Site icon சக்கரம்

33 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் அவர்களின் நினைவுதினம் இன்று

Image may contain: 1 person, text

விஜிதரன் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் விமலேஸ்வரன் ஆற்றிய உரை

விமலேஸ்வரன்

இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள் நடாத்துவதும் அல்ல விமலேஸ்வரன்

எமதருமை அன்பு மாணவன் விஜிதரனை இழந்த நிலையில் இங்கு நாங்கள் கூடியிருக்கின்றோம். விஜிதரனின் பெற்றோர்களுக்கும் எனதருமை மக்களிற்கும் என் அன்பான சக மாணவத் தோழர்கட்கும் பாசமிக்க விரிவுரையாளர்கட்கும் எமது மாணவர்களின் சார்பாக அதாவது இந்தப் போராட்டத்தினை தொடங்கியிருக்கும் மாணவர்கள் சார்பாக எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நாங்கள் இன்று கூடியிருப்பது ஒரு வேதனையூட்டுகின்ற, போராடும் மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கின்ற அனைத்து சக்திகளிற்கும் தலைகுனிவை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சியை எதிர்த்து எமது சொந்த தார்மீகப் பலத்தில் நம்பிக்கை வைத்து மாணவர்களாகிய நாம் நடாத்தும் போராட்டத்தில் ஒர் முக்கியமான கட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் இப்போது நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் எத்தனையோ நாட்கள் சிரித்தமுகத்துடன் எம்மோடு பேசி சிரித்து விளையாடிய தேசத்திற்காகவும் மக்களிற்காகவும் ஒவ்வொரு கணமும் தன் மொழிஆற்றலையும் செலவுசெய்து போராடத் தயாராகவிருந்த எமதருமை நண்பன் விஜிதரன் இன்று நம்மடையே இல்லை.

கடந்த காலங்களில் சிறிலங்கா இனவெறிஅரசின் பாசிசக்கரங்களால் கொன்று குவிக்கப்பட்ட எமது அன்புக்குரிய மாணவர்கள் பலரை நாம் இழந்திருக்கிறோம். தேசத்தின் விடுதலைக்காக மக்களின் சுதந்திரத்திற்காக தம் இன்னுயிரை ஈந்த பல நண்பர்களையும் நாம் இழந்திருக்கின்றோம்.

ஆயுதம் ஏந்திய போர்க்களத்தில் குதிப்பதற்காகவும் மற்றும் பல்வேறு அரசியல் பணிகளிற்காகவும் எம்மைவிட்டுப் பிரிந்துபோன பல நண்பர்களையும் நாம் அறிவோம். அப்போதெல்லாம் பிரிவுத்துயர் எம்மை வாட்டும். ஆயினும் எமது நண்பர்களையிட்டு பெருமிதத்துடனும் ஆத்ம சந்தோசத்துடனும் அதை நாம் அனுபவித்ததுண்டு. இன்னும் எத்தனையோ நண்பர்களை எமது தாய்ப் பூமியின் விடுதலைக்காக நாம் இழக்கவும் தயாராகவுள்ளோம். ஆனால் எனதருமை மக்களே என் அன்பு சகமாணவர்களே நாம் விஜிதரனை ஏன் இழந்தோம் போராடபோர்க்களத்தில் எதிரியுடன் துப்பாக்கிச்சமர் புரிய எம்மைவிட்டுப்போனானா? இல்லை. எதிரியின் இயந்திர துப்பாக்கிகளிற்கோ செல் தாக்குதல்களிற்கோ பலியாகினானா? இல்லை. அப்படியானால் எமது நண்பன் விஜிதரனுக்கு என்ன நடந்தது?

எந்த மண்ணின் விடுதலைக்காக எந்தமக்களின் சுதந்திரத்திற்காக இங்கு போராடத்துடங்கினோமோ அந்த மக்களிற்கு ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது அவர்களது அரசியல் உரிமைகள் கொச்சைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகின்றன. கடந்தகால அடிமைத்தளையிலிருந்து மீளத்துடித்த எம் மக்களது வாய்களிலும் கரங்களிலும் பெரியவிலங்குகள் போடப்படுகின்றன. இது தவறு. இது நியாயமல்ல. இது நிறுத்தப்படவேண்டும் என்று குரல்கொடுக்கின்றோம் நாங்கள்.

