அறுதிப் பெரும்பான்மை பெற்ற அரசின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ இன்று களனி ரஜமஹா விகாரையில் பதவியேற்கின்றார்.
இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) பதவியேற்றார். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.
அவரது இன்றைய பதவியேற்பைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கான ஆலோனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொது ஜன பெரமுன கட்சி ஏற்கனவே அறிவித்தவாறே முன்னைய அரசாங்கங்களைப் போலல்லாது குறைந்த அங்கத்தவர்களைக் கொண்டதாக ஒரு முன்மாதிரியான அமைச்சரவையை அமைக்கவுள்ளது.
கடந்த நவம்பர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியமை, நாடு வளமான எதிர்காலமொன்றினை நோக்கி நகர்வதைக் கட்டியம் கூறியது. கொவிட் அச்சுறுத்தலால் நாடு இத்துணை நாட்கள் முடங்கியிருந்ததாலும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டதாலும் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் பொதுத் தேர்தலில் ஈட்டப்பட்டிருக்கும் அறுதிப் பெரும்பான்மை எனும் பலம் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கின்றது.
உருவாக்கப்பட்ட ஐந்து வருட காலங்களுக்குள் பொதுஜனபெரமுன உள்ளூராட்சி மன்றத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் என்று தனது வெற்றியை அமோகமாகப் பதிவு செய்திருக்கின்றது. மிகக் குறுகிய காலத்தில் ஜனாதிபதிப் பதவி மற்றும் பாராளுமன்ற அதிகாரம் என்பன பொதுஜனபெரமுனவின் வசம் வந்திருக்கிறது.
ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய தேர்தலில் நின்றபோது வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் அவருக்கு எதிராகவே வாக்களித்தனர். ஆனாலும் சிறுபான்மையினத்தவரின் வாக்குகளின்றியே நாட்டுத் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதை உணர்த்திச் சென்றது அந்தத் தேர்தல்.
ஆனால் மிகக்குறுகிய காலப்பகுதியிலேயே வடக்கு கிழக்கின் மக்களும் தென்பகுதி மக்களைப் போன்றே வாக்களிக்க தலைப்பட்டிருப்பதை இம்முறை இடம்பெற்ற தேர்தல்கள் உணர்த்தியுள்ளன. பாரம்பரியமாக தாம் வாக்களித்த கட்சிகளை அவர்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளதைத் தேர்தல் முடிவுகள் துலாம்பரமாக எடுத்துக்காட்டியுள்ளன. தெற்கின் பழம்பெரும் கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இம்முறை தேர்தல்களில் முகவரி இழந்துள்ளன.
வட, கிழக்கு தமிழ் மக்களும் தென்பகுதி மக்களும் இம்முறை ஒரு முகப்பட்டு வாக்களித்துள்ளனர். வழமையாக தென்பகுதியில் சிங்கள மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனரோ அதற்கு எதிராகவே தமிழ் மக்கள் வாக்களிப்பர் என்ற வழக்கம் இம்முறை மீறப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த பாடமோ என்னவோ தாம் பாரம்பரியமாக வாக்களித்த கட்சிகளை நிராகரித்து விட்டு தெற்கின் தேசிய கட்சிகளுக்கோ அல்லது அவற்றுக்குச் சார்பானவற்றுக்கோ வட, கிழக்கின் தமிழ் மக்கள் இம்முறை வாக்களித்திருக்கின்றார்கள்.
இதுவரை காலமும் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு என்று தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை அவர்கள் உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள் என்பதைத் தான் இந்த பொதுத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் ஏனைய பெரிய கட்சிகளைப் போலல்லாமல் நிறைவேற்றபட முடியாத வாக்குறுதிகள் எவற்றையும் பொதுஜன பெரமுன வழங்கிவிடவில்லை. பிளவுபடாத இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தரவல்ல அறுதிப் பெரும்பான்மையை கொண்ட அரசே அமையப் போகின்றது என்பதால் அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறுகின்றது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது.
நாட்டில் ஸ்திரமான ஆட்சி வேண்டுமெனில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டியது அவசியம் என்பார்கள். இம்முறை எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. சுமார் ஐந்து மாதம் எனும் குறுகிய காலப்பகுதியில் அது தன்னை எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது.
ஆனால் அறுதிப் பெரும்பான்மை கொண்ட அரசின் சிறப்பான ஆட்சிக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்க வேண்டியது அவசியமானது.
கொவிட் 19 ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்கும் பாரிய பொறுப்போடு ஆட்சிக்கு வரும் புதிய அரசு, கடந்தகால நல்லாட்சி அரசால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கான புதிய திட்டங்கள் மற்றும் தீர்வுகளோடும் கடந்தகால அரசாங்கங்களின் தோல்விகளைப் படிப்பினையாகக் கொண்டும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.