Site icon சக்கரம்

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (5)

-பிரதீபன்

(பகுதி – 5)

1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும், மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற எதிர்க்கட்சி ஆகி அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானதும், இலங்கை வரலாற்றில் ஒரு எதிர்மறையான நிகழ்வாகும்.

ஏனெனில் வழமையாக ஒரு அரசுக்கு உண்மையான எதிர்ச் சக்திதான் சரியான எதிரணியாகும். ஆனால் இலங்கையில் அன்று ஒரே அரசியல் போக்குடைய ஐ.தே.கவும் தமிழ் விடுதலைக் கூட்டணியும் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் பதவி வகிக்கும் முரண்நகையான அரசியல் சூழல் உருவானது. அப்படியிருக்க தமிழர் விடுதலைக் கூட்டணி எப்படி தனது அரசியல் நண்பனான ஐ.தே.கவை எதிர்த்துச் செயற்படும். (சம்பந்தன் தற்போதைய ரணில் ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவரான போதுகூட இதுதான் நடந்தது)

இதுபற்றி காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவரது வழமையான நகைச்சுவைப்பாணியில் சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. 1977இல் கார்த்திகேசனிடம் சென்ற ஒருவர், “என்ன சேர், ஐ.தே.க. அரசாங்கத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாமே?” எனக் கேட்டிருக்கிறார்.

கார்த்திகேசன் சிரித்துவிட்டு, “ஓம்..ஓம்.. அது உண்மைதான். தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியின் எதிர்க்கட்சி” எனப் பதிலளித்தாராம். அவர் சொன்னது போலவே பின்னர் நடந்தது.

ஐ.தே.க. ஜே.ஆர். தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு எதிரான தனது போராட்டத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டது. அதற்கு அமிர்தலிங்கம் சொன்ன காரணம், “போராட்டத்தில் இடையிடையே தங்குமிடங்கள் தேவைப்படும்” என்பதாகும்.

எனவே எதிர்க்கட்சியே தனக்கு மறைமுக ஆதரவாக இருக்கையில் ஜே.ஆர். தான் நினைத்ததை செய்வதற்கு எப்படித் தயங்குவார்? அவர் துணிந்து தனது திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்.

முதலாவதாக சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரமையைப் பறித்தார். இடதுசாரிக் கட்சிகளைத் தடை செய்து அவற்றின் தலைவர்களைச் சிறையில் அடைத்தார். எதிர்க்கட்சி பத்திரிகைக் காரியாலயங்களுக்கும் தொழிற்சங்க காரியாலயங்களுக்கும் ‘சீல்’ வைத்தார். தமிழ் மக்களுக்கு மேல் 1977, 1981, 1983 ஆண்டுகளில் அரச ஆதரவுடன் வன்முறையைத் தூண்டிவிட்டார். வெலிக்கடையில் தமிழ் கைதிகளைக் காடையர்களைக் கொண்டு கொலை செய்வித்தார். இப்படிப் பல சம்பவங்களை ‘எதிர்க்கட்சியான’ தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைமுக ஆதரவுடன் அரங்கேற்றினார்.

ஆனால் 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழர் விடுலைக் கூட்டணி இரண்டு வருடங்களில் தனது தீர்மானத்தை மூட்டைகட்டி பரணில் வைத்துவிட்டு 1978இல் ஜே.ஆர். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எனக் கொண்டுவந்த எதுவித அதிகாரங்களும் அற்ற ‘மாவட்ட அபிவிருத்திச் சபை’களை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதைக்கூட 1965இல் டட்லி அரசு செய்தது போல ஜே.ஆர். அரசு நிறைவேற்றவில்லை.

1981 யூனில் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடந்த போது ஜே.ஆர். அரசு தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான காடையர்களைப் கொண்டு வந்து தேர்தலில் கள்ள வாக்குப் போட்டு மோசடி செய்ததுடன், அந்தக் காடையர்களைக் கொண்டு யாழ்.பொது நூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரனின் இல்லம், யாழ் நகரக் கடைகள் என்பனவற்றை எரித்து சாம்பராக்கியது.

அது மட்டுமின்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன் இத்தனை கைங்கரியங்களையும் செய்த ஐ.தே.க. அரசு, பின்னர் பிரிவினைவாதத் தடைச்சட்டம் ஒன்றை நிறைவேற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையையும் பறித்தது.

ஐ.தே.க. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத – தமிழின விரோத நடவடிக்கைகள் எதனையும் தட்டிக் கேட்காமல் தமிழர் விடுதலைக் கூட்டணி மௌன அங்கீகாரம் வழங்கியது. இதன் காரணமாகவே அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட ஆத்திரத்தாலும், தமிழர் விடுதலைக் கூட்டணி மீது ஏற்பட்ட நம்பிக்கையீனத்தாலும் தமிழ் இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.

