Site icon சக்கரம்

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

Mahinda Rajapaksa sworn in as Sri Lanka's PM after record victory | News |  Al Jazeera

லங்கை அரசியல் வரலாற்றில் யுகபுருஷர் என்னும் அடையாளத்தை உருவாக்கியுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஓகஸ்ட் 9ந் திகதி நான்காவது தடவையாக இந்நாட்டின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். தெற்கின் ராஜபக்‌ஷ பரம்பரையில் உதித்தவர் அவர்.

வணிக சிந்தாமணி மொஹொட்டி தொன் அந்தியஸ் ராஜபக்‌ஷ ஒல்லாந்தருக்கு எதிராக தெற்கில் போராட்டத்தை வழிநடத்திய வீர சேனாதிபதியாவார். பின்னர் வீர கெப்பெட்டிபொலவுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக களத்தில் இருந்தார். பிற்காலத்தில் ஏகாதிபத்திய வெள்ளையர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவரின் பேரனான தெற்கின் சிங்கம் என பிரபலமான டி. எம். ராஜபக்‌ஷ மற்றும் டீ. ