-பிரதீபன்
(பகுதி – 4)
1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு விசித்திரமான அறிக்கையை விடுத்தார். அதில் அவர், “தமிழ் மக்களைக் கடவுள்தான் இன்மேல் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
தமிழ் மக்களைக் காப்பாற்றும் பரமாத்மாக்களாக இருந்த தமிழரசுக் கட்சியினர் அந்தராத்மாக்களாக மாறி கடவுளின் மேல் பழியைப் போட்டது எதற்காக என்று விளங்காத சில தமிழ் தேசிய அறிவு சூன்யங்கள் இன்றும் எடுத்ததெற்கெல்லாம் செல்வநாயகம் சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்டி வருகின்றனர்.
ஆனால் “தந்தை” என அழைக்கப்பட்டு வந்த செல்வநாயகம் ஏன் அன்று அப்படிச் சொன்னார்?
1970 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ‘தளபதி’ என அழைக்கப்பட்டு வந்த அ.அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியிலும், ‘விண்ணன்’ என அழைக்கப்பட்டு வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலும், ‘இரும்பு மனிதன்’ என அழைக்கப்பட்டு வந்த டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் நல்லூர் தொகுதியிலும், ‘உடுப்பிட்டி சிங்கம்’ என அழைக்கப்பட்டு வந்த மு.சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியிலும், ‘அடலேறு’ என அழைக்கப்பட்டு வந்த மு.ஆலாலசுந்தரம் கிளிநொச்சித் தொகுதியிலும் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் இந்தத் தலைவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனையைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத நிலையிலேயே செல்வநாயகம் கடவுளை நோக்கி அலறினார்.
தமிழ் மக்கள் இந்த தலைவர்களுக்கு இத்தகைய தண்டனையைக் கொடுத்ததிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, சிங்கள பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவது என்று தாமே வகுத்துக்கொண்ட கொள்கையைப் பிரயோகிக்க 1965இல் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல் தமது வர்க்க மற்றும் அரசியல் விசுவாசம் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்தமை.
இரண்டாவது காரணம், இவர்கள் ஐ.தே.க. அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்த 1966 – 70 ஆண்டு காலகட்டத்தில் வட பகுதியெங்கும் தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச – தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற போதும், தமிழ் சனத்தொகையின் மூன்றிலொரு பங்கினரான அவர்களது போராட்டத்தை தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் ஏறெடுத்தும் பார்க்காதது மட்டுமின்றி, யாழ்ப்பாணத்தின் சாதி வெறி பிடித்த மேட்டுக்குழாமினரின் பக்கம் நின்றமையுமாகும்.
பொதுவாக இன்றும்கூட, தமிழ் பொதுசனத்தைப் பார்த்து “இது ஒரு மந்தைக் கூட்டம்” என பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதற்குக் காரணம் பிற்போக்கு தமிழ்த் தலைமைகள் சொல்வதை இந்த மக்கள் ஏன் எதற்கு என்று கேட்காமல் ஆதரித்து வருவதால் ஆகும். ஆனால் இந்த மக்கள்தான் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற நிலையில் 1970 தேர்தலின் போது தமிழ் தலைவர்களுககு தண்டனை வழங்கினர். எனவே மக்கள் வெறும் மந்தைக் கூட்டம் அல்லர், வேண்டிய போது சரியாகச் செயற்படவும் கூடியவர்கள் என்பதுதான் உண்மை. (அப்படியான ஒரு வரலாற்றுத் தீர்ப்பை அடுத்த பொதுத்தேர்தலின் போது கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு தமிழ் மக்கள் வழங்கலாம்.)
1970 தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசியல் வங்குரோத்து நிலைக்குச் சென்ற தமிழரசுக் கட்சித் தலைமை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் சரிந்த தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக புதிய உபாயங்களைத் தேடத் தொடங்கியது. இந்த நேரத்தில் 70 தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசாங்கம் ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்தது.
அதாவது, பல்கலைக்கழக அனுமதிக்கு ;தரப்படுத்தல்’ என்ற இன விகிதாசார முறையை அமுலுக்குக் கொண்டு வந்தது. இது தமிழரசுக் கட்சி தனது இனவாத அரசியலை ஒரு புதிய கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. எப்படி 1956 பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை வைத்து தமிழரசுக் கட்சி தன்னை வளர்த்துக் கொண்டதோ, அதேபோல தரப்படுத்தலையும் தமிழரசுக் கட்சி நன்கு பயன்படுத்திக் கொண்டது.