எமக்கு விடுதலை வேண்டும். எமது மக்களிற்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அந்த விடுதலையும் சுதந்திரமும் எமக்குள்ளேயே அதிகாரத்தையும் அடக்குமுறையையும் செயல்படுத்திக்கொண்டே அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டே விடுதலை அடைவது சாத்தியமில்லையென்று குரல்கொடுக்கின்றோம்.

நாம் எமது மக்களின் விடுதலையை எதிர்க்கவில்லை அவர்களின் போராட்டத்திற்கு துரோகம் நினைக்கவில்லை. மாறாக சரிநேர் சரியான பாதையில் வெற்றியை நோக்கி வீறுநடைபோடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனால் தான் பிழையான போக்குகளை எதிர்க்கின்றோம். தவறான நடவடிக்கைகளை தட்டிக் கேட்கின்றோம். தேசத்தையும் மக்களையும் அவர்களது விடுதலையையும் சுதந்திரத்தையும் மனதார நேசிக்கும் நாங்கள் அதற்காகவே அதன் குந்தகமாக அமையக் கூடிய அனைத்து அராஜகங்களையும் எதிர்த்து போராடத் துணிந்துவிட்டோம்.

இதற்கு எமக்கு கிடைத்த பரிசு என்ன? நண்பன் விஜிதரன் கடத்தப்பட்டான். உண்மைக்காக நின்றவன், நியாயத்திற்காக குரல்கொடுத்தவன் ஜனநாயகத்தை எதிர்பார்த்தவன் எமது நண்பன். அதற்காக அதற்குப் பரிசாக அவன் கடத்தப்பட்டான். கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள் என்ற உண்மையைக் கூடச் சொல்லத் தைரியமற்ற கோழைகள் யாரோ அவனை கடத்திச்சென்றனர். தேசத்தின் விடுதலைப்போராட்டம் வளர்ந்த மண்ணில் எதிரிகளிடமிருந்து நமது கைகளில் கட்டுப்பாட்டை நாம் எடுத்துக் கொண்டுவிட்ட மண்ணில் ஓரு ஜனநாயகவாதி ஒரு தேசபத்தி நிறைந்த மாணவன் காரணம் எதுவுமின்றி கடத்தப்பட்டான்.

விஜிதரன் என்று எமது நண்பன் ஒருவனது பிரச்சனையல்ல. இது எமது மாணவர்கள் அனைவரினதும் பிரச்சனை. இது எமது மக்கள் அனைவரினதும் பிரச்சனை. விஜிதரன் ஓரு பல்கலைக்கழக மாணவன் ஆகையால் அவன் கடத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்தது. அராஜகத்திற்கெதிராக போர்க்குரல் கிளம்பியது.ஆனால் இது வேறு யாராவது ஓர் வெளியாராக இருந்தால், கேட்க நாதியற்று அராஜகத்திற்குப் பலியாகிப்போயிருக்க வேண்டியதுதான். எமது விடுதலைப் போராட்டத்திலே அப்படி அராஜகத்திற்குப் பலியானவர்கள் எத்தனைபேர்? புதைகுளிகட்குள் மூடப்பட்டவர்கள் எத்தனை பேர்? கண் காணாத இடத்தில் வைத்து கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்?தெருவோரங்களிலும் வயல்வெளிகளிலும் மயானங்களிலும் கொன்று குவிக்கப்பட்வர்கள் எத்தனைபேர்?

யாருமே கேட்க நாதியற்றவர்களாக ஓரு அற்ப விலங்கை விடக் கேவலமான நிலையில் அராஜகத்திற்குப் பலியாகிப்போனார்கள். இது இன்னும் எத்தனை காலம் தொடர்வது. இப்படியே இதை விட்டுவைப்பதா? அராஜகத்தின் கரங்கள் நம் ஒவ்வொருவரதும் குரல்வளையை நெரிக்கும் வரையும் நாம் பேசாது இருக்கப் போகின்றோமா? எப்போது ஜனநாயகத்திற்காக குரல்கொடுத்த ஒருவன் கடத்தப்பட்டானோ? எப்போது மக்களை நேசித்த மக்களின் விடுதலையை நேசித்த விஜிதரன் கடத்தப்பட்டானோ? அப்போது இது முழுத் தமிழீழ விடுதலையின்- மக்களின் பிரச்சனையாகி விட்டது.

