–கே.மாணிக்கவாசகர்
ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன 145 உறுப்பினர்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 05 உறுப்பினர்கள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடிய வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதால் அரசுக்கு அதைப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
தற்போதைய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் அது தான் விரும்பியதைச் சுலபமாக நிறைவேற்ற முடியும். அந்த வகையில் அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பதுதான் தற்போதைய கேள்வி.
தற்போதைய அரசியலமைப்புக்கு 20ஆவது திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதுதான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாகவும் நடவடிக்கையாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. பெரும்பாலும் செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் 20ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் இயல்பாகவே முன்னைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் சமர்ப்பித்த 19ஆவது திருத்தம் செல்லுபடியற்றதாகிவிடும். அந்த திருத்தச் சட்டத்தை மகிந்த ராஜபக்சவும் அவரது கட்சியினரும் ஆரம்பித்தில் இருந்தே எதிர்த்து வந்துள்ளனர். குறிப்பாக அந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என வரையறுக்கப்பட்டிருந்தது. அது 2015இல் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவை குறி வைத்தே கொண்டு வரப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 20ஆவது திருத்தச் சட்டத்திலும் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்ற சரத்து நீக்கப்படாமல் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவே அந்த சரத்து நீடிப்பதை விரும்புகிறார் எனவும் கூறப்படுகிறது. அதற்கான காரணம் அவரது சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்ச இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக நீடிப்பதை மகிந்த விரும்பவில்லை என்பது அரசியல் நோக்கர்கள் சிலரின் அபிப்பிராயம். கோத்தா இரு தடவைகளை நிறைவு செய்ததும் தனது புதல்வர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு கோத்தா வழிவிட வேண்டும் என்பது மகிந்தவின் கருத்து எனவும் அந்த நோக்கர்கள் கூறுகின்றனர். ‘தாயும் பிள்ளையும் ஒன்றென்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா?’ எனக் கூறப்படும் முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது.
இதுதவிர, முன்னைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் சம்பந்தமான சரத்தும் அப்படியே நீடிக்கும் எனத் தெரிய வருகிறது. அப்படி நீடித்தால் அது நல்ல விடயமே.
அரசியல் அமைப்புத் திருத்தம் ஒருபுறமிருக்க, அரசாங்கம் எதிர்நோக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டிய வேறு முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் முதலாவது விடயம் சரிந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்வதாகும்.
1977ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டின் பிரதான வருவாயாகவும், அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த பிரதான ஊற்றுமூலமாகவும் திகழ்ந்தது மலையக பெருந்தோட்டங்களில் உற்பத்தியான தேயிலை, இறப்பர், கோப்பி என்பனவே. அந்த நிலைமையை 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மாற்றியமைத்தது.
ஜே.ஆரின் ஆட்சியில் இலங்கையர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்த வேலை வாய்ப்பும், புதிதாக உருவாக்கப்பட்ட சுதந்திர வர்த்தக நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தைத்த ஆடைகளின் ஏற்றுமதியும் அந்நியச் செலாவணி தேட்டத்தில் பங்கு வகிக்க ஆரம்பித்தன. பின்னர் சந்திரிக மற்றும் மகிந்த ஆட்சிக் காலங்களில் சுற்றுலாத் துறையும் அதனுடன் சேர்ந்து கொண்டது. அத்துடன் யுத்தம் காரணமாக மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் உறவுகளுக்கு அனுப்பும் பணமும், யுத்தம் முடிவுற்ற பின்னர் அவர்களது தாயக வரவும் இலங்கைக்கு கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்தது.
ஆனால் இந்த வருட முற்பகுதியில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா நோய் வைரசின் தாக்கம் இலங்கையையும் மோசமாகத் தாக்கியது. இந்த நோய் சீனாவில் முதன்முதலில் தோன்றியதால் அங்கிருந்து பெருமளவில் இலங்கைக்கு சுற்றுலா வந்த சீனர்களின் வருகை நின்று போனது. அந்த நோய் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் நின்று போனதால் ஏனைய அந்நிய நாட்டவர்களும், புலம்பெயர் இலங்கையர்களும் இலங்கை செல்வது முற்றாக நின்று போனது. அதன் காரணமாக இலங்கையின் நிதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் அரசாங்கத்தின் மேலதிக செலவீனங்கள் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளன. கொரோனா தடுப்புக்கான மருத்துவச் செலவுகள், பொதுமக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகள் வழங்கியமை, தொழில் நிறுவனங்கள் இயங்காமல் போனமை, விவசாயம் முடங்கிப் போனது, கடல் தொழில் நொடித்துப் போனது என பல வகைகளில் அரசாங்கத்துக்கு பல வழிகளில் செலவு ஏற்பட்டது.
எனவே இந்த நிலைமையில் இருந்து விடுபட சரியான பொருளாதாரத் திட்டங்களை வகுத்து தேக்க நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்ய வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றது. ஐ.தே.க. செய்தது போல நாட்டின் வளங்களை மலிவு விலையில் அந்நியருக்குத் தாரைவார்த்தோ அல்லது வெளிநாடுகளிடமிருந்து அறா வட்டிக்கு மேலும் மேலும் கடன்களைப் பெற்றோ இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது கண்களை விற்று சித்திரம் வாங்கியதிற்குச் சமமானதாகும்.
