-கே.மாணிக்கவாசகர்
இலங்கையில் 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பேசுபொருளாக எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற விடயம் இல்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும், அவரது சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் தலைமையிலான அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்ற விடயமே அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் அலசப்பட்டு வருகின்றது.
தற்போதைய கள நிலவரங்களின்படி, தற்போதைய அரசாங்கம் போதிய அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிபீடம் ஏறும் என்பது ஐயத்திற்கு இடமில்லை என்ற போதிலும், அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
ஆனால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தமக்கு அவசியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது. புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கு தமது அரசாங்கம் எண்ணியுள்ளதால் தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பது அரசாங்கத்தின் வாதமாக இருக்கின்றது. (ஆனால் மைத்திரி – ரணில் தலைமையில் இருந்த கடந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வருவது குறித்து பேசியபொழுது ‘புதிய அரசியலமைப்புத் தேவையில்லை, தற்போதைய அரசியமைப்பில் தேவையான திருத்தங்கள் செய்தால் போதும்’ என மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியவர் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும்)
சரி, என்ன காரணத்துக்காக அரசாங்கம் புதிய அரசியலமைப்பை விரும்புகிறது என்பது மிகவும் கவனத்திற்குரியது. தற்போது நடைமுறையிலிருக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1978இல் கொண்டுவந்த அரசியல் சட்டம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்ட எதேச்சாதிகாரம் மிக்கது என்றால், ஏன் அதை நீக்குவதற்கு சந்திரிக குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் நான்கு பதவிக் காலங்களின் போது முயற்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
எனவே, அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றைக் கொண்டுவர விரும்புவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறன என்பது தெளிவாகின்றது. அதில் ஒன்று, கடந்த அரசாங்கம் கொண்டுவந்த 18ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பது ஆகும். இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலமாகவே மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் தடுக்கப்பட்டார். அதுமாத்திரமின்றி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவரின் வயதை 35ஆக வரையறுத்ததின் மூலமாக மகிந்தவுக்குப் பதிலாக அவர் புதல்வர் நாமல் போட்டியிடுவதும் தடுக்கப்பட்டது. பொதுவாகப் பார்க்கையில் 18ஆவது திருத்தச் சட்டம் நல்ல பல விடயங்களைக் கொண்டுள்ளது போலத் தோன்றினாலும், ராஜபக்ச குடும்பத்தின் அதிகார நீடிப்பையும் வளர்ச்சியையும் தடுப்பதற்காகவே முன்னைய ஐ.தே.க. அரசால் கொண்டுவரப்பட்டது என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை.
இது ஒருபுறமிருக்க, தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வேண்டி நிற்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருப்பதாக சில அரசியல் வட்டாரங்களில் ஊகமும் அச்சமும் வெளிப்படுத்தப்படுகின்றது. அதாவது, தற்nhழுது தமிழ் மக்களுக்கு ஓரளவாவது அதிகாரப் பகிர்வை வழங்கி நிற்கும் மாகாண சபை முறைமைக்குக் காரணமான 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதும் அரசாங்கத்தின் நோக்கம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில், இலங்கையின் பிரதான ஆளும் கட்சிகள் இரண்டும் ஒற்றையாட்சியையே தமது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருப்பவை. எவ்விதத்திலும் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பவை. அதிலும் இன அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை முற்றுமுழுதாக எதிர்ப்பவை. அதன் காரணமாகவே இனப் பிரச்சினைத் தீர்வுக்கென 1957இல் ஏற்படுத்தப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம், 1965இல் டட்லி – செல்வா செய்து கொண்ட மாவட்ட சபை ஒப்பந்தம், 1978இல் ஜே.ஆரும் அமிர்தலிங்கமும் செய்து கொண்ட மாவட்ட அபிவிருத்திச் சபை ஒப்பந்தம், 2000 ஆண்டில் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுப்பொதி எல்லாமே நடைமுறைக்கு வராமல் தோல்வி கண்டன.
இந்த நிலைமையில், 1987இல் இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் மட்டுமே நீடித்து நிற்பதுடன், அதன் பெறுபேறான மாகாண சபை முறை ஓரளவு நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது. இந்த ஒப்பந்தமும் இலங்கை அரசியல் கட்சிகளால் விரும்பி வரவேற்கப்பட்ட ஒன்றல்ல.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசு சார்பாக கையெழுத்திட்ட அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். விருப்பமின்றியே இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக அதில் கையெழுத்திட்டார். அவரது அரசாங்கத்தின் பிரதமரான ஆர்.பிரேமதாச தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தை முற்றுமுழுதாக எதிர்த்துப் புறக்கணித்தனர்.
அதேபோல, சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒப்பந்தத்தை எதிர்த்தது. ஜே.வி.பி. உட்பட அனைத்து சிங்கள இனவாத இயக்கங்களும் கூட ஒப்பந்தத்தை எதிர்த்தன. இந்தியாவின் அழுத்தம் காரணமாக அ.அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஒப்பந்தத்தை ஆதரித்த போதிலும் புலிகள் அதை எதிர்த்ததுடன், அமிர்தலிங்கத்தையும் கொலை செய்து, பிரேமதாச அரசுடன் இணைந்து இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரும் புரிந்தனர். புலிகளால் அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட பின்பு தலைமைக்கு வந்த இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், இந்திய – இலங்கை ஒப்பந்தம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வல்ல என்று சொல்லி ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தலையும் புறக்கணித்தனர்.
இந்த ஒப்பந்தத்தை மனப்பூர்வமாக ஆதரித்த இரு கட்சிகள் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் மட்டுமே. அதன் காரணமாக ஜே.வி.பியினர் கம்யூனிஸ்ட் கட்சியின் சில உறுப்பினர்களைக் கொலை செய்ததுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டியு குணசேகரவையும் கொலை செய்வதற்கு பல தடவைகள் முயன்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதின் மூலம் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழித்தால் அதற்கு இலங்கையில் பெரிதாக எதிர்ப்பு எதுவும் வரப்போவதில்லை. அதுமட்டுமின்றி, இந்தியாவின் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் தற்போதைய நரேந்திரமோடி தலைமையிலான அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் இந்திய அரசு தடுத்து நிறுத்தப் போவதுமில்லை.
ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் சட்டத்திலிருந்து நீக்குவதானால், இலங்கை அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. தற்போதைய சூழ்நிலையில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலின் மூலம் தற்போதைய அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. ஆனால் இந்த சட்டத்தை நீக்குவதில் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கிடையில் ஒருமைப்பாடு இருப்பதால், ஐ.தே.கவின் இரு பிரிவுகளையும் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏன் தேவை ஏற்பட்டால் ஜே.வி.பியும் கூட அரசுக்கு ஆதரவளிக்கக்கூடும்.
இவையெல்லாவற்றையும் விட ஒரு அதிசயமான விடயமும் நடக்கக்கூடும். மாகாண சபை முறைமை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்று சொல்லிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ‘தேவையேற்பட்டால் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற ஆதரவளிப்போம்’ என ஏற்கெனவே அறிவித்துவிட்டதால், 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதில் அரசுக்கு ஆதரவளிக்கக்கூடும்!
எதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருந்தும் ஒரு கருத்தைச் சொல்வது அவசியம். இலங்கை போன்ற ஒரு முதலாளித்துவ நாட்டில் ஏற்கெனவே ஜனாதிபதியிடம் முழு நிறைவேற்று அதிகாரமும் குவிந்து இருக்கையில், அவரது கட்சிக்கே நாடாளுமன்றத்திலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் வழங்குவது ஜனநாயகத்துக்கு அவ்வளவு நல்லதல்ல.