–பரிபூரணன்
இலங்கையின் யாழ். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்கதையாக நீடித்து வருகிறது. மழை பெய்யும் காலத்தில் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதும், வரட்சிக் காலத்தில் குடிநீருக்கே அல்லல்படுவதும் வழமையாக இருக்கிறது. மழை காலத்தில் பெய்யும் நீரில் பெரும்பகுதியும் கடலில் கலந்துவிடுவதும் சாதாரண நிகழ்வாக இருக்கின்றது.
இதற்குக் காரணம்; மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், வாவிகள் என்பன பல வருடகாலமாக தூர்வாரப்படாமல் இருப்பதே. இன்னொரு காரணம் காணி ஆக்கிரமிப்பாளர்களும், சில உள்ளுராட்சி சபைகளும் சுயநல நோக்குடனும், தூரதிருஸ்டியின்றியும் குளங்களை ஆக்கிரமித்தும், கட்டிடங்கள் கட்டுவதற்கு தூர்த்தும் வைத்திருப்பதுதான்.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இந்த நிலைமை இருக்கவில்லை. காரணம் பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்பட்டு வந்தன. அதனால் மழை நீர் அந்தக் குளங்களில் தேங்கிநின்று தரைகீழ் நீர்மட்டத்தை உயர்த்தியதுடன், உவர் நீர் உட்புகுவதையும் தடுக்க முடிந்தது. பிற்காலத்தில் கூட நாமறிய ‘சாகாய வேலை’ என்ற பெயரில் கிராமங்களில் உள்ள குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவராக பங்குபற்றி தமது பகுதிகளிலுள்ள குளங்களைத் தூர்வாரி இருக்கிறார்கள்.
பெரும்பாலும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சம்பளம் எதுவுமின்றி சிரமதான அடிப்படையில் செய்யும் இவ்வேலைக்கு பங்குபற்றும் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் சில கிலோ கோதுமை மாவை இலவசமாக வழங்கியது. இது ஒரு நல்ல திட்டம். ஏனெனில் மக்கள் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தமது தேவையை தாமே உணர்ந்து செய்த பணி.
ஆனால் இன்று இத்தகைய வேலைகளைச் செய்வதற்கு அரசாங்கத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இதில் அக்கறை எடுக்கக்கூடிய சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள் போன்றவை கிராமங்களில் செயற்படுவதாகவும் தெரியவில்லை.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் எவ்வளவு அத்தியாவசியமானது என்ற விழிப்புணர்வு மக்களு;கு இல்லாதிருப்பதுதான். மக்களுக்கு விழிப்பூட்ட யாரும் முயற்சிப்பதாகவும் தெரியவில்லை.
பதிலுக்கு கிளிநொச்சியில் உள்ள இரணைமடு குளத்தின் தண்ணீர் கொண்டு வரப்படும், அருவி ஆற்றுத் தண்ணீர் கொண்டுவரப்படும், வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடலில் இருந்து உப்பு நீர் நல்ல நீராகச் சுத்திகரித்து கொண்டு வரப்படும் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளன. அதனால் அரசாங்கம் தமது குடிநீர் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வைக் காணும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள்.
ஆனால் ‘உறியிலை நெய் இருக்க ஊரெல்லாம் தேடுவதேன்?’ என்ற முதுமொழி போல, யாழ். மாவட்திலுள்ள குளங்களைத் தூர்வாருவதன் மூலம் பெருமளவு தீர்க்கக்கூடிய இந்தப் பிரச்சினையைப் பற்றி யாரும் யோசிக்கிறார்கள் இல்லை.
இருப்பினும் யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரி, அவற்றில் மழை நீரைத் தேக்கி, குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னொருபோதும் இல்லாத ஒரு வாய்ப்பு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் போல தமது சொந்த நலன்களை மட்டும் கவனிக்கும் போக்கில்லாத, மக்கள் சேவை புரிவதையே தனது கடமையாகக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா கோத்தபாய அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அதேபோல சிறந்த நிர்வாகியான திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த மூவரினதும் ஆதரவைப் பெற்று யாழ்.மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.