Site icon சக்கரம்

தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்?

Vaccines are like teams: They work better together and when you ...

டுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது.

கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் “தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்” போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

தடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களால் உலகம் மிகவும் அபாயகரமான இடமாக இருந்தது. இன்றைய அளவில் தடுக்கப்படக் கூடிய நோய்கள் காரணமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைந்து வந்தனர்.

சீனர்கள்தான் முதன்முறையாக தடுப்பூசிகளின் முதலாவது வடிவமான அம்மை குத்துதலை கண்டுபிடித்தனர். இதன்படி, ஆரோக்கியமான நபருக்கு நோய்வாய்ப்பட்ட திசுவை புகுத்தி அவருக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே இந்த நுட்பம்.

எட்டு நூற்றாண்டுகள் கழித்து பிரிட்டிஷ் டாக்டர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், பால் கறந்து விநியோகம் செய்யும் பெண்களுக்கு லேசான பசுஅம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதையும் அவர்களுக்கு மிகவும் அரிதாகவே பெரியம்மை தாக்குவதையும் கண்டார்.

பெரியம்மை (Smallpox) மிகவும் கொடுமையான தொற்றுநோய். இந்த நோய் தாக்கியவர்களில் 30 சதவீதத்தினர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தோர் பெரும்பாலும் உடல் நிறைய தழும்புகளைக் கொண்டிருந்தனர். அல்லது பார்வையிழந்திருந்தனர்.

1796ஆம் ஆண்டு ஜென்னர், எட்டு வயது நிரம்பிய ஜேம்ஸ் பிப்ஸ் மீது சோதனையை மேற்கொண்டார்.

பசு அம்மையின் புண்ணில் இருந்து சீழினை அந்த சிறுவனிடம் செலுத்தினார். அவன் உடலில் உடனடியாக அறிகுறிகள் தென்பட்டன.

பிப்ஸ் குணமடைந்ததும், அவன் மீது பெரியம்மை கிருமியை செலுத்தினார். ஆனால் அவன் ஆரோக்கியமாக இருந்தான். பசு அம்மை அவனை பெரியம்மை நோயின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியது.

1798ஆம் ஆண்டு இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இருந்துதான் வேக்சின் (VACCINE) என்ற சொல் உருவானது. Vacca என்ற சொல் லத்தீன் மொழியில் பசு என்று பொருள். அந்த சொல்லிலிருந்துதான் வேக்சின் என்ற சொல் உருவாக்கப்பட்டது.

இதனால் கிடைத்த வெற்றி என்ன?

கடந்த நூற்றாண்டில் பல நோய்களின் தாக்கத்தை வெகுவாக குறைக்க இந்த தடுப்பூசிகள் உதவின. 1960களில் முதன் முறையாக தட்டம்மை நோய்கு எதிரான தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பு வரை, சுமார். 26 லட்சம் பேர் ஆண்டு தோறும் தட்டம்மையால் உயிரிழந்து வந்தனர்.

தடுப்பூசிகள் காரணமாக 2000 முதல் 2017 வரை 80 சதவீத தட்டம்மை நோய் மரணங்கள் குறைந்தன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

சில பத்தாண்டுகள் முன்னர் வரை, போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்களுக்கு முடக்குவாதம் அல்லது மரணம் ஏற்பட்டு வந்தது மிகவும் கவலையளித்த ஒன்றாக அமைந்தது. இப்போது போலியோ நோயே இல்லாமல் போய்விட்டது.

சிலர் ஏன் தடுப்பூசி வேண்டாம் என்கிறார்கள்?

தடுப்பூசிகள் குறித்த சந்தேகம் நவீன ஊசி மருந்துகள் மீதான சந்தேகம் போன்றே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு மத ரீதியான காரணங்களால் பயந்து இருந்தனர். தடுப்பூசிகள் சுத்தமில்லாதவை என்றும், அவர்கள் கருதினார்கள். தடுப்பூசி போட வேண்டுமா வேண்டாமா என்ற தங்கள் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட சந்தேகமாக இது அமைந்தது.

1800களில் தடுப்பூசிகள் எதிர்ப்பு அணிகள் பிரிட்டன் முழுவதும் தோன்றின, இதன் காரணமாக தடுப்பூசிகளுக்க மாற்றாக மாற்று மருந்துகளை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். நோயாளியை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

1870களில் முதலாவது தடுப்பூசி எதிர்ப்பு குழு அமெரிக்காவில் பிரிட்டிஷ் தடுப்பூசி எதிர்ப்பாளர் வில்லிம் டெப் என்பவரால் தொடங்கப்பட்டது.