ஜே.ஆர். அரசு தமிழ் மக்கள் மீது முழு அளவிலான யுத்தத்தைத் திணித்த நிலையிலேயே சந்தர்ப்பம் பார்த்திருந்த இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசு தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு சகல வழிகளிலும் ஒத்தாசை வழங்கியதுடன், ஜே.ஆர். மீது நிர்ப்பந்தம் செலுத்தி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஜே.ஆர். இந்த ஒப்பந்தத்தில் வேண்டா வெறுப்பாகவே கைச்சாத்திட்டார். அவரது அரசின் பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச (ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் அப்பா) ஒப்பந்தத்தை வன்மையாக எதிர்த்து ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நிகழ்வைப் புறக்கணித்தார்

மறுபக்கத்தில் போரில் ஈடுபட்டிருந்த புலிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் அரைகுறை மனதுடனேயே ஒப்பந்தத்தை ஆதரித்தனர். அப்படிச் செய்ததைக்கூட ஏற்காத புலிகள் அ.அமிர்தலிங்கம், வெ.யோகேஸ்வரன் போன்ற கூட்டணித் தலைவர்களின் உயிர்களைக் காவு கொண்டனர். ஐ.தே.க. ஆட்சியிலேயே அதுவும் தலைநகர் கொழும்பிலேயே இந்த படுபாதகச் செயலைச் செய்வதற்கு அன்றைய ஐ.தே.க. அரசு புலிகளுக்கு வாய்ப்புச் செய்து கொடுத்தது. (இந்திய அமைதிப்படைக்கு பயந்து கொழும்புக்கு ஓடிவந்த பல நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்களுக்கு பிரேமதாச அரசு தங்குமிடமும் உணவும் கொடுத்து போசித்தது)

அது போதாது என்று பிரேமதாச அரசு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவான வடக்கு கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தமிழர்களுக்கு கிடைத்திருந்த ஓரளவு அதிகாரப் பகிர்வையும் இல்லாமல் செய்தது. புலிகளின் வேண்டுகோளை ஏற்று அதைச் செய்த பிரேமதாசவை தமது தேவை முடிந்த பின்னர் புலிகளே கொலை செய்தனர். 17 வருட ஐ.தே.கவின் இருணட ஆட்சிக்காலத்தில் தமிழ் தலைமை பொலிஸ் – கள்ளன் விளையாட்டுத்தான் விளையாடியது. ஐ.தே.க. அரசு இக்காலகட்டத்தில் மேற்கொண்ட ஜனநாயகப் படுகொலை பற்றியோ, மனித உரிமை மீறல்கள் பற்றியோ, தமிழின விரோத நடவடிக்கைகள் குறித்தோ தமிழ் தலைமை எவ்வித காத்திரமான நடவடிக்கையையும் எடுக்காமல் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1994இல் சந்திரிக தலைமையிலான அரசு ஆட்சிபீடம் ஏறியது. அன்று இருந்த சந்திரிக இன்றைய ஐ.தே.க. விசுவாசி சந்திரிகவாக இருக்காதபடியால் தனது தந்தை பண்டாரநாயக்கவின் வழியைப் பின்பற்றி நாட்டின் எரியும் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாண விரும்பினார். அவரை இந்த முயற்சியில் தள்ளிவிட்டதற்கு இடதுசாரிக்கட்சிகளுக்கும், அன்றைய முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கும் பாரிய பங்குண்டு.

எனவே சந்திரிக அரசு இனப்பிரச்சினைத் தீர்வாக இலங்கையை பிராந்தியங்களின் ஒன்றியமாக மாற்றும், ஏறத்தாள சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை 2000 ஆண்டில் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அவர் முன்வைத்த தீர்வில் பல முற்போக்கான அம்சங்கள் இருந்தன. அவற்றில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை. அவையாவன:
• வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்கள் ஒரே பிராந்திய நிர்வாக அலகாக இருக்கும்.
• பிராந்திய நிர்வாகத்தின் அனுமதியின்றி அந்த நிர்வாகத்தை மத்திய அரசு தன்னிச்சையாகக் கலைக்க முடியாது. (இது இந்தியாவின் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமையைவிட வலுவானது)
• இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்களுக்கு தற்பொழுது எந்தநேரமும் நீக்கப்படக்கூடிய சாதாரண நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் வழங்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜாவுரிமை எந்தச் சூழலிலும் நீக்கப்பட முடியாதவாறு அரசியல் சாசனரீதியாக உத்தரவாப்படுத்தப்படும்.
இந்தத் தீர்வுத்திட்டத்தைக் கண்டு ஐ.தே.க. கொதித்தெழுந்தது. 1957இல் பண்டா – செல்வா உடன்படிக்கை செய்யப்பட்ட பொழுது எப்படி, ‘பண்டாரநாயக்க தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறார்’ என ஐ.தே.க. பிரச்சாரம் செய்து அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்ததோ, அதேபோல ரணில் தலைமையில் இருந்த ஐ.தே.க., ‘சந்திரிக இந்தத் தீர்வுத்திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறார்’ என்ற இனவாதப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