மக்களது ஜனநாயக உரிமைகட்கு சவால் விடப்பட்டுள்ளது. மக்களது புரட்சிகர உணர்வுகளுக்கும் போர்க்குணாம்சத்திற்கும் சவால்விடப்பட்டிருக்கின்றது. தேசத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் மிரட்டல் விடப்பட்டிருக்கின்றது. அதனால் தான் நாம் இதை எதிர்த்துப் போராடப்புறப்பட்டோம். விஜிதரனே அராஜகத்தினால் பழிவாங்கப்பட்ட கடைசி மனிதனாக இருக்க வேண்டும். அதாவது இந்த மாணவன் கடத்தப்பட்ட இந்த அத்துமீறல் சம்பவம், விஜிதரன் கடத்தப்பட்டதென்ற இந்த விடயம் இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக எங்கள் போராட்டம் அமையவேண்டும்.

எமது நண்பன் விடுவிக்கப்படுவான். அராஜகம் அழிக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும். எமது நண்பன் கடத்தப்பட்ட அநியாயத்தை எதிர்த்து, அவன் பழிவாங்கப்படுகின்ற ஈனத்தனத்தை எதிர்த்து, கடத்தியவர்களின் அரசியல் பேடித்தனத்தை எதிர்த்து, நாம் எமது போராட்டத்தை தொடர்வோம். இதற்கு இறுதி முடிவு வேண்டும். அது கிடைக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதென்றே நாம் முடிவுகட்டியுள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் இறந்து போகலாம் ஆனால் எமது போராட்டம் இறக்கப்போவதில்லை. எமது உறுதியான போர்க்குரலின் முன்னால் எமது இலட்சியத்தின் தார்மீக ஆவேசத்தின் முன்னால் இந்த அராஜகம் தோற்றுவிடும். அது நிட்சயமான உண்மை.

அன்பான மக்களே எனதருமை மாணவ நண்பர்களே மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறார்கள் சிலர். படிக்கவந்தால் படிச்சிட்டுப்போறதற்கு ஏன் இந்த தேவையில்லாதவேலை என்கிறார்கள் இன்னும் சிலர். ஆனால் துப்பாக்கிக் குண்டுகளாலும் மோட்டார் செல்களாலும் பிளந்துகிடக்கும் எமது பூமியில் யுத்த பீதியும் மரண ஓலமும் நிறைந்த தெருக்களில் மாணவர்களை அரசியலில் ஈடுபடாதே என்று சொல்லுவது எப்படி நியாயமாகும். பாடசாலைகள் இன்று இராணுவ முகாமாக்கப்பட்டு மாணவர்கள் கொல்லப்படுகின்ற சூழ்நிலையில் படி படியென்றால் படிக்கவா முடியும்?

தேசமும் மக்களும் விடுதலை இழந்து தவித்துக்கொண்டிருக்கையில் பிரித்தானிய ஆட்சிக்கால மகிமையும், சங்க இலக்கியத்தின் கவிநயத்தையும் மட்டுமே படித்துக்கொண்டு எப்படி வாழமுடியும்? மாணவர் இந்த மக்களிடமிருந்து வரவில்லையா? அவர்கள் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கமில்லையா? அப்படியானால் அவன் மட்டும் அரசியலில் ஈடுபடாமல்எப்படி இருக்கமுடியும்? அரசியலில் ஈடுபடாதே என்பதுவும், ஈடுபடாமல் இருப்பதுவும் கூட அரசியல்தான் என்றாகிவிட்ட காலம் இது.

ஆம் அது அடக்குமுறையாளர்கட்கும், அதிகார வெறியர்கட்கும் வாய்ப்புக் கொடுக்கின்ற அரசியலாகும். அநியாயத்தை எதிர்க்காமல் இருப்பதற்கும் ஆதரிப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுமே ஒன்றுதான். எப்போது அநியாயத்தை எதிர்க்கத் ,தவறுகின்றோமோ அப்போதே நாம் அதற்குத் துணைபோகின்றோம் என்பதுதான் உண்மை. எரிகின்றவீட்டில் பார்வையாளன் எப்படிப்பட்டவனாக இருப்பான். எரிப்பவனுக்கும் அவனுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? நிட்சயமாக இல்லை. நடுநிலமையென்று ஒன்றுகிடையாது.

