Site icon சக்கரம்

தமிழ் தலைமைகள் யாருடைய பிரதிநிதிகள்?

கே.மாணிக்கவாசகர்

லங்கைத் தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரசும் சரி, பின்னர் அதிலிருந்து பிரிந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழரசுக் கட்சியும் சரி, அன்றிலிருந்து இன்றுவரை ஏகாதிபத்திய சார்பானவர்களாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நண்பர்களாகவுமே செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் இயல்பான நண்பர்களான இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டது கிடையாது. அதுமட்டுமல்லாமல், தென்னிலங்கையின் இன்னொரு முதலாளித்துவக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்ததும் கிடையாது.

அதேபோல இந்தத் தமிழ் கட்சிகள் உலகில் உள்ள சோசலிச நாடுகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகள் என்பனவற்றுடனும் உறவு வைத்தது கிடையாது. அதுமட்டுமின்றி தமது மக்களின் விடுதலைக்காகப் போராடிய உண்மையான விடுதலை இயக்கங்களை ஆதரித்ததும் கிடையாது. இவர்கள் ஆதரிப்பதெல்லாம் உலக ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றைத்தான்.

மறுபக்கத்தில், இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியதில் முக்கிய பாத்திரம் வகித்த காங்கிரஸ் கட்சி, பிற்காலத்தில் பெரும் முதலாளிகளினதும் நிலப்பிரபுக்களினதும் கட்சியாக மாறிய போதும், அது பாலஸ்தீன மக்களின், கியூப மக்களின், வியட்நாம் மக்களின், தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்திருக்கிறது. இனவாதம், மதவாதம் என்பனவற்றை எதிர்த்து வந்திருக்கிறது.

இங்குதான் இலங்கை தமிழ் தலைமைகள் எந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்ற கேள்வி எழுகிறது.

சிங்கள மக்களை எடுத்துக்கொண்டால் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே ஒரேயொரு முதலாளித்துவக் கட்சியாக இருந்தது. ஆனால் அந்தக் கட்சி சிங்கள தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதியாக இருக்கவில்லை. அதற்கு காரணம் அப்பொழுது இலங்கையில் அரச – தனியார் தொழிற்துறைகள் எல்லாமே இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானியர் வசம் இருந்தது. இலங்கையர்களின் சுதேச தொழில் முயற்சிகள் ஆரம்ப நிலையிலேயே இருந்தன. அதனால் ஐ.தே.க. அந்நிய முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கின்ற, அவர்களுக்குத் தரகு வேலை செய்கின்ற கட்சியாக இருந்தது. அதனால்தான் ஐ.தே.கவை ஏகாதிபத்திய சார்பு தரகு முதலாளித்துவக் கட்சி என அழைக்கிறோம். இன்றுவரை அதன் வர்க்க – அரசியல் நிலைப்பாடு அதுதான்.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கையின் தேசிய முதலாளித்துவம் ஓரளவு வளரத் தொடங்கியது. ஆனால் அதன் வளர்ச்சிக்கு பிரித்தானிய முதலீடுகள் மற்றும் வர்த்தகம் என்பன இடையூறாக இருந்தன. ஆனால் அந்தத் தடைகளை நீக்க விதேசிய சார்பு ஐ.தே.க. அரசு தயாராக இருக்கவில்லை. அதன் காரணமாகவே ஐ.தே.கவிலும் அதன் அரசிலும் அங்கம் வகித்துக் கொண்டிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, அவற்றிலிருந்து வெளியேறி 1951இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

பண்டாரநாயக்கவின் வெளியேற்றம் ஐ.தே.கவின் உடைவு மட்டுமல்ல. அது இலங்கை முதலாளி வர்க்கத்தின் உடைவுமாகும். அதாவது, ஐ.தே.க. பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கையின் தரகு முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தேசிய முதலாளி வர்க்கம் தோன்றி விட்டதின் அறிகுறியுமாகும். அந்த தேசிய முதலாளி வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகவே சிறீலங்கா சுதந்திரக் கட்சி உருவானது. சுதந்திரக் கட்சி தேசிய முதலாளிகளின் பிரதிநிதியாக மட்டுமின்றி, தொழிலாளர்கள், விவாயிகள், மத்தியதர வர்க்கத்தினர், சிறிய கைவினைஞர்கள் ஆகியோரின் பிரதிநிதியாகவும் இருந்தது. (இதன் காரணமாகவே பிற்காலத்தில் இடதுசாரிக் கட்சிகள் பலமிழக்கவும், சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேரவும் வேண்டிய நிலை ஏற்பட்டது)

இதன் காரணமாவே அந்தக் கட்சி குறுகிய காலத்தில் – 1956இல் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு இலங்கை தேசிய முதலாளி வர்க்கத்தினதும், மக்களினதும் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த அந்நியரின் தொழிற்துறைகள் எல்லாவற்றையும் தேசியமயமாக்கியது.