அதுமாத்திரமின்றி, ஒன்றன்பின் ஒன்றாக பரிசுச்சீட்டு விழுந்தது போல, 1972இல் சிறீமாவோ அரசாங்கம் கொண்டு வந்த புதிய குடியரசு அரசியல் யாப்பு தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. எனவே குடியரசு எதிர்ப்பு, தரப்படுத்தல் எதிர்ப்பு என்ற பெயர்களில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கிலிருந்த தமிழ் மாணவர்களையும் இளைஞர்களையும் திரட்டி அவர்களை வன்முறை கலந்த சட்ட மறுப்புப் போராட்டங்களில் ஈடுபடுத்தத் தொடங்கினர். இந்த நடவடிக்கைகளுக்கு தீவிரமாகத் தலைமை தாங்கியவர் நாடாளுமன்ற வேலையை இழந்து நின்ற அ.அமிர்தலிங்கம்.
இந்தக் காலகட்டத்தில், அதாவது 1971இல் இந்திய உதவியுடன் கிழக்கு பாகிஸ்தான் ‘பங்களாதேஸ்’ என்ற புதிய நாடாக உருவாகியிருந்தது. இதை உதாரணம் காட்டிய தமிழரசுக் கட்சியினர் இலங்கையிலும் தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவாக இந்தியா உதவ வேண்டும், உதவும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் ஊட்டத் தொடங்கினர். இதற்காக யாழ்.முற்றவெளியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி பங்களாதேசின் வெற்றியைக் கொண்டாடியதுடன், அதுவரை காலமும் “ஈழத்துக் காந்தி” என அழைத்து வந்த தமது தலைவர் செல்வநாயகத்துக்கு “ஈழத்து முஜிபுர் ரஹ்மான்” (பங்களதேசின் தேசபிதா) என புதிய நாமம் சூட்டினர்.
தமிழரசுக் கட்சியின் நோக்கம் தமிழ் மக்களிடையே தனிநாட்டுக் கோரிக்கையை வலுப்படுத்தி மாற்று அரசியல் சக்திகளை அரசியல் அரங்கிலிருந்து ஒழித்துக்கட்டுவது. (இன்றுவரை அது அவர்களுக்கு வெற்றியாகவே உள்ளது) அதற்கான அவர்களது தந்திரோபாயம் தமது நடவடிக்கைகளை சட்ட விரோதம் ஆக்குவதன் மூலம் தமிழ் மக்கள் மேல் அரச ஒடுக்குமுறையை ஏற்படுத்தி தமது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்வது.
இந்தக் குறிக்கோளை அடிப்படையாக வைத்து தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் தனது காங்கேசன்துறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து தமிழ் ஈழக் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அத்தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது தமிழரசுக் கட்சிக்கு மேலும் உத்வேகத்தை உண்டு பண்ணியது.
இந்தச் சூழ்நிலையில் இதுவரை காலமும் சட்ட மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தமிழரசுக் கட்சி, தமிழ் இளைஞர்களைத் தூண்டிவிட்டு ஆயுத வன்முறையை உருவாக்கத் தொடங்கியது. அந்த வகையில் அரச ஆதரவாளர்கள் தாம் கருதிய மாற்று அரசியல்வாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.தியாகராசா, சி.அருளம்பலம், எம்.சி.சுப்பிரமணியம் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையக்கா போன்றோர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தமிழரசுக் கட்சியின் இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மறைமுகமாகப் பூரண ஆதரவு வழங்கி வந்தது. அதற்கு ஒரு நல்ல உதாரணம், தமிழரசுக் கட்சி தனனை வலுப்படுத்திக் கொள்வதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் சில தமிழ் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கிய நேரத்தில் நிகழ்ந்த சம்பவம்.
இந்த அமைப்பில் தமிழரசுக் கட்சியுடன், தமிழ் காங்கிரஸ், வவுனியா சி.சுந்தரலிங்கத்தின் அடங்கா தமிழர் முன்னணி, அன்று ஐ.தே.க. விசுவாசக் கட்சியாக இருந்த தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றுடன், ஐ.தே.க. அனுப்பிய அதன் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான கே.டபிள்யு.தேவநாயகத்தையும் சேர்த்தே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பே 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு நடத்தி தனித் தமிழீழம் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தது.
இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 பொதுத்தேர்தலின் போது தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. அதாவது, வடக்கு கிழக்கில் இருந்த 18 தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றதுடன், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றுக்கொண்டது. அதேநேரத்தில் தெற்கில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று ஆட்சிபீடத்தில் ஏறியது.
ஐ.தே.க. ஆட்சிபீடத்தில் ஏறிய பின்னர் தமிழ் தலைமை எப்படி ஐ.தே.கவுடன் கூடிக்குலாவி தமிழ் மக்களின் தலையில் மண் அள்ளிப் போட்டது என்பதை இக்கட்டுரையின் அடுத்ததான இறுதிப் பகுதியில் பார்ப்போம்.
தொடரும்…