தமது கருத்தைச் சொல்ல எழுத அதற்காகப் போராட உள்ள உரிமை ஒவ்வொரு மாணவனுக்கும் உண்டு. எங்கள் விஜிதரனுக்கு அதுவும் சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு தேசத்தின் பிரசையான விஜிதரனுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறதென்றால், உண்மையில் எமது போராட்டம் எமது விடுதலைப்போராட்டம் எங்கே செல்கின்றது? மாணவர்கள் தமக்கு அரசியல் உரிமை உண்டு என்பதையும், தேசத்திற்காகப் போராடுவது தமது கடமையென்பதையும் மறந்துவிடக் கூடாது. மாணவர்கள் போராட வேண்டியவர்கள். தேசவிடுதலையில் பங்காற்றவேண்டியவர்கள். ஆனால் அவர்கள் தனித்து நின்று தேசத்தின் விடுதலையை வென்றுவிடமுடியாது. மாணவர்கள் மக்களை சார்ந்து நிற்க வேண்டும். அவர்களது உரிமைகட்காக போரில் அவர்களுக்காக நின்று பங்கு கொள்ள வேண்டும். போராடுவதிலும், போராடும் சக்திகளை உருவாக்குவதிலும், மக்களிற்கு மாணவர்கள் உதவவேண்டும். மக்களோடு இரண்டறக் கலந்து நின்று போராடவேண்டும். அப்போதுதான் மாணவர்கள் சக்திக்கு ஒருபலம் கிடைக்கும். மக்களின் விடுதலைக்கு ஒரு வழிபிறக்கும்.

எமதருமை மாணவ நண்பர்களே! அன்பு மக்களே!

எமது இந்தப் போராட்டம் இத்துடன் நிறுத்தப்படக் கூடாது. ஒரு பல்கலைக்கழக மாணவனுக்காக மட்டுமல்ல தேசத்தின் அனைத்து ஜனநாயக ஒடுக்குமுறைகட்கு எதிராகவும் மாணவர்களாகிய நாம் போராடியே ஆகவேண்டும். தேசத்தில் ஜனநாயகம் நிலவவும், தேசத்தில் சமாதானம் நிலவவும், மக்களிற்கு அரசியல் உரிமைகள் கிடைக்கவும் நாம் போராடவேண்டும். இந்த தேசத்தின் விடுதலைக்காக மக்கள் நடாத்தும் போராட்டத்தில் நாமும் ஜக்கியப்பட்டுக் கலந்து கொள்ள வேண்டும்.மக்களது ஜனநாயகம் மதிக்கப்படும் அதிகாரம் உருவாக்கப்படுவதற்காக நாமும் தொடர்ந்து உழைக்கவேண்டும். தேசத்தின் விடுதலைக்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைக்காகவும் தொடந்து நாம் போராடவேண்டும். எம்மை ஒரு ஸ்தாபனப்படுத்திக்கொள்ள வேண்டும். எதிரிகளாக இருப்பதைவிட பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் நாம் எம்மை ஜக்கியப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஜக்கியப்பட்ட மாணவர் சக்தியின் பலம் மற்றவர்கட்குத் தெரியும்.

எந்த மலையையும் வெல்லும் மிடுக்குடன் நாம் எமது இலட்சிய நோக்கங்களை நிறைவேற்ற, மக்களின் நலனுக்காக உறுதியாகப் போரிடமுடியும். நண்பர்களே ! இந்தப் போராட்டத்தில் நாம் இறந்துபோகலாம். அப்படி நடந்தால் நீங்கள் மனம் தளர வேண்டாம். தொடருங்கள். அராஜகம் அதிகாரத்திற்கு வந்து மக்களை அழித்தொழிப்பதைவிட நாம் ஒரு சிலர் எம் உயிரை இழந்தாவது இந்த அராஜகத்தினை முடிவுக்குக்கொண்டுவருவோம்.

இந்தப் போராட்டம் விஜிதரனை மீட்டுத்தரும் என்பதைவிடவும், எமது தேசத்தின் மக்கள் அராஜகத்திற்கும் ஜனநாயக விரோதநடவடிக்கைக்கும் எதிராக மிடுக்குடன் நிற்கவேண்டும் என்பதை உலகெங்கும் எடுத்துக் காட்டும். மனிதாபிமானமுள்ள அனைத்துச் சக்திகளிற்கும் இந்நடவடிக்கை ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும். மக்களை போராடத் தூண்டவும் இனிமேலும் இத்தகைய கடத்தல்கள் நடக்காமல் இருக்க மக்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவும் செய்யும் விதத்தில் எமது போராட்டத்தை விஸ்தரிக்க வேண்டும்.

