Site icon சக்கரம்

‘யுத்தம் வென்ற நாளே சிறந்த நாள்’

கமல்

நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் எவரும் யுத்தத்தை விரும்பாவில்லை எனவும் யுத்தங்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டவை என்பதாலுமே தான் யுத்தம் முடிவுற்ற நாள் சிறந்த நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வானொலிச் சேவை ஒன்றுக்கு இது குறித்து அவர்  சற்று முன்னர் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் வாழும் அப்பாவி மக்கள் மூன்று வேளை உணவு உண்டு நிம்மதியாக வாழ வேண்டும் எனவே விரும்புகிறார்கள் என்றும்,  மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்கப்பட்டால் 90 வீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதற்கு நிகரானது என்றும் தெரிவித்தார்.

அரசியல் பற்றி தான் அறியாததால் அதனைப்ப பற்றி பேசவில்லை என்றும், அதேபோல், அரசமைப்பில் சகலரினதும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியதே அவசியம் எனவும் தெரிவித்தார். 

குறிப்பாக, யுத்தங்கள் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தபட்டவை என்றும் , 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் அப்பாவி மக்களும் யுத்தத்தை ஒருபோதும்  விரும்பவில்லை எனவும், அதனாலேயே தான் யுத்தம் நிறைவடைந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

அத்தோடு யுத்த காலத்தில் நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, யுத்தம் நிறைவடைந்த பின்பு நாட்டில் இரத்த ஆறு ஓடுவதும் தடைப்பட்டதென தெரிவித்த அவர், மீண்டும் இரத்த ஆறு ஓட வேண்டும் என்ற நிலைப்பாடு இல்லாத காரணத்தாலேயே மேற்குறித்த நிலைப்பாட்டை தான் வகிப்பதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், தான் மலையகத்தில் அரசியல் பிரசாரம் செய்யப்போவதாக வதந்திகள் பரப்பபடுவதாகவும் , மக்களுக்கு சேவை செய்யாத அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் கண்டு அஞ்சுவது போல தன்னையும் கண்டு சில அரசியல் வாதிகள் அச்சப்படுகின்றனர் என்று சாடினார்.

அ​தேபோல், தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் திருப்தி அடையும் வகையிலான சேவைகளை செய்திருக்கும் பட்சத்தில் அவர்களை தக்கவைத்து  கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்திருக்காவிட்டால் இந்த ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு முதற்காரணியாக பார்க்கப்பட வேண்டும் எனவும், அதனுடன் பிணைந்த சங்கிலிகளாவே பொருளாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

-தமிழ்மிரர்
2019/10/2019

Exit mobile version