Site icon சக்கரம்

சார்லி சாப்ளினின் 131-வது பிறந்தநாள்: மெளன நாயகன்

எழில்

மெளனப் படங்களில் சார்லி சாப்ளின் (Charles Spencer Chaplin) நிகழ்த்திய சாகசங்கள் இன்றைக்கும் வியப்பை ஏற்படுத்தக் கூடியவை. பஸ்டர் கீட்டன் (Buster Keaton), கிரிபித் எனப் பலர் இருந்தாலும் மெளனப் படங்களின் அடையாளச் சின்னமாக இன்றும் விளங்குபவர், சார்லி சாப்ளின் மட்டுமே. திரையில் புரட்சி செய்த மகத்தான கலைஞன்.

ஏப்ரல் 16, 1889-ல் இங்கிலாந்தின் இலண்டனில் பிறந்தார் சார்லி சாப்ளின். சார்லஸ் சாப்ளின் சீனியர், ஹன்னா சாப்ளின் (Hannah Chaplin) ஆகிய இவருடைய பெற்றோர் இருவருமே நாடக நடிகர்கள், இசைக்கலைஞர்கள். இதனால் சாப்ளினும் சிறு வயதிலிருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சாப்ளினின் தாய் பதினாறாவது வயதில் ஓர் இளைஞரோடு பழகி திருமணம் செய்துகொள்ளாமலேயே சிட்னி என்கிற மகனைப் பெற்றெடுத்தார். பிறகு தனது 19-வது வயதில் சார்லஸ் சாப்ளின் சீனியரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் முதல் குழந்தை, சார்லி சாப்ளின்.

சார்லி சாப்ளினுக்கு 2 வயதாகும் போது கணவரைப் பிரிந்தார் அவருடைய தாய். இதனால் அண்ணன் சிட்னி சாப்ளின் 12 வயதிலேயே கப்பல் வேலைக்கு அனுப்பப்பட்டார். அவர் அனுப்பிய பணத்தில் தான் குடும்பத்தை நடத்தினார் சாப்ளினின் தாய். தீராத வறுமை, சொந்த வாழ்க்கை காரணமாக ஹன்னாவின் மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் இரு மாதங்கள் தந்தையிடம் வளர்ந்தார்கள் சார்லியும் சிட்னியும். சார்லி சாப்ளினுக்கு 12 வயதாகும்போது, 1901-ல் அவருடைய தந்தை இறந்துவிட்டார். வறுமையும் தாயின் மோசமான நிலையும் சாப்ளினை இளம் வயதில் மிகவும் வாட்டியுள்ளது. சொந்தமாகப் பொருள் ஈட்டினால் உயிர் வாழ முடியும் என்கிற நிலைமைக்கு சார்லியும் சிட்னியும் இளம் வயதிலேயே தள்ளப்பட்டார்கள். இதனால் 12 வயது முதல் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் சாப்ளின்.

சாப்ளினின் வெற்றிகளுக்கு முக்கியப் பங்கு வகித்தவர் அவருடைய அண்ணன் சிட்னி சாப்ளின். சார்லி சாப்ளினின் அண்ணனும் ஒரு நடிகர் தான். லண்டனில் உள்ள கர்னோ நாடகக்குழுவில் முக்கிய நடிகராக இருந்தார். இதன்பிறகு அந்த நாடக கம்பெனியில் சார்லி சாப்ளினையும் சேர்த்துக்கொண்டார். நடிப்புக் கலைகளை அவருக்குக் கற்றுத் தந்து குருவாக விளங்கினார். எனினும் தனக்கென தனி பாணி அமைத்து அண்ணனை விடவும் பேர் வாங்கிக்கொண்டார் சார்லி சாப்ளின். தனது தம்பிக்கு திரைப்பட வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய வைத்ததில் சிட்னிக்கு முக்கியப் பங்கு உண்டு.