என் அருமை மக்களே, மாணவர்களே!

இன்று விஜிதரன். நாளை எம்மில் யார் யாரோ அறியோம். இந்த நிலை தொடர்வதா? அராஜகத்தை அழித்தொழிக்கவும் தேசத்தின் விடுதலைக்காக உறுதியாக நின்று போரிடவும் எழுந்து வாருங்கள். உங்கள் புரட்சிக் கனலின் புயல் வேகத்தில் அராஜகம் செத்துமடியட்டும். எதிரி புறமுதுகு காட்டி ஓடட்டும். தேசத்தில் ஜனநாயகமும் சுதந்திரமும் நிலவும் ஓரு மக்களாட்சி மலரட்டும். அராஜகம் ஒழியட்டும் மாணவர் போராட்டம் வெல்லட்டும்

.…………………………………………………………………………………………

இன்று ஜீவமரணப் போராட்டத்தை தொடங்கியுள்ள இந்த சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை நடாத்துகின்ற போராளிகளின் பேரால் இக்கருத்தினைத் தெரிவித்தோம்.

இன்றைய நிலையில் நாங்கள், இன்று தமிழீழப்பிரதேசத்தின் குருதிகொப்பளிக்கும் இந்த வீரம் செறிந்த விடுதலைப்போராட்டம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நாங்கள் இங்கு அண்மையில் கூட சிங்கள இனவாத அரசிற்கு எதிராக சிறையில் இருக்கும் போராளிகளிற்கு, எமது மக்களும் மாணவர்களும் போராட்டத்தை நடாத்தி விட்டு இருக்கும், இந்தக்கட்டத்தில் இப்படியான போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக்கடமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே இதனை எமது தேசவிடுதலைப்போராட்டத்திற்கு எதிரான போராட்டமாக, இங்கு இருக்கும் எவரோ எமது பிரதேசத்தில் வசிக்கும் ஏனைய மக்களோ நினைத்துவிடக்கூடாது. எமது கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக தியாகம் செய்த போராளிகளையும் மக்களையும் நாங்கள் இதய பூர்வமாக நேசிக்கின்றோம். அவர்களிற்கு தலைவணங்குகின்றோம். ஆனால் அந்த தியாகங்கள் இப்படி இன்னும் அந்த மக்களின் உயிரை பலியெடுக்குமாக இருந்தால் அந்த போராளிகளின் தியாகத்தை நாங்கள் விலை பேசுவதாகத் தான் இன்று போராட்டம் நடைபெறுவதாகத்தான் கருதமுடியும்.

எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது அல்ல. போராட்டத்தினை நாங்கள் சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் தான், நாங்கள் இந்த ஜீவமரணப் போராட்டத்தை தொடங்கியுள்ளோமே தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பதை தெரியப்படுத்த வேண்டிய கடமையில் உள்ளோம். ஏனென்று சொன்னால் இன்றைக்கு இந்த கடத்தலோடு சம்பந்தப்பட்ட அராஜக சக்திகள் எம்மைப்பற்றி பலவாறாக பத்திரிகைகளிலும் வேறு சில தொடர்பு சாதனங்கள் முலமும் பிரச்சாரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த உண்மை தமிழீழ பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களிற்கும் உணரப்படவேண்டும். அதற்கான வழியை நாம் எல்லோரும் சேர்ந்து மேற்கொள்ளவேண்டும்.

எங்களைப் பொறுத்த வரையில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக உரிமைகட்காக தொடர்ந்து போராடியே வந்துள்ளோம். அதில் எந்தவித முரண்பாடும் இல்லை. கடந்த காலங்களில் பாராளுமன்ற அரசியலை நம்பியிருந்த எமது கூட்டணித்தலைவர்கள், தமிழீழப்போராட்போராட்டத்தை அங்கீகரிக்கும் பொழுது எமது மாணவர்கள் அதை ஆதரித்து போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு துரோகத்தனம் செய்யும் பொழுது நிட்சயமாக அதே மாணவர்கள் அவர்களை எதிர்த்து வரவிடாமல் செய்தார்கள்.