இந்தப் பகைப்புலத்தில் தமிழ் கட்சிகளிள் நிலையை எடுத்துப் பார்ப்போம்.

தமிழர்களின் முதல் அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆரம்பம் முதலே ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அக்கட்சி 1948இல் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. அரசிலும் சேர்ந்து கொண்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சி ஐ.தேகவின் தமிழ் கிளையாகவே செயல்பட்டது எனலாம். அந்த வகையில் தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஒரு தரகு முதலாளித்துவக் கட்சியே.

ஐ.தே.க. அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் ‘இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம்’ என்ற பெயரில் 1948இல் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து மலையக இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் பிராஜாவுரிமையையும், வாக்குரிமையையும் பறித்த போது அந்தச் சட்டத்தை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆதரித்து வாக்களித்து மலையக மக்களுக்குத் துரோகமிழைத்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், 1949இல் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

தமிழ் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட இந்த உடைவை இடதுசாரிகளில் சிலர் ஐ.தே.கவிலிருந்து வெளியேறி பண்டாரநாயக்க சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய நிகழ்வுடன் ஒப்பு நோக்கினர். இது ஒரு முற்போக்கான நிகழ்வு எனக் கருதிய அவர்கள், தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் சில செயற்பாடுகளுக்கு ஆதரவும் அளித்தனர். ஆனால் இந்த உடைவு தென்னிலங்கையில் ஏற்பட்டது போன்ற முதலாளித்துவ வர்க்கத்தில் ஏற்பட்ட உடைவு போன்றதல்ல என்பதை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டனர்.

ஐ.தே.க. அரசின் பிரஜாவுரிமைச் சட்டத்தை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆதரித்ததின் காரணமாகவே அதிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தாக செல்வநாயகமும் அவரது ஆதரவாளர்களும் பிற்காலத்தில் சொல்லிக் கொண்டாலும், அந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்த நேரத்தில் செல்வநாயகமும் குழுவினரும் அந்தக் கட்சியிலேயே இருந்தனர். அதுமட்டுமின்றி, கட்சித் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதை ஆதரித்ததிற்காக செல்வநாயகம் குழுவினர் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறவும் இல்லை. ஒரு வருடம் கழித்து 1949இல் தான் வெளியேறி தமிழரசுக் கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சட்ட மூலத்தை ஆதரித்ததைத் தவிர, தமிழ் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியதற்கு செல்வநாயகம் குழுவினர் வேறு காரணம் எதையும் தெரிவிக்கவும் இல்லை. டி.எஸ்.சேனநாயக்கவின் அரசாங்கம்தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்த போதிலும் செல்வநாயகம் குழுவினர் அதை எதிர்த்ததிற்கு ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதுமட்டுமன்று. ஐ.தே.க. ஒரு ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு தரகு முதலாளித்துவகன் கட்சி, அதில் பொன்னம்பலம் இணைந்திருப்பது தவறு என்பதற்காகவும் செல்வநாயகம் அவரை நிராகரித்துவிட்டு வெளியேறவில்லை. ஏனெனில், 1965இல் டி.எஸ்.சேனநாயக்கவின் மகன் டட்லி சேனநாயக்கவின் தலைமையில் ஐ.தே.க. அரசாங்கம் அமைந்த போது, அதில் பொன்னம்பலத்தின் காங்கிரஸ் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், தீவிர சிங்கள இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்றவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து கொண்டனர்.

எனவே, தமிழ் காங்கிரஸ் போன்று தமிழரசுக் கட்சியும் ஐ.தே.கவின் கிளையாக, தரகு முதலாளித்துவக் கட்சியாக மாறியது என்பதே உண்மை. இரண்டு கட்சிகளுக்கும் வர்க்க மற்றும் அரசியல் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. அதை நிரூபிப்பது போல முதன்முதலாக ‘தமிழீழ’ தீர்மானத்தை எடுத்த 1976 வட்டுக்கோட்டை மாநாட்டின் போது இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து தமது பெயரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என மாற்றிக் கொண்டன.

தமிழரசுக் கட்சி தமிழில் தனியரசைக் குறிக்குமுகமாக ‘தமிழரசு கட்சி’ எனப் பெயர் வைத்திருந்தாலும், ஆங்கிலத்தில் தனது பெயரை சமஸ்டிக் கட்சி என்றே நீண்;ட காலம் பயன்படுத்தி வந்தது. 1976அல் வட்டுக்கோட்டையில் நடத்திய மாநாட்டிலேயே ‘தமிழ் ஈழம்’ என்ற தனியரசுத் தீர்மானத்தை எடுத்தது.

தமிழர்களுக்கென்று தனியான அரசு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் புற – அக சூழ்நிலைகளை அடிப்படையாக முன்வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஏனெனில் எல்லா நாடுகளினதும் வரலாற்றை எடுத்து நோக்கினால் ஒரு இனத்தின் தேசிய முதலாளித்துவ வர்க்கமே எப்பொழுதும் தனியரசுக்கான கோரிக்கையை எழுப்பி வந்திருப்பதைக் காணலாம். அப்படி அந்த முதலாளி வர்க்கம் தனியரசுக் கோரிக்கையை எழுப்புவதற்குக் காரணம் பொருளாதாரப் போட்டியே.

நாட்டின் அதிகாரத்தை வைத்திருக்கும் ஒடுக்குகின்ற பெரிய இனத்தின் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கப்படுகின்ற சிறிய இனத்தின் தேசிய முதலாளி வர்க்கம் வளர்வதற்கான சூழ்நிலைகளை மறுக்கும் போது அந்த முதலாளி வர்க்கம் அரசியல் ரீதியாகப் பிரிந்துபோய் தனியரசு அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கிறது. இதன் நோக்கம் தனது பொருளாதாரத்தை தங்கு தடையின்றி வளர்க்கவும், தனது இனத்தின் மத்தியில் இடையூறற்ற சந்தையை உருவாக்கி தனது மக்களை ஏகபோகமாகச் சுரண்டவும் வழி ஏற்படும் என்பதற்காகவே. தம்மை தமது இனத்தைச் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கம் சுரண்டும் எனத் தெரிந்திருந்தாலும், பெரிய இனத்தின் முதலாளித்துவ வர்க்கம் சிறிய இனத்தின் மீது மேற்கொள்கின்ற ஒட்டுமொத்த இன ஒடுக்குமுறை காரணமாக அந்த இனத்தின் அனைத்து மக்கள் பிரிவினரும் தமது முதலாளித்துவ வர்க்கம் முன்வைக்கும் தனியரசுக்கான கோரிக்கையை ஆதரிக்கின்றனர்.

இலங்கையில் சிங்கள முதலாளித்துவ வர்க்கம் ஏனைய இனங்கள் மீது மேற்கௌ;கின்ற தேசிய ஒடுக்குமுறை இவ்வகையானதே. ஆனால் அதை எதிர்த்து தமிழ் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாக தமிழரசு – காங்கிரஸ் கட்சிகள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஏனெனில் அதற்கு இரண்டு காரணங்கள் தடையாக இருந்தன.

ஒன்று, தமிழ் இனத்தின் மத்தியில் சிங்கள இனத்தின் மத்தியில் உருவானது போன்று தேசிய முதலாளி வர்க்கம் ஒன்று உருவாகியிருக்கவில்லை. தமிழ் பகுதிகளில் இருந்த பெரிய தொழிற்துறைகளான காங்கேசன் சீமெந்து ஆலை, உப்பளங்கள், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகித ஆலை, புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலை போன்றவை அரச நிறுவனங்கள். இவை தவிர வடக்கில் இருந்த சுருட்டு – பீடி தொழில்கள், வல்லை நெசவாலை, லைடன் பெனியன் தொழிற்சாலை, மில்க்வைற் சவர்காரத் தொழிலகம், இனிப்பு தொழிற்சாலைகள். அக்கிராயன் கரும்புத் தோட்டம், கண்டாவளை ஓட்டுத் தொழிற்சாலை என்பனவும், கிழக்கில் பரவலாக இயங்கிய நெசவு தொழிற்சாலைகளும் சிறிய முயற்சிகள். எனவே இவற்றால் ஒரு சக்திவாய்ந்;த தமிழ் தேசிய முதலாளி வர்க்கத்தை உருவாக்க முடியவில்லை.