இலங்கை போன்ற சிறிய, பொருளாதார வளம் குன்றிய நாடுகள் அந்நிய உதவி இன்றி தம்மை வளப்படுத்திக் கொள்வது சிக்கலானதுதான். ஆனால் அந்நிய உதவியை நாடுவதற்கு முதல் முதலில் தனது வளங்களைப் பயன்படுத்தி சொந்தக் காலில் எழுந்து நிற்பதற்கு முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு இலங்கை போன்ற சின்னஞ்சிறு தீவு நாடான கியூபா கண்ணுக்கு முன்னே ஒரு உதாரணமாக இருக்கின்றது.
இலங்கை சிறந்த நில, நீர், கடல், வன வளம் கொண்ட நாடு. அரசாங்கம் சரியான முறையில் மக்களுக்கு உதவிகள் செய்து ஊக்குவித்தால் நாடு உணவில் தன்னிறைவு அடைவதுடன், உற்பத்தியாகும் மேலதிக உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியையும் சம்பாதிக்க முடியும். அதேநேரத்தில் நாடு பரந்த ரீதியில் சிறிய – நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் சில பொருட்களை பெரும் பணச் செலவில் இறக்குமதி செய்வதையும் தவிர்க்கலாம்.
பொருளாதார விடயம் தவிர அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை வழங்கி அவர்களின் மனக்குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகும். இந்த விடயத்தில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் தமிழர் தரப்புடன் கடந்த காலங்களில் செய்த பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், ஜே.ஆர். – அமிர்தலிங்கம் ஒப்பந்தம், சந்திரிகவின் தீர்வுத் திட்டம் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாகவே தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் உருவாகி நாட்டை பேரழிவுக்கு இட்டுச் சென்றது. அதிலிருந்து தற்போதைய அரசாங்கம் பாடம் படிப்பது அவசியமானது.
நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரேயொரு ஒப்பந்தம் இந்தியாவின் தலையீட்டால் 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாகவே அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபைகள் முறைமை நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தமிழர் தரப்பில் யாரும் கைச்சாத்திடாத போதும், பல்வேறு தப்பினரின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று 13ஆவது திருத்தத்துக்கு பெரிய எதிர்ப்புபகள் எதுவும் நாட்டில் இல்லை.
ஆனால் இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வு அல்ல என்ற கருத்தும் தமிழர்கள் மத்தியில் இருக்கின்றது. அதேநேரத்தில் இந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும் இருக்கின்றது. இருப்பினும் இலங்கையின் யதார்த்த சூழல் சம்பந்தமான நிலையையும் கவனத்தில் எடுத்தாக வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைத் தீர்வு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் வெவ்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. அவற்றுள் தமிழ் காங்கிரஸ் முன்வைத்த ஐம்பதுக்கு ஐம்பது, லங்கா சமசமாஜக் கட்சி முன்வைத்த சம அந்தஸ்து, கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த பிரதேச சுயாட்சி, தமிழரசுக் கட்சி முன்வைத்த சமஸ்டி, தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தனித்தமிழ் ஈழம் என்பன அடங்கும். கட்சிகள் வெவ்வேறு ஆலோசனைகளை முன்வைத்தாலும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட போது பிராந்திய அடிப்படையை வைத்தே செய்யப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இன்று தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்கான சூழல் அறவே இல்லை. அதேபோல சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான சூழலும் இல்லை. ஒரேயொரு வாய்ப்பு வலுவான மத்திய அரசொன்றின் கீழ் பிராந்திய அடிப்படையில் அதிகாரங்களைப் பகிர்வதற்கான சூழலே நிலவுகின்றது. அப்படியான ஒரு நிலை இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான மாகாண சபை முறையில் உள்ளது. எனவே சரியான முறையில் அதை தமிழர் தரப்பு பயன்படுத்துவது குறித்து சிந்திப்பதே பொருத்தமானது.
இன்றைய அரசாங்கத்துக்கு எதிரான தரப்பில் அமர்ந்துள்ள பிரதான தமிழ் அரசியல் தரப்பும் சரி, அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழர் தரப்புகளும் சரி இந்த விடயத்தில் ஒரே கண்ணோட்டத்துடனும் கொள்கையுடனும் செயல்பட வேண்டும். எட்டாத கனியை ஒரே எட்டில் பறிக்க முயற்சிப்பதை விட, முதலில் மரத்தில் ஏறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அந்த வகையில் மாகாண சபைகளுக்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாகப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் அதன் மூலம் தமிழ் மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். அதை விடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள ஒரு அரசாங்கத்துடன் கடந்த காலங்களைப் போல வீம்புக்கு மல்லுக்கட்ட முயன்றால் இருப்பதையும் இழக்கும் நிலைகூட ஏற்படலாம்.
அரசாங்கத்துக்கும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்புண்டு. அது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இனிமேலும் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிக்காமல் அவற்றை முழுமையாக வழங்க முன்வர வேண்டும். நிறைவேற்று அதிகாரமும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ள ஒரு அரசாங்கம் தனது நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் சில அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொடுத்து நாட்டில் நிலையான சமாதானத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதால் எந்தப் பாரிய பிரச்சினையும் வரப் போவதில்லை.
புதிய அரசாங்கத்துக்கு முன்னால் உள்ள இரண்டு பிரதான பிரச்சினைகள் பொருளாதார அபிவிருத்தியும் இனப் பிரச்சினைத் தீர்வுமாகும். இதைப் புரிந்து கொண்டு செயல்படுவதில்தான் தற்போதைய அரசாங்கத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. தமிழர் தரப்புக்கும் இது பொருந்தும்.