
இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க முடியும் என டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை – இந்திய ஒப்பந்தமாகும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபைகள் நிறுவப்பட்டன.
இதன்படி, தமிழர்களுக்கு வடகிழக்கு மாகாண சபை நிறுவப்பட்ட, பின்னர் அந்த மாகாண சபை முழுமையாக இயங்காமல் போனது.
இலங்கை முழுவதும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் நிர்வாக மொழிகளாக இருக்க வேண்டும் என்பதும், சிங்கள மொழிகள் பேசும் பகுதிகளில் அரசின் பொதுப்பதிவேடுகள் மற்றும் அலுவல்கள் சிங்கள மொழியிலும், அவ்வாறே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக இருந்தது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரே 1988இல் இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணம் அமைக்கப்பட்டது. எனினும், இந்த இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் 2006இல் தீர்ப்பளித்த பின், 2007 முதல் மீண்டும் வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன.
பிரச்சனைக்கான தீர்வு
இந்த பிரச்சனை தனியாக இலங்கை அரசாங்கத்தோடும், இந்திய அரசாங்கத்தோடும் மட்டும் தொடர்புப்பட்டதல்ல எனவும் இலங்கை தமிழ் மக்கள் தமது பிரதிநிதியாக யாரை தெரிவு செய்கின்றார்களோ, அவர்களிடமும் இந்த பிரச்சனைக்கான தீர்வு உள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பிருந்த இலங்கையின் நிலைமை வேறு எனவும், அதன் பின்னரான நிலைமை வேறு எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஏனெனில், அதற்கு பின்னர் ஆட்சி செய்த இலங்கை அரசாங்கங்களில் குணாம்ச ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தலைமைகள் அதனை சரியான முறையில் கையாளவில்லை எனவும் கூறுகின்றார்.
தமிழ் மக்களின் தலைவர்கள் தமது மக்களின் நலன்களிலிருந்து இந்த பிரச்சனையை அணுகாது, தமது சுயலாப அரசியலில் இருந்து அணுகியமையே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழர்கள் துன்பங்களுக்கு ஆளாக காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் தமிழர்களின் பிரச்சனைக்கான சிறந்த தீர்வுத்திட்டம் என்ற போதிலும், அதனை தமிழ் தலைமைகள் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.
தமிழர் பிரச்சனைக்கு தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே தீர்வை காண முடியும் என கூறிய அவர், இந்த பிரச்சனைக்கான தீர்வை சர்வதேசத்தின் ஊடாக காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முள்ளிவாய்க்காலுக்கே வராத சர்வதேசம், இனி இலங்கைக்கு வராது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டவர் தமிழர்களுக்கு உதவுவாரா?
தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவரே தற்போது ஜனாதிபதியாகியுள்ள நிலையில், தமிழர்களுக்கு அவர் எவ்வாறு உதவுவார் என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்த யுத்தம், தமிழர்களை பெருமளவு பாதித்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
இந்தநிலையில், ஒரு தரப்பை மட்டும் இந்த விடயத்தில் குறைக்கூற முடியாது என அவர் கூறுகின்றார்.
அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரை, இல்லாது செய்வதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதே இயல்பான விடயம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் மீதும் தவறுகள் காணப்படுவதாக கூறிய அவர், தமிழர்கள் மீதும் தவறுகள் உள்ளதாக குறிப்பிடுகின்றார்.
அவ்வாறாயினும், இரண்டு தரப்பின் மீதும் யுத்தக் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
இலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரசு தலைவர்களின் காலப் பகுதியிலும் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
இந்திய மீனவர் பிரச்சனைக்கான தீர்வு
இந்த பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை வடப் பகுதி மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
இந்திய – இலங்கை மீனவப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தான் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இரண்டு நாட்டு மக்களின் நலன்களும் பாதிக்காத வகையிலும், இரண்டு நாட்டு கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்குடனும் தனது நடவடிக்கை அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.
சூளைமேடு கொலை வழக்கு – டக்ளஸிற்கு இந்தியாவிற்கு செல்ல முடியுமா?
தமிழகம் – சூளைமேடு பகுதியில் 1986ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்றின் சந்தேக நபராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயரும் உள்ளது.
அந்த வழக்கு விசாரணைகள் இன்றும் சென்னையில் இடம்பெற்று வருகின்ற நிலையில், டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு சென்றால் கைது செய்யப்படலாம் என கூறப்படுவது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியாவிற்கு சென்றால் தான் கைது செய்யப்படலாம் என்ற எந் வித உத்தரவும் தனக்கு விடுக்கப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
சூளைமேடு துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தனக்கு எந்தவித நேரடி தொடர்புகளும் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவம் இடம்பெறும் காலப் பகுதியில் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், அதனூடாகவே இந்த சம்பவத்தின் சந்தேக நபராக தனது பெயர் சேர்க்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தான் சம்பவத்தின் பின்னரே அந்த இடத்திற்கு வருகைத் தந்ததாக தமிழக போலீஸாரின் முதல் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
தனக்கு எந்தவொரு நேரத்திலும் இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
-ரஞ்ஜன் அருண் பிரசாத்
பிபிசி தமிழுக்காக, கொழும்பில் இருந்து
2019.11.23