இரண்டாவது, தமிழரசு – காங்கிரஸ் கட்சிகள் இலங்கை தரகு முதலாளி வர்க்கத்தின் அங்கங்களாக இருந்ததினால் அவர்களால் தமிழ் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாக தனிநாட்டுக் கோரிக்கையை எழுப்பவும் முடியாது. இதுவே யதார்த்தம்.

எனவே, தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் முன்வைத்த வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் முழுக்க முழுக்க அடுத்து 1977இல் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சந்தர்ப்பவாதத் தீர்மானமாகும். அதனால்தான் அவர்கள் 1977 பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதும், தமிழீழத் தீர்மானத்தைக் கைவிட்டதுடன், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் அமைந்த ஐ.தே.க. அரசுக்கு ஆதரவாகவும் மாறினார்கள்.

தனிநாடு அமைப்பதென்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்தவர்கள் அதைக் கைவிட்டபோதும், அதனால் உந்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அதை அடைவதற்குப் போரிட்டன. ஆனால் அதுவும் இறுதியில் தோல்வியில் முடிவடைந்தது. அதற்குக் காரணம் இயக்கங்களின் ஒற்றுமையீனம் எனப் பலர் கூறி வருகின்றனர். பிரதான காரணம் அதுவல்ல. தமிழ் இனத்தின் மத்தியில் சக்தி வாய்ந்த தேசிய முதலாளி வர்க்கம் ஒன்று உருவாகி இருக்காததே காரணம்.

அப்படியான ஒரு சூழலில் இலங்கைத் தமிழினம் போன்ற சொந்தப் பொருளாதரம் வளர்ச்சியடையாத ஒரு இனம் தனியரசு நிறுவுவதில் வெற்றி பெறுவதானால், ஒரே வழி அந்நிய சக்திகளின் நேரடித் தலையீடு இருக்க வேண்டும். அதனால்தான் தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களில் சில முதலில் இந்தியத் தலையீட்டை எதிர்பார்த்தன. பின்னர் விடுதலைப் புலிகள் மேற்கத்தைய ஏhதிபத்திய சக்திகளின் தலையீட்டை எதிர்பார்த்தன.

2009இல் தமிழர்களின் தனிநாடு அமைப்பதற்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் அவர்களது இனப் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு ஏற்படவில்லை. எதிர்காலத்தில் இலங்கைத் தமிழினம் மீண்டும் ஒரு தனிநாட்டுக்கான போராட்டத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது ஐக்கிய இலங்கைக்குள் இன அடிப்படையிலான சுயாட்சி உரிமையைப் பெறுவதாக இருந்தாலும் சரி, கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது.

அந்த விடயம் என்னவென்றால், தமிழ் பிரதேசங்களில் அரசு சாரா பொருளாதாரத் திட்டங்களை, அதாவது இயந்திரவியல் கைத்தொழில்களை, விவசாயம் சார்ந்த கைத்தொழில்களை, கடற்றொழில் சார்ந்த தொழில்களை உருவாக்கி பொருளாதார பலத்தைப் பெருக்க வேண்டும். இதற்கான முதலீட்டுப் பலம் புலம்பெயர் தமிழர்களிடம் நிறைய உண்டு. ஆனால் அவர்கள் இதில் அக்கறை செலுத்துவதில்லை. அவர்களது அக்கறையெல்லாம் தாயகத்தில் காணி வாங்குவது. வீடு கட்டுவது, டாம்பீகமாக கலியாணங்கள், சாமர்த்திய சடங்குகள், கோயில் திருவிழாக்கள் செய்வதிலேயே இருக்கிறது.

தமிழ் மக்களின் யதார்த்தமான சமூக – பொருளாதார – அரசியல் நிலைமைகளைக் கணக்கில் எடுக்காத காரணத்தால்தான் 70 வருடங்களாக அகிம்சை வழிப்போராட்டங்களும், ஆயுத வழிப் போராட்டங்களும் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்திருக்கிறன எப்போதுதான் உணர்வார்களோ?

Exit mobile version