Site icon சக்கரம்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட சிக்கலை உண்டாக்கிய மனு நிராகரிப்பு

கோட்டாபய ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இதனை பிபிசி தமிழுக்கு உறுதி செய்தார்.

இதனால், கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகிறது.

காமினி வியங்கொட மற்றும் கலாநிதி சந்திரகுப்த தேநுவர ஆகியோரினால் இந்த மனு கடந்த 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான ஆய்வுகள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரினால் கடந்த 30ஆம் தேதி முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி, இந்த மனுவை கடந்த 2ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆராய்வதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமொன்று, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியினால் நியமிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் போலீஸ் மாஅதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரும் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட விடயங்களை அடுத்து, அவருக்கு இலங்கை கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கை குடிமகன் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவித உரிய ஆவணங்களும் கிடையாது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமையை கைவிடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆகியன அவருக்கான கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியவற்றை விநியோகித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தமைக்கான உரிய ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இலங்கை கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியன விநியோகிக்கப்பட்டது, சட்டவிரோதம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு, கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தவிர்ப்பதுடன், அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியவற்றை இடைநிறுத்தும் வகையில் இடைகால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

வழக்கு விசாரணை

இந்த வழக்கு மீதான விசாரணைகள் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த 2ஆம் தேதி முதல் நடத்தப்பட்டிருந்தன.

வழக்கின் பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கிடையாது என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நெரின் புள்ளே தெரிவித்துள்ளார்.

ஆவணங்கள் இன்றி இந்த வழக்கை முன்னோக்கி கொண்டு செல்வதன் ஊடாக தனது தரப்பினருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நீதவான் நீதிமன்றமொன்றில் தற்போது நடைபெறுகின்ற வழக்கு விசாரணை நிறைவடையாத தருணத்தில், இவ்வாறான வழக்கொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றம் நடத்தி செல்வது சர்ச்சைக்குரிய விடயம் எனவும் ரொமேஷ் டி சில்வா கூறியுள்ளார்.

நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்கு விசாரணைகளின் ஊடாக கோட்டாபய விடுதலை செய்யப்படுவாராக இருந்தால், இவ்வாறான வழக்கொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடத்துவது சரியானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்ப்பை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த விடயங்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல அதிகாரம் கிடையாது எனவும், இந்த மனுவை நிராகரிக்குமாறும் ரொமேஷ் டி சில்வா கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், மனுதாரர்களுக்கு விடயங்களை தெளிவூட்ட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோட்டாபயவிற்கு விநியோகிக்கப்பட்டுள்ள குடியுரிமை சட்டவிரோதமானது என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் சுரேன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

குடியுரிமை சட்டத்தின் 19ஆவது சரத்தின் பிரகாரம், இரட்டை குடியுரிமை விநியோகிப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு மாத்திரமே அதிகாரம் உள்ளதாக சுரேன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

எனினும், கோட்டாபயவிற்கான குடியுரிமை ஆவணத்தை, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் வெளியிடவில்லை என கூறிய சட்டத்தரணி, அதனை அப்பேதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே விநியோகித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விநியோகிக்கப்பட்டுள்ள குடியுரிமை ஆவணமானது, சட்டத்திற்கு முன் செல்லுபடியாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தின் பின்னர் அரசாங்கம் சார்பில் நெரின் புள்ளே விடயங்களை தெளிவூட்டியிருந்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் காணப்படுவதாகவும், அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படாத தருணத்தில் அந்த அதிகாரங்கள் ஜனாதிபதி வசமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவு செய்யப்படாத பட்சத்தில், அதற்கான பொறுப்பு அனைத்தும் ஜனாதிபதி வசம் காணப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி வெள்ளிகிழமை இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த முதல் தடவையாக தெரிவு செய்யப்படுகின்றார்.

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறை தினம் என்பதுடன், 21ஆம் தேதி கோட்டாபயவிற்கான இரட்டை குடியுரிமை தொடர்பான ஆவணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இந்த காலப் பகுதியில் புதிதாக தெரிவான அரசாங்கத்தின் அமைச்சரவை நியமிக்கப்படாத பின்னணியில், எவ்வாறு குடியுரிமை ஆவணம் விநியோகிக்கப்பட்டது என்ற கேள்வி மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வினவப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பிபிசி தமிழ்
2019.10.04

Exit mobile version