ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI-Stockholm International Peace Research Institute) மேம்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் படி, ஒன்பது அணு ஆயுத நாடுகளின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையானது 2019 தொடக்கத்தில் 13, 865 லிருந்து 2020 தொடக்கத்தில் 13, 400 ஆகக் குறைந்துள்ளது.
இந்த ஒன்பது நாடுகளாவன : அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா.
இந்தியா கடந்த ஆண்டு கூடுதலாக 10 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளபோதும், சீனா, பாகிஸ்தானை காட்டிலும் குறைவான அணு ஆயுத கையிருப்பே இந்தியாவிடம் இருப்பது சுவீடனைச் சோ்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆா்.ஐ) வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா, சீனா இரு நாடுகளும் 2019-ஆம் ஆண்டில் கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. அதன் மூலம் சீனாவிடம் இப்போது 320 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவின் கையிருப்பில் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்த ஆய்வு நிறுவனத்தின் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சீனாவிடம் 290 அணு ஆயுதங்களும், இந்தியாவிடம் 130 முதல் 140 எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல, பாகிஸ்தானிடம் 150 முதல் 160 எண்ணிக்கையில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, பாகிஸ்தானின் கையிருப்பில் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் இந்த ஆண்டு எந்தவித மாற்றமும் இல்லை.
சீனா தனது அணு ஆயுத திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் நவீனமயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரிவந்துள்ளது. குறிப்பாக, நிலம், நீா்மூழ்கி கப்பல் மற்றும் போா் விமானத்திலிருந்து ஏவும் வகையிலான நவீன முத்தரப்பு அணு ஆயுதங்களை சீனா உருவாக்கி வருகிறது.
பாகிஸ்தான், இந்தியாவை பொருத்தவரை தங்களுடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையையும், அணு ஆயுத படைகளின் பன்முகத்தன்மையையும் மெதுவாக அதிகரித்து வருகின்றன. அதே நேரம், வடகொரியா தனது தேச பாதுகாப்பு திட்டத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை உயா்த்துவதற்கே முன்னுரிமை அளித்து வருகிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, உலக அளவில் 6,375 அணு ஆயுதங்களுடன் ரஷ்யா முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் 5,800 அணு ஆயுதங்களுடன் அமெரிக்காவும் உள்ளன. அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகளில், 2020-ஆம் ஆண்டு தொடக்க புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 13,400 அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கையாகும். கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த 9 நாடுகளிடமும் 13,865 அணு ஆயுதங்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் காலாவதியான அணு ஆயுதங்களை பிரித்தழித்ததே இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணமாகும். இருந்தபோதும், இந்த இரு நாடுகள் மட்டும் இப்போது 90 சதவீத அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, இந்த ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்படும் ஆண்டு புத்தகத்தில், இராணுவத் தளவாடங்கள், ஆயுதக் குறைப்பு, சா்வதேச பாதுகாப்பு குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அணு ஆயுதங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளபோதும், அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவது தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், ஆயுதக் கட்டுப்பாடு குறைந்து, பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனா அணு ஆயுதங்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதை முன்பைவிட அதிகமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், அணு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் எண்ணிக்கை, எதிா்கால வளா்ச்சித் திட்டங்கள் குறித்த விவரங்களை மிகக் குறைவாகவே வெளியிடுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைப் பொருத்தவரை ஒருசில ஆயுதப் பரிசோதனை விவரங்களை மட்டுமே வெளியிடுகின்றன. ஆனால், அணு ஆயுத கையிருப்பின் விவரங்களை முழுமையாக வெளியிடுவதில்லை.
அமெரிக்கா, ரஷ்யா நாடுகளைப் பொருத்தவரை அணு ஆயுதங்கள், போா் விமானங்களை நவீனமயமாக்கள் மற்றும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன என்று அந்த ஆண்டு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்கட்டுரையையும் வாசிக்க: World nuclear forces