அதே போல எமது தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை இயக்கங்களை மக்களும் மாணவர்களும் மனமார நேசித்தார்கள். உயிரையும் கொடுத்து தங்களது தார்மீக உதவியை வழங்கினார்கள். அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும், தொடர்ந்து விடுதலை இயக்கங்களில் பல்வேறுபட்ட விடுதலை இயக்கங்கட்கு தமது பங்களிப்பை செலுத்திக் கொண்டேயிருந்தார்கள். அப்படித் தொடர்ந்து வந்த மாணவர்களின் உரிமைப்போராட்டம் இன்றும் தொடரத்தான் முடியும். அது எந்தவிதத்திலும் மழுங்கடிக்கப்பட முடியாது.

அன்று சிறிலங்கா அரசினால் கைதுசெய்யப்பட்ட எமது பல்கலைக்கழக மாணவன் விமலராஜை விடுவிக்க எத்தனையோ மாணவர்கள் தமது தார்மீக ஆதரவைக்கொடுத்து போராட்டத்தில் குதித்தார்கள். அதை விட இந்தப் போராட்டத்தை நாங்கள் எவ்வாறு வித்தியாசமாகப் பார்க்கமுடியும். அன்று இராணுவம் கொண்டு போகும் போது இராணுவ முகாமில் இருக்கிறார்கள் என்பதை மட்டும் நாங்கள் எமது தேசமக்களிற்கும் அந்த அன்புப் பெற்றோர்களிற்கும் தெரிவிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று அந்த மக்களையும் மாணவர்களையும் நம்பி அனுப்பிய அந்தப் பெற்றோர்கட்கு நாங்கள் என்ன பதிலை சொல்லப் போகின்றோம்? இதற்கு விடை காண வேண்டுமாயின், நாங்கள் நிட்சயமாக இந்த மாணவர்கள் உரிமைப் போராட்டத்தில் குதித்தே ஆக வேண்டும். இதில் உயிரிழப்பு என்பது தனியே விஜிதரனின் அப்பா, அம்மா, சகோதரிகள் மட்டும் கவலைப்படுவதற்கில்லை. இப்படியான ஆதிக்கசக்திகள் அராஜகசக்திகள் எத்தனையேயா நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் பலியெடுத்தது. ஆனால் இன்றைக்கும் அது அம்பலத்துக்கு வராமல் இருந்து கொண்டிருக்கிறது.

நிட்சயமாக அந்த உண்மையை ஒரு தமிழீழ அரசு நிறுவியதன் பிறகு கூட ஒரு நீதிமன்றத்தில் ஒரு அநியாயமான தீர்ப்பைத் தான் சமுக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று சொல்லித்தான் தீர்ப்பைவழங்கக் கூடும். அதற்கு நாங்கள் அமையப் போகும் தமிழீழத்தில் ஒரு நியாயமான நீதிமன்றத்தை நிறுவ வேண்டுமானால் மாணவர்களாகிய நாங்களும் மக்களும் விழித்தெழ வேண்டும். இல்லா விட்டால் தொடர்ந்தும் இப்படியான அராஜகங்கட்கும், இப்படியான சமுகவிரோத செயல்கள் எனச் சொல்லிக் கொண்டே கொலைகளை வழங்கும் ஆதிக்கசக்திகளிற்கும் இடம் கொடுக்கப் போவதாய்த் தான் எமது நடவடிக்கைகள் அமைந்துவிடும்.

எனவே மாணவர்களாகிய நாங்கள் எல்லோரும் தொடர்ந்து மாணவர்கட்கு மட்டுமல்ல, கிராமங்களில் ஒவ்வொரு பல்வேறுபட்ட பிரதேசங்களில் எமது தமிழீழப் பிரதேசங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து மக்களிற்கும் ஒரு ஜனநாயக அத்துமீறல்களை நடாத்திக் கொண்டிருக்கும் சக்திகளிற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கத்தான் போகின்றோம்.

அதற்கான உறுதியை எமது பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் நிலைச் சமூகமும் நிட்சயமாக பொறுப்பேற்கத்தான் போகின்றது. கடந்த காலத்தில் நாங்கள் நடாத்திய போராட்டங்களில் எமது பல்கலைக்கழக மாணவர்கள் கணிசமானயளவு பங்குவகித்துள்ளார்கள்.

