Site icon சக்கரம்

அமெரிக்காவிற்கான சீனாவின் உதவி

USA, America, china, coronavirus, trump, ventilators, corona, covid-19, கொரோனா, கொரோனாவைரஸ், சீனா, அமெரிக்கா, டிரம்ப்,

கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல விவகாரங்களில், அமெரிக்கா – சீனா இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு தேவையான வென்டிலேட்டர்களை (Ventilators) தயாரித்து கொடுக்க சீனா முன்வந்துள்ளது.

கடந்த சில நாட்கள் முன்பு வரை அமெரிக்கா சீனா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. அந்நாட்டின் பொருட்கள் மீது கடுமையான வரி விதித்தார். சீனாவில், மனித உரிமை மீறலை மதிக்காத சர்வாதிகார அரசு எனவும் விமர்சித்ததுடன், அமெரிக்காவின் பொருளாதாரத்தின் சலுகையை அனுபவித்து வருவதாக தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்கர்களின் நலன் மற்றும் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக சீனாவை குற்றம்சாட்டினார். கொரோனாவுக்கு காரணமான நாடு, வைரஸ் குறித்த தகவல்களை மறைப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அமெரிக்கர்களின் வாழ்க்கையை காப்பாற்ற தேவையான மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய சீனா முன்வந்துள்ளது, சீனாவில் உண்டான கொரோனா வைரசுக்கு, அமெரிக்கா தற்போது மையப்புள்ளியாக மாறியுள்ளது. அங்கு இதுவரை 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். டிரம்ப் அரசின் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இவ்வளவு பாதிப்புக்கு காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொரோனா தொற்று பரவுவதற்கு முன்னர், தேவையான அத்யாவசிய பொருட்களை கையிருப்பு வைத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தியாளர்கள் என் 95 மாஸ்க்குகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்வதற்கான பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை காலம் தாழ்த்தியே உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் மீது குற்றம்சாட்டுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யவும் அந்நாடு தடை விதித்தது. ஆனாலும், சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால், எங்கு அந்த பொருட்கள் கிடைக்குமோ அங்கிருந்து அதனை வாங்க முடிவு செய்துள்ளனர்.

நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கியூமோ (Andrew Cuomo) கூறுகையில், அமெரிக்காவிற்கு ஆயிரம் வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கி சீன அரசு உதவி செய்துள்ளது. அந்நாட்டில் இருந்து 17 ஆயிரம் வென்டிலேட்டர்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் சீனாவில் இருந்து மாஸ்க்குகளை இறக்குமதி செய்ய துவங்கிவிட்டன.


இது தொடர்பாக சீன மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கையில், வென்டிலேட்டர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. சர்வதேச அளவில், உள்ள மருத்துவமனைகளில் உள்ள வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக 10 மடங்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது, எங்களது நாட்டில் 21 வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்து கொடுக்க உள்ளன என்றார்.

ஆனால், இது சீன பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், சீன கம்யூனிஸ்ட் அரசிற்கு சாதகமாகவும் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அமெரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் சீன அரசின் முடிவு அடிப்படையில் தான் அமெரிக்கர்களின் உயிர் உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய முக்கியமான கட்டத்தில் டிரம்ப் நிர்வாகம் உள்ளது. இதனால் அமெரிக்ககாவின் எண்ணங்களை சீனா நிறைவேற்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version