரிட்டிஷ், சோவியத் ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா என பல நாடுகள் அணுஆயுதங்களை உருவாக்கிக் கொண்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட நவீன குண்டுகள் ஒவ்வொன்றும் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட குண்டுகளைவிட 3 ஆயிரம் மடங்கு அதிக சக்தி கொண்டவை. இன்னொரு உலக யுத்தம் ஏற்பட்டால், அதுவே கடைசி யுத்தமாக இருக்கும். காரணம் அதற்கு பிறகு ஒட்டுமொத்த உயிரினமே அழிந்துபோய் விடும். இதை நாடுகள் உணர்ந்து உள்ளன. பொறுப்போடு தான் நடந்துகொள்கின்றன. ஆனால், அச்சமெல்லாம், உலகில் பரவிவரும் பயங்கரவாதிகளிடம் அணுகுண்டு தயாரிக்கும் திறன் சென்றால் என்ன ஆகும் என்பதே. இதனை தவிர்க்க ஒரே வழி, அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்பதுதான். வைப்பார்களா என்பதுதான் நம்மிடையே உள்ள பெரும் கேள்வி.
ஹிரோஷிமா – நாகசாகி அழிவுகளையும், மரணங்களையும் பதிவு செய்த புகைப்படக்காரர்கள்!
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி இன்றோடு 74 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டாலும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் குறையவில்லை. வெள்ளைக் காளான்கள் போல் இருக்கும் இந்த இரு படங்களையும் சிறு குழந்தைகள் பார்த்த மாத்திரத்தில் சட்டென சொல்லிவிடுவார்கள் ஹிரோஷிமா – நாகசாகி என்று. லட்சக்கணக்கான மக்கள் உடல் பொசுங்கி பலியாவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அமெரிக்க உளவுத்துறையின் விமானப்படையால் எடுக்கப்பட்டதுதான் இந்த இரு படங்கள்.
1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவிலும் அதைத் தொடர்ந்து 9ஆம் தேதி நாகசாகியிலும் போடப்பட்டன. லிட்டில் பாய் (Little Boy) என்று பெயர் வைக்கப்பட்ட யுரேனியம் அணுகுண்டு (A uranium gun-type atomic bomb) ஹிரோஷிமாவிலும், புளூட்டோனியம் (plutonium) அணுகுண்டை நாகாசாகியிலும் பயன்படுத்தப்பட்டது. இரும்பையே உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வீசப்பட்ட இந்த இரண்டு குண்டுகளும் சுமார் 8 கிலோ மீட்டர் அளவிற்கு பாதிப்பை அப்போது ஏற்படுத்தியது. இதன் விளைவாக இரண்டிலிருந்து நான்கு மாதங்களுக்குள் ஒன்றரை லட்சம் பேர் ஹிரோஷிமாலும், எண்பதாயிரம் பேர் நாகசாகியில் இறந்ததாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்போதே உடல் பொசுங்கி இறந்துவிட்டதாக தகவல்கள் பதிவாகியிருக்கிறது. மற்றவர்கள் மோசமான தீக்காயங்கள், கதிர்வீச்சி, உணவு பற்றாக்குறை காரணமாக இறந்தனர். இதுபோக மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. இந்தக் கோரமான சம்பவத்தை அணுகுண்டு வீச்சின் சூடு குறைவதற்குள்ளாகவே அப்போது ஏற்பட்ட அழிவுகளையும், மரணங்களையும் உடனே பதிவு செய்தவர்கள் யோஷிட்டோ மட்சுஷிக் (Yoshito Matsushige), யோசுக்கே யமஹாட்டா (Yosuke Yamahata) என்ற இரண்டு புகைப்படக்காரர்கள் மட்டுமே. காலத்தை வென்று நிற்கும் அந்த புகைப்படங்களைப் பற்றியும், உயிரையும் பொருட்படுத்தாமல் அதனைப் புகைப்படங்களாக பதிவு செய்த இவர்களை பற்றியும் பார்ப்போம்.
