Site icon சக்கரம்

ரட்னஜீவன் ஹூலுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடிவு

Professor Ratnajeevan Hoole: The Election Commission Believes the ...

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின்  செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசியலமைப்பு பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்க தீர்மானித்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பேராசிரியர் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார்.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவில்  மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஆணைக்குழுவின் தவிசாளராக நான்  நியமிக்கப்பட்டுள்ள ஆரம்ப காலம் தொட்டே பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகவே  காணப்பட்டன. ஆனால் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரது குறுக்கீடுகள் தடையாக அமையவில்லை. ஆணைக்குழு உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்பை கூட பல சந்தர்ப்பங்களில் அவர் மீறியுள்ளார். இதனை நான் பல தடவை அவரிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன்.

ஆனால் பேராசிரியர் ஹூல் ஆணைக்குழு தீர்மானங்களுக்கு முரண்பட்டவராகவே எப்போதும் காணப்படுகின்றார். அவர் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை ஆணைக்குழுவிலும் வெளியேயும் தெரிவித்து வருகின்றார். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள் முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். முடிவுகளில் எவரொரு உறுப்பினரும் முரண்பட முடியாது. இந்த நிலையில் பேராசிரியர் ஹூல் ஆணைக்குழு கூட்டங்களில் பங்கேற்று எடுக்கப்படும் முடிவுகள் ஆலோசனைகள் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் இறுதியில் அவருக்கு ஆதரவு அளித்து விட்டு  வெளியே விமர்சித்து வருகின்றார். இந்த விமர்சனங்களால் ஆணைக்குழு பெரும் சவாலுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version