இப்போது பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடல் பருமன், அஜீரணம், அசிடிட்டி ஆகியவற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், முதியவர்கள், வாலிபர்கள் என்று வித்தியாசம் ஏதுமின்றி பலருக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. என்ன காரணம்? ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் – உண்ணும் உணவும் அந்த உணவு தயாரிப்பில் சேர்க்கப்படும் சேர்மானங்களும்தான்.
மனிதன் இயற்கையில் ஊன் உண்ணியா? தாவர உண்ணியா? இதில் சந்தேகமே வேண்டாம். ஆதி முதலே மனிதன் தாவர உண்ணிதான். காட்டில் வாழ்ந்த ஆதி மனிதன் காய்கள், பழங்கள், கிழங்குகள், இலை, தழை ஆகியவற்றைத்தான் உண்டு வாழ்ந்தான். காட்டுத்தீயில் அனைத்தும் எரிந்து கருகியபோது தப்பிப்பிழைத்த மனிதன் உண்ண ஏதும் இன்றி நெருப்பில் கருகிய மிருகங்கள், பறவைகளின் மாமிசத்தைப் புசிக்க ஆரம்பித்தான். பின்னர் இதுவே பழக்கமானது, இது மனிதனின் இயல்பன்று.
இதை எளிமையாக அடையாளம் காண, மனிதனின் பற்கள் அமைப்பையும் பிராணிகள் மற்றும் விலங்குகளின் பற்கள் அமைப்பையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மனிதனின் பற்கள் அமைப்பு மாடு, ஆடு, மான், எருமை, குதிரை, கழுதை, முயல் போன்ற தாவர உண்ணிகளின் பற்கள் அமைப்பை ஒத்திருக்கும். ஊன் உண்ணிகளான சிங்கம், சிறுத்தை, புலி, கரடி, ஓநாய், நாய், நரி, பூனை இவற்றின் பற்களின் அமைப்பு மாமிசத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கோரைப்பற்களுடன் இருக்கும். இவற்றின் நகங்களும் அப்படிப்பட்டவையே.
மனிதனுக்கு வாய்க்குழியில் தொடங்கி மலப்புழையில் முடியும் இருபத்து நான்கடி ஜீரண மண்டலமும் அவற்றுடன் தொடர்புடைய பல்வேறு சுரப்பிகளும் ஜீரண நொதிகளும் தாவர உண்ணிகளின் அமைப்பையே ஒத்திருக்கின்றன. ஆக, மாமிச உணவானது மனித இயல்புக்கு மாறானது; இயல்புக்கு மாறான எதுவும் சிக்கல்தான்.
அப்படியானால் சத்து நிறைந்த உணவு எது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் பலரும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மாமிச உணவில்தான் போதிய சத்துகள் இருக்கின்றன என்பது அறியாமை. உடல் வளர்ச்சிக்கான புரதம், கார்போஹைடிரேட், வளர்சிதை மாற்றங்களுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் அனைத்துமே தாவர உணவில்தான் நிறைவாகக் கிடைக்கின்றன. உடல் நலனுக்கேற்ற கொழுப்பு அமிலம் தாவர எண்ணெயில்தான் உள்ளது. மாமிசக் கொழுப்பில் உள்ள அமிலம் கொலாஸ்டிராலாக ரத்தத்தில் தேங்குகிறது. பத்து நிமிஷங்கள் சூரிய ஒளி உடம்பில் பட்டாலே நாம் பெறும் வைட்டமின் “டி’யைப் பெற, ஒரு ஆட்டைக் கொன்று அதன் கல்லீரலை எடுத்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எது இயல்பானது, எது எளிமையானது?
தாவர உணவைவிட, பலமான மாமிச உணவை ஜீரணிக்க நான்கு மடங்கு சக்தியை நம் உடல் செலவிட வேண்டியுள்ளது. ஜீரணத்துக்கான காலமும் பல மணி நேரம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. முன்னர் குறிப்பிட்ட பல உடல் உபாதைகளும் உடன் பரிசாகக் கிடைக்கின்றன!
பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் இறைச்சி, மீன் மற்றும் அவற்றைச் சமைப்பதற்கான எண்ணெய், மசாலா பொருள்களுக்காகும் செலவு அதிகம்தான். ஒரு வேளை மாமிச உணவுக்கு ஆகும் செலவில் ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்க முடியும்.
தாவர உணவைப் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். மாமிச உணவின் மூலம் “அஸ்காரிஸ்’ என்ற வயிற்றுப்புழு மனிதனுக்குப் பரவுகிறது. நோய் தீர்க்கும் மருந்து தாவர உணவே.
கொல்லப்படும் உயிரினங்கள் அப்படியே மரக்கட்டைபோல் மாண்டுபோவதில்லை. கடைசி நிமிஷம்வரை பலம்கொண்ட மட்டும் துடித்து உயிருக்காகப் போராடித்தான் இறக்கின்றன. அப்போது அவற்றின் உடலில் சுரக்கும் ரசாயனம் ரத்தத்தில் ஓடி, ஒவ்வொரு செல்லிலும் பாய்கிறது. அந்த மாமிசத்தை நாம் சமைத்து உண்ணும்போது அதுவும் நம் உடலில் சேருகிறது.
தாவர உணவு சத்வ குணத்தைத் தருகிறது. மாமிச உணவு தமோ, ரஜஸ் குணங்களைத் தருகிறது. உணவுக்காக உயிரைக் கொல்லக் கூடாது, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.
தாவர உணவை உண்டுதான் பசு, மாடு, யானை போன்றவை உடல் பலத்தோடு திகழ்கின்றன. சத்து நிறைந்த, விலை மலிவான, செரிப்பதற்கு எளிதான, வியாதிகளுக்கு மருந்தான, சாந்த குணத்தை அளிக்கக்கூடிய சைவ உணவுக்கு மாறுவதற்குத் தயக்கம் ஏன்?
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள்-260) என்பதை மறக்கலாமா?
-தினமணி
ஏப்ரல் 29, 2013