Site icon சக்கரம்

‘மஞ்சளும் வேப்பிலையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றாது’

Turmeric_Corona_Neem

சுஜாதாவின் நகரம் சிறுகதை படித்திருப்பீர்கள்தானே? எளிய மக்களுக்கான நம்பிக்கையை அரசாங்கம் தருமா? சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலத்தை பார்த்திருக்கிறீர்கள்தானே? கொரோனா ஊரடங்கு இருக்கும் இந்த அசாதாரண சூழலில், வைரஸ்கள் குறித்த புரிதல் இல்லாத மக்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

வீடெங்கும் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மஞ்சள் கலந்து வாசல் தெளிக்கிறார்கள்! பூண்டு ரசமும், வேப்பம்பூ ரசமும் பரவலாக வைக்கப்படுகிறது! முகத்திற்கு மஞ்சள் பூசச்சொல்லி பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? என தமிழகமெங்கும் மக்கள் அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்குமிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்! 

உண்மையிலேயே வேப்ப இலைகள், மஞ்சள்  வைரஸ்களைக்  கொன்றொழிக்குமா? 

பல நூற்றாண்டுகளாகவே மஞ்சளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இஞ்சிக்கு சொந்தம் இந்த மஞ்சள். மஞ்சளில் குர்குமின் என்ற பயோ ஆக்டிவ் காம்பவுண்ட், ஆன்டி ஆக்சிடென்ட் உண்டு. அறிவியல்பூர்வமாக இவற்றுக்குப் புண்ணை ஆற்றும் தன்மையுண்டு. முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் திறனுண்டு. சொரியாசிஸுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அம்மைக் கொப்புளங்களுக்கு மஞ்சள் பயன்படுத்தியிருக்கலாம், புண்ணை ஆற்றும் அதன் திறனுக்காக! வடு இருந்தால் அதைப் போக்கும் திறனுண்டு. முன்னொரு காலத்தில் வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துச் சிரங்குப் புண்களில் அப்பி சிரங்குகளைக் கட்டுப்படுத்தினார்கள். மஞ்சளுக்கு மருந்திருப்புத் தன்மை (பயோஅவைலபிலிட்டி – bioavailability) பண்பு சற்றுக் குறைவுதான். போலவே நமது உடலின் வெளிப்புறமும் அவ்வளவாக எடுத்துக்கொள்ளாது. குறைவாகப் பூசினால் மஞ்சள் முகம். அதிகமாக மஞ்சளை அப்பினால் முகம் சிவந்து வீக்கமடையும், ஒவ்வாமையும் ஏற்படலாம் கவனம். வைரஸ்களை இவற்றால் ஒன்றும் செய்ய இயலாது. கொரானா வைரஸ்களின் மரபணுக்களை  காத்திருப்பது அதன்மேல் பூசினாற் போலுள்ள புரதப்போர்வை. அதையெல்லாம் கடந்துபோகும் திறன் மஞ்சளுக்குக் கிடையாது. (டெக்னிக்கலாகச் சொன்னால் ரிசப்டார் புரோட்டீன், ஆக்டிவ் பைன்டிங் சைட்ஸ் எனும் பல படிகளுண்டு.)

அப்புறம் வேப்பிலை! வேப்பங்குச்சி, வேப்பம்பழம் என வேம்பின் பயன் அதிகம்தான். வேப்பம்பழம் குடற்புழு நீக்கியாக, சர்க்கரை நோய்க்கு, தொழுநோய்க்கு, சிறுநீரகக் குறைபாடுகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வேப்பங்குச்சிகளை இருமலுக்கு, ஆஸ்துமாவிற்கு, விந்துக் குறைவைச்  சரிசெய்ய, குடற்புழுக்களை நீக்க எனப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பூச்சிகளைக் கொல்ல, குறிப்பாக கொசுக்களை விரட்டப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். வேப்பஞ்சாறு மூலம் கர்ப்பம் கலைத்திருக்கிறார்கள். வேப்பஞ்சாறு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்தான். ஆனால், ஆங்கில மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளும்போது தலைகீழாகவும் செயல்படும். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம் குடித்தார்களே? அதுவும் வைரஸ்கள்தானே என்று கேட்பீர்கள்? அப்போது சாப்பிட்டதன் காரணம் வேறு. டெங்கு காய்ச்சலின் விளைவாக ரத்த வெள்ளை அணுக்களும், பிளேட்லெட்டுகளும் குறைந்துவிடும். அதைக் கூட்டுவதற்குத்தான் பயன்பட்டதேயொழிய வைரஸ்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

டெங்கு நோயாளிகளைவிட எதற்கும் குடித்துவைப்போமே என்று குடித்தவர்கள் ஏராளம். டெங்கு வைரஸ்களின் பண்புகள் வேறு. கரோனா வைரஸ்களின் பண்புகள் வேறு. ஆதாரமாக மூச்சு விடுதலையே கரோனா வைரஸ்கள் நிறுத்திவிடும். அவை உருவாக்கும் சளி கெட்டியானது. ஃபுளு வைரஸினால் உருவாகும் சளி நீர்த்திருக்கும். ஆகையால் இரண்டும் கரோனாவை ஒன்றும் செய்யப் போவதில்லை!

வெய்யில் காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் ஏற்படுவது அம்மை நோய். காளியம்மனின் கோபத்தால் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வந்தது அப்பெயர். சின்னம்மை, பெரியம்மை, விளையாட்டம்மை, தட்டம்மை, பாலம்மை, தவளையம்மை, கல்லம்மை, மிளகம்மை, கடுகம்மை, பாசிப்பயறம்மை, வெந்தயம்மை, கொள்ளம்மை, பனியேறி, கரும்பனசை, பயறி, இராமக்கம், விச்சிலுப்பை, நீர்க்கொளவான், கொப்புளிப்பான் என்று ஏராளமாய் பெயர்களுமுண்டு. மீசல்ஸ் வைரஸ்கள்தான் அம்மைக்குக் காரணம். நோயாளி தும்மும்போதோ, இருமும் போதோ வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமோ, எச்சில் மூலமோ, சருமத்தொற்றின் மூலமோ இவை மற்றவர்களைத் தொற்றும். வரும்போது ஆள்கொல்லியாக இருந்தது. தற்போது மிகச் சிறந்த தடுப்பூசி உண்டு. அம்மைப்பால் குத்த வராங்க என ஓடி ஒளிந்த காலமெல்லாம் உண்டு. அதன் பிறகான காய்ச்சல். தொடக்கத்தில் இரண்டு பெரிய அம்மைத் தழும்புகள். பின்னால் ஒரே அம்மைத்தழும்பு, அதன் பின்னால் பிறந்தவர்களுக்கு தழும்பேயில்லை என்று மருத்துவ அறிவியல் முன்னேறிவிட்டது. 

எனவே, கொரோனோ தொற்று விஷயத்தில் மஞ்சள் நீரைத் தெளித்ததும் வேப்பிலை கட்டியதும் எல்லாம் தற்காத்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டு எச்சரிக்கையில்லாமல் இருந்துவிடக் கூடாது.  முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

-எஸ். தினகரன், தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தினமணி, 2020.03.30

Exit mobile version