வைத்தியசாலை குழுவினருக்கு நன்றி தெரிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து, அங்கொடை ஐடிஎச் (Infectious Diseases Hospital (IDH), Angoda) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண் குணமடைந்து இன்று (19.02.2020) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 43 வயதான இப்பெண் சீனாவின் ஹுபேயிலிருந்து ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார். இந்நிலையில் இவர் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த ஜனவரி 26ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த நிலையில் இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் சென்றிருந்தார். இவருடன் வந்த குழுவினர் ஏற்கனவே நாட்டை விட்டு சென்றிருந்த நிலையிலேயே அவர் குறித்த வைத்தியசாலையின் தொற்றுநோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அங்கொடை தொற்றுநோய் (ஐடிஎச்) வைத்தியசாலையில் 21 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு, இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று (19) வரை 2009ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் மாத்திரம் 132 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று வரை 75,000 தாண்டியுள்ளது என்பதோடு கடந்த 24 மணிநேரத்தில் சீனாவின் ஹுபே மாகாணத்தில் புதிதாக 1,693 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில் இவ்வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12,000 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தினகரன்
2020.02.19