எப்படியும் இந்தத் தீர்வுத்திட்டம் நிறைவேறாது தடுக்க வேண்டும் என்று எண்ணிய ஐ.தே.க. திட்டத்தின் நகலை நாடாளுமன்றத்துக்குள்ளேயே தீ வைத்துக் கொளுத்தியது. இந்தத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பார்கள் எனக் கருதப்பட்ட தனது கட்சியின் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி சிங்கப்பூருக்கு விடுமுறையைக் கழிக்க அனுப்பி வைத்தது.

அதன் பின்னர் இந்தத் தீர்வுத்திட்டத்தை எதிர்த்த சிங்கள இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஹெல உறுமய, விக்கிரமபாகுவின் நவ சமசமாஜக் கட்சி என்பனவற்றை ஓரணியில் திரட்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் கட்டளையை ஏற்று தமிழர் விடுதலைக் கூட்டணியும் தீர்வுத்திட்டத்துக்கு எதிராக ஐ.தே.கவின் அணியில் சேர்ந்து கொண்டது. இவர்கள் எல்லோரும் இணைந்து தீர்வுத்திட்டத்தை எதிர்த்து கொழும்பு மாநகரசபை மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, த.வி.கூ. தலைவர் வீ.ஆனந்தசங்ரி, ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச, நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு ஆகியோர் உரையாற்றினர். (இது பற்றிய புகைப்படம் ஊடகங்களில் உள்ளது)

போதாதிற்கு இந்தத் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு உதவி புரிந்ததாகக் கருதப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வத்தையும் புலிகள் தற்கொலைக் குண்டுதாரி மூலம் கொலை செய்தனர்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு இந்தத் தீர்வுத்திட்டத்தின் மூலம் கிடைக்கவிருந்த உச்சபட்ச அதிகாரத் தீர்வையும் தமிழ் தலைமை ஐ.தே.கவுடனும், இதர சிங்கள இனவாத கட்சிகளுடனும் சேர்ந்து நிறைவேற விடாமல் தடுத்து நிறுத்தியது.

முதலில் சமஸ்டி கேட்ட தமிழரசுக் கட்சி, பின்னர் தமிழீழம் கேட்ட தமிழரசுக் கட்சி, 1965இல் டட்லியின் ஐ.தே.க. அரசு கொடுப்பதாகச் சொன்ன அதிகாரமற்ற மாவட்ட சபைகளை ஏற்றது, பின்னர் 1978இல் ஜே.ஆரின் ஐ.தே.க. அரசு கொடுப்பதாகச் சொன்ன அதிகாரங்கள் அற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றது, ஆனால் உண்மையில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கிய பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், சந்திரிகவின் 2000 ஆண்டுத் தீர்வுத்திட்டத்தையும் ஐ.தே.கவுடன் சேர்ந்து நிறைவேறவிடாமல் குழப்பியது.

பின்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நடத்தப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தையும் குழப்புவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல தடவைகள் முயன்றனர்.

2015இல் எந்தவித நிபந்தனையும் இல்லாது ஐ.தே.கவை ஆதரித்து ஆட்சிக்கு கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்காமல் ஏமாற்றி காலம் கடத்தி வரும் ஐ.தே.கவுக்கு முண்டு கொடுத்து வருவதுடன், தற்பொழுது ஐ.தே.கவினதும் தனது தந்தை ஆர்.பிரேமதாசவினதும் இனவாத, சர்வாதிகார, இந்திய எதிர்ப்பு அடிச்சுவட்டைப் பின்பற்றி வரும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும்படி எவ்விதமான சூடு சொரணையுமில்லாமல் தமிழ் மக்களைக் கோரி நிற்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் துரோகத்தனமான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஏற்று சஜித்துக்கு வாக்களிக்கப் போகிறார்களா அல்லது 1970 தேர்தலில் செய்தது போன்று புத்திசாலித்தனமான முடிவு எடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைத் தண்டிக்கப் போகிறார்களா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
முற்றும்.

(தமிழ் தலைமைகள் ஐ.தே.கவுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்கள் பற்றியே இந்தக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. இதுதவிர, ஐ.தே.க. இலங்கையில் பண்டாரநாயக்க அரசுகள் மேற்கொண்ட அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மக்கள் நலன்சார் நடவடிக்கைகளை எதிர்த்தபோது அந்தச் சந்தர்ப்பங்களிலும் தமிழ் தலைமைகள் ஐ.தே.கவுடன் இணைந்து நின்ற வரலாற்றை பிறிதொரு கட்டுரையில் தனியாகப் பார்ப்போம்)

Exit mobile version