கடந்த நாட்களை எடுத்துப் பார்த்தால் எமது பல்கலைக்கழக மாணவர் அவைத் தலைவர் திரு சிறிஸ்கந்தராசா, கேதீஸ்வரன், ரவிசேகர் ராஜாஜி, ஜெயப்பிரகாஸ் போன்ற எத்தனையோ மாணவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தில் தங்களது தியாகங்களை மேற்கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அவர்களது கடைசி மக்களது தியாகத்தை நோக்காது விட்டாலும் கூட எங்களது மாணவர்களைப் பற்றிய சிந்தனையாவது நாங்கள் சிந்தித்தே ஆகவேண்டும். அதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். அவர்களின் தியாகத்தை மதித்து முதலில் அதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கத்தான் வேண்டும்.

எனவே ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மக்களிற்கும், மாணவர்கட்கும் அவர்கள் செய்த தியாகங்கட்கும் நாங்கள் அதை மதிப்பதாக இருப்பதால், அவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் உரிமை மறுக்கப்படுவதற்கெதிராக போராட அன்று துணிந்து தமது உயிரை தியாகம் செய்தார்களோ, அதே பணியை நாங்கள் தொடரத்தான் வேண்டும்.

இதில் எமது இழப்பைக் கண்டு கண்ணீர் சிந்துவதை விட நாங்கள் என்ன இலட்சியத்திற்காக இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோமோ, அதை முன்னெடுக்க வேண்டுமென்பது தான், எமது மாணவர்களின் அதாவது இந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களதும் வேண்டுகோளாக இருக்கும். எமது பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து நாம் எந்த ஒரு ஆதிக்க சக்திகளிற்கும் இடம்கொடாது, எந்த ஒரு அராஜகசக்திகளிற்கும் இடம்கொடாது, இது ஒரு பல்வேறுபட்ட கருத்துக்களைகொண்ட மாணவர்களது மையமாக இருக்கின்றது. எனவே ஒரு ஜக்கிய முன்னணி அடிப்படையில் நாங்கள் தேசியவிடுதலைப்போராட்டத்தில் தொடர்ந்து பங்காற்ற வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது மாணவர்கள் இங்கு முன் வந்து இந்தப் போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும்.

இதன் முலம் தான் எமது மக்களினதும் மாணவர்களினதும் உரிமைகளை நிலைநிறுத்தமுடியும். மக்களினது அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதென்பது வெறுமனே எமது சீர்திருத்த நடவடிக்கைகள் முலம் நிட்சயமாக ஏற்படுத்தி விடமுடியாது. இன்றைக்கு எந்தெந்த மக்களிற்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அந்தந்த மக்கள் அமைப்பு ரீதியாக அதாவது ஒரு ஸ்தாபனமயப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் என்னத்திற்காக போராடுகின்றோம். எமது மண்ணையும் மக்களையும் விடுதலையையும் நேசிக்கின்ற பண்பை நாங்கள் வளர்க்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கட்கு செய்யக் கூடிய ஆற்றலும் பண்பும் அதற்கு நிறையவே உண்டு.

அந்த வகையில் நாம் எல்லோரும்ஒவ்வொரு மாணவனும் இன்றைய இந்த ஜீவமரணப்போராட்டத்தில் எடுத்துக்கொள்ளக் கூடிய உறுதிமொழியாக அதுவாகத் தான் இருக்கமுடியுமே தவிர, எமது மரணத்தைக்கண்டு நீங்கள் எவ்வித சலனமோ அச்சமோ கொள்ளக்கூடாது என்பதுதான் எமது எல்லோரதும் வேண்டுகோளாக இருக்கமுடியும்.

எனவே எமது போராட்டத்தைக் கண்டு நீங்கள் நிட்சயமாக எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல், இன்றைக்கு இந்த ஜீவமரணப்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ, அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமே யொழிய கண்ணீர் சிந்துவதும், அஞ்சலிக்கூ ட்டங்கள் நடாத்துவதும் அல்ல.

எனவே இந்த அடிப்படையில் நாம் எல்லோரும், எங்கள் மாணவன் விஜிதரன் விடுதலை செய்யப்படும் வரையும் எமது அனைத்துக் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும்வரையும் எமது ஜீவமரணப்போராட்டத்தை தொடர்கின்றோம் என்பதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

வணக்கம்.

(விமலேஸ்வரன் 1988 ஆண்டு ஜுலை மாதத்தில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்)

Exit mobile version