சமீபத்திய வரலாற்றில் தடுப்பூசியை எதிர்த்த முக்கியமான நபர்களில் ஒருவர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட்

1998ல் லண்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எம்.எம்.ஆர். (Measles, Mumps, and Rubella – MMR) தடுப்பூசியுடன் ஓட்டிசம் (Autism) மற்றும் குடல் நோய்க்கு வழிவகுக்கிறது என்று தவறான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

எம்.எம்.ஆர். என்பது இளம் குழந்தைகளுக்கு தட்டம்மை (Measles), தாளம்மை (Mumps) மற்றும் ரூபெல்லா அல்லது ஜெர்மனி தட்டம்மையின் (German Measles) தாக்குதலுக்கு எதிராக செலுத்தப்படுகிறது.

அவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வேக்ஃபீல்ட்டின் பெயர் இங்கிலாந்தின் மருத்துவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டாலும், இங்கிலாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

2004ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் 10000 குழந்தைகள் எம்.எம்.ஆர். தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தடுப்பூசிப் பிரச்சினை பெரும்பாலும் அரசியல் படுத்தப்பட்டு வருகிறது.

இத்தாலியின் உள்துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி, தடுப்பூசி எதிர்ப்பு குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எவ்வித ஆதாரமும் இன்றி, தடுப்பூசிகளை ஓட்டிசம் நோயுடன் இணைத்தார். ஆனால் மிக சமீபத்தில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள் மீதான மனப்போக்கு தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று, தடுப்பூசிகள் மீதான மக்களின் நமபிக்கை பொதுவாக நன்றாக உள்ளதாக தெரியவந்தாலும், ஐரோப்பாவின் பகுதிகளில் இந்த நம்பிக்கை மிகவும் கீழே உள்ளதும், பிரான்சில் இந்த நம்பிக்கை மிகவும் குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆபத்துகள் என்ன?

மக்களில் அதிக அளவிலானோருக்கு தடுப்பூசி போடப்படும்போது இந்த நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த நோய் பாதிக்கக்கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு திறன் மேம்படாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோய் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.

இதற்கு மந்தை நோய் எதிர்ப்புத்திறன் என்று பெயர். இது உடையும் போது மக்கள் தொகையில் பலருக்கும் இந்த நோய் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.

இந்த இனக்குழு / மந்தை நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்க, மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க விகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது நோய்க்கு நோய் மாறுபடுகிறது. தட்டம்மைக்கு இது 90% ஆக இருக்கும் நிலையில் குறைந்த தொற்றுத் தன்மை கொண்ட போலியோவிற்கு 80% ஆகும்.

அமெரிக்காவில் புரூக்ளினில் பழமைவாத யூதர் சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறும் தவறான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன..

இதே சமூகத்தினரிடையே தான் அமெரிக்காவில் தட்டம்மை பெரிய அளவில் பரவும் மையமாக கடந்த பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.

தடுப்பூசிகளுக்கு எதிரான பொய் பிரசாரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமளவு பரப்பப்பட்டு மக்கள் முட்டாளாக்கப்படுவதாக இங்கிலாந்தின் மிகவும் மூத்த மருத்துவர் கடந்த ஆண்டு எச்சரித்து இருந்தார். அமெரிக்க ஆய்வாளர்களும், தடுப்பூசிகளுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை ரஷ்யர்கள் போலியாக இயக்கும் சமூகவலைத்தள கணக்குகள் மூலம் பரப்பப்படுவதை கண்டறிந்தனர்.

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் விகிதாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக 85 சதவீதத்திலேயே மாறாமல் இருந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆண்டுதோறும் தடுப்பூசிகள் காரணமாக உலகெங்கும் இருபது முதல் முப்பது லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தடுப்பூசிகளுக்கு மிகப்பெரிய சவால்களை வழங்கும் நாடுகள் மற்றும் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வோரின் குறைந்த விகிதமும் உள்ள நாடுகள் வரிசையில், போர் மற்றும் குறைந்த சுகாதார பேணல் முறை உள்ள நாடுகள் இடம்பெறுவது தெரியவந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான், அங்கோலா மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசு போன்ற நாடுகளாகும்.

ஆனால், வளர்ந்த நாடுகளில் முக்கிய பிரச்சினை அவை தன்னிறைவு உணர்வுடன் இருப்பதுதான் என்று உலக சுகாதார நிறுவனம் இனம் கண்டுள்ளது. இன்னும் தெளிவாக சொன்னால், மக்கள் ஒரு நோய் என்ன தீங்கினை விளைவிக்கும் என்பதை மறந்துவிட்டதுதான்.

பிபிசி தமிழ்

Exit mobile version