மேடை நாடக நடிகராகக் கிடைத்த அனுபவங்களும் பாராட்டுகளும் சாப்ளினை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. ஒரு நடிகராக நாடகக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சாப்ளினுக்கு அங்குள்ள மற்றொரு நாடகக் குழுவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்க வாழ்க்கை தொடங்கியது. இதனால் 13 வயதுடன் பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்தது. ஒரு தொழில்முறை நடிகராகத் தன் பாதையை இளம் வயதிலேயே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

ஃபிரெட் கர்னோ (Fred Karno) என்கிற அமெரிக்க நாடக கம்பெனியில் பங்கு பெற்ற சாப்ளின் ரசிகர்களிடையே உடனடியாகப் புகழ் பெறத் தொடங்கினார். இதனால் 1912-ல் முதல் பட வாய்ப்பு வந்தது. முதல் படத்துக்கு 150 டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது. திறமை, புகழால் இவரை பட நிறுவனங்கள் மொய்க்கத் தொடங்கின. இதனால் ஒவ்வொரு புதிய ஒப்பந்தத்தின்போதும் சம்பளம் வெகுவாக உயர்ந்தது. தன்னுடைய திறமைக்கு மக்களும் பட நிறுவனங்களும் அங்கீகாரம் அளித்ததால் 1917 முதல் சொந்தமாக தன் விருப்பத்துக்கேற்ப நடிக்கத் தொடங்கினார் சாப்ளின். 1914-ல் வெளிவந்த மேபல்ஸ் ஸ்டிரேஞ்ச் பிரடிகமெண்ட் படத்தில் முதல்முறையாகப் புகழ்பெற்ற தி டிராம்ப் கதாபாத்திரத்தில் நடித்தார் சாப்ளின். 1918 முதல் படங்களைச் சொந்தமாகத் தயாரிக்கத் தொடங்கினார்.

*சாப்ளின் என்றால் கோமாளித்தனம் மட்டுமல்லாமல் அரசியல் பார்வைகளையும் வெளிப்படுத்துவார் என்பதை தி கிரேட் டிக்டேடர், எ கிங் இன் நியூ யார்க் படங்கள் மேலும் வெளிப்படுத்தின.

சாப்ளின் கதாநாயகனாகக் கடைசியாக நடித்த படம் – எ கிங் இன் நியூ யார்க் (A King In New York). 1957-ல் வெளியான இந்தப் படம் 1973 வரை அமெரிக்காவில் வெளியாகவில்லை. தி கிரேட் டிக்டேடர் படத்தை விடவும் இதில் அரசியல் அதிகமாக இருக்கும். சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என அமெரிக்க அரசு அவர் மீது குற்றம் சாட்டியது. இதனால் தனது வாழ்க்கை அளித்த அமெரிக்காவை விட்டு சாப்ளின் வெளியேறினார். அக்காலக்கட்டத்தில் கம்யூனிஸ்டாகக் கருதப்படுபவர்களை அமெரிக்க அரசு விசாரணை செய்தது. இதனால் அமெரிக்காவை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்தார் சாப்ளின். இதையடுத்து சாப்ளின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறிய அமெரிக்க அரசு அவருடைய சொத்துகளை முடக்கியது. ஊடகங்களும் சாப்ளின் செயலைக் கண்டித்தன. தன் மீதான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகத்தான் எ கிங் இன் நியூ யார்க் என்கிற படத்தை எடுத்தார் சாப்ளின்.

அமெரிக்காவில் தஞ்சம் புகும் எஸ்ட்ரோவியா மன்னரை கம்யூனிஸ்ட் என அமெரிக்க அரசு குற்றம் சாட்டுகிறது. அதிலிருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதே எ கிங் இன் நியூ யார்க் கதை. கம்யூனிஸ்டுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பிரபலங்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்ற மெக்கார்த்தி விசாரணைகளைக் கடுமையாகப் படத்தில் விமரிசனம் செய்தார் சாப்ளின். எ கிங் இன் நியூ யார்க் படம் ஐரோப்பாவில் பெரிய வெற்றி பெற்றாலும் அமெரிக்காவில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.

தினமணி
2020.04.16

Exit mobile version