ஹிரோஷிமா:
யோஷிட்டோ மட்சுஷிக் (Yoshito Matsushige) என்ற இவர் சுகோகு ஷிம்புன் (Chugoku Shimbun) என்ற ஜப்பான் பத்திரிகையில் புகைப்படப் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 1945, 6ஆம் தேதி ஹிரோஷிமா மீது அமெரிக்க இராணுவம் அணுகுண்டை வீசிய இடத்திலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில்தான் இவர் வீடும் இருந்ததால் அந்த குண்டு வீச்சால் இவரும் படுகாயமடைந்தார். தன் உடல் முழுவதும் ரத்தம் வடிந்த நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கொடூர அழிவின் சாட்சியாக நின்று அவைகளை தனது கேமராவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். கேமராவின் கிளிக் பட்டனைக் கூட அழுத்த முடியாததால் வெறும் ஐந்து படங்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அந்த பிலிம் ரோல்களை உடனே டெவலப் செய்ய முடியவில்லை. காரணம் அனைத்துக் கட்டடங்களும் இடிந்துவிட்டதால் இருட்டறை (Dark room) வசதி இல்லாமல் போனது. அதன்பின் இருபது நாட்களுக்குப் பிறகு ஒரு இரவு நேரத்தில் நதியோரம் அமர்ந்து அந்த பிலிம் ரோல்களை டெவலப் செய்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். பெரியவர்களும் குழந்தைகளுமாக உடையும் சதையும் பிய்ந்து தொங்கிய நிலையில், என்ன நடந்தது என்றே தெரியாமல் அமர்ந்திருப்பதையும், நொடிப்பொழுதில் தரைமட்டமாகிப் போன நகரம் என இந்தப் படத்தைப் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்து விடும்.
பத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டியில், “நான் காலை நேர உணவு அருந்திவிட்டு வேலைக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது எந்தவித ஓசையும் இல்லாமல் ஃப்ளாஷ் போன்ற ஒரு வெளிச்சம் வந்தது. வெளியே வந்து அந்த வெளிச்சத்தை பார்த்தபோது எனக்கு கண் தெரியவில்லையோ என்று பயந்துவிட்டேன். அப்போது ஆயிரக்கணக்கான ஊசிகள் ஒட்டுமொத்தமாக உடலில் குத்தியது போன்ற வலியை உணர்ந்தேன். அப்போது என் வீடும் முழுமையாக இடிந்து விழுந்தது. உடனே இராணுவத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட உடைய அணிந்து கொண்டு சற்று தூரம் சென்று பார்த்தபோது அந்தப் பகுதி முழுவதும் வெறும் கூக்குரல்களும் இடிபாடுகளுமாகக் காட்சியளித்தது. முதலில் அலுவலகம் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் மியூக்கி பாலம் (Miyuki bridge) அருகே இருந்த போலீஸ் அறை அருகே குண்டுனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவருமே பிய்ந்து தொங்கும் சதைகளோடு அங்கே நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அப்போது கேமராவினை தூக்கி படம் எடுக்க முயன்றேன். ஆனால் வியூ ஃபைண்டரில் முழுவதும் எனது கண்ணீரால் நிரம்பியதால் ஒன்றுமே தெரியவில்லை என்ற போதிலும் படம் எடுத்தேன். அப்போது அந்த மக்கள் என்னை கேவலமாகத்தான் நினைத்தார்கள். இருந்தாலும் என்னுடைய கடமையை செய்ய நான் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். இந்த அதிர்வில் தட்டுத்தடுமாறி பொறுமையாக வந்து கொண்டிருந்த ஒரு காரினுள் எட்டிப் பார்த்தபோது அதில் பயனித்த 15 பேரும் பிணங்களாக இருந்தார்கள். எங்கள் அலுவலகம் பிரசுரிக்காது என்பதால் பெரும்பாலும் பிணங்களையும் நிர்வாணங்களையும் நான் படம் எடுக்கவில்லை” என தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கே இராணுவப் போட்டோகிராபர்கள் இருந்தாலும் மிகவும் கொடூரமாக இருந்ததால் இந்த சம்பவத்தை யாரும் போட்டோ எடுக்கவில்லை. சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இறந்த துயர சம்பவத்தை இந்த சம்பவத்தை உடனே பதிவு செய்தவர் இவர் மட்டுமே.
நாகசாகி:
யோசுக்கே யமஹாட்டா (Yōsuke Yamahata) என்ற இவர் சிங்கப்பூரில் பிறந்தவர். இவரின் அப்பாவும் சிங்கப்பூரில் பெரிய போட்டோகிராபர் என்பதால் 1925ல் டோக்கியோவில் படிக்க வந்த இவர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தார். சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இராணுவ போட்டோகிராபராக பணியாற்றியிருக்கிறார். நாகசாகியில் குண்டு வீசப்பட்ட மறுநாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று அதன் பாதிப்புகளையும் அதில் பாதிக்கப்பட்ட மக்களையும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி மைனிச்சி ஷின்புன் (Mainichi Shinbun) என்ற ஜப்பானிய பத்திரிகையில் இவரது படங்கள் வெளி வந்தது. அப்போதுதான் ஜப்பானுக்கே இந்தக் கொடூரத் தாக்குதலின் முழு வீரியமும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் உடனே நேச நாட்டுப் படைகளின் தலைமை இந்தப் படங்களை மேற்கொண்டு வெளியிட தடை விதிக்க, அந்தத் தடை 1952 வரை நீடித்தது. அதன்பிறகு சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு லைஃப் (Life) என்ற பத்திரிகையில் மீண்டும் இந்தப் படங்கள் வெளிவந்த பிறகுதான் உலக நாடுகளுக்கு கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றி முழுமையான அளவில் தெரிய வந்தது.
அப்போது ஒரு பத்திரிகைக்கு யோசுக்கே யமஹாட்டா அளித்த பேட்டியில், “மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக் கூடியது. அதேபோல அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும் காலத்திற்கு தகுந்தது போல மாறிக்கொண்டே வரும். ஆனால் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண் முன்னே நிறுத்தும். இப்போது நாம் ஹீரோஷிமா, நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடுகள் இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலமாக அந்தக் கொடூரங்களையும் கோரங்களையும் பார்க்கமுடியும்” என்று கூறியிருக்கிறார்.
கதிர் வீச்சு காரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட யோசுக்கே யமஹாட்டா 1965ல் தனது 48வது வயதில் இறந்துவிடுகிறார். முகம் முழுவதும் இரத்தக் காயங்களுடன் தன் தாயிடம் பால் குடிக்கும் குழந்தை, முகத்தில் காயங்களுடன் கையில் உணவுப் பண்டத்துடன் வெறித்துப் பார்க்கும் சிறுமி, தரை மட்டமான கோயில் என ஒவ்வொரு படத்திலும் நாகசாகியின் அழிவை நம் கண் முன்னே நிறுத்துகிறது.
உலக வரலாற்றில் போர்கள் பல நடைபெற்றிருந்தாலும் இரண்டாவது உலகப்போர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் வழக்கமான போர்கள் என்பது இரு தனி நாடுகளுக்குள் ஏற்படுவது. ஆனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சுநாடுகள் (ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி) – நேச நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, சீனா) என இரு அணிகளாக பிரிந்து போரில் ஈடுபட்டது இரண்டாம் உலகப் போரில்தான். 1939ல் ஆரம்பித்த உலகப் போர் 1945ல் ஜப்பான் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது. இதுவரை உலக வரலாற்றில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்களில் இதுவே மோசமானது என்கிறது ஆய்வறிக்கைகள். அணுகுண்டுகள் ஏற்படுத்தும் பேராபத்துகளையும் அதனால் ஏற்படும் அழிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் இந்தப் படங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும் அடுத்து ஓர் அசம்பாவிதம் ஏற்படாதவரை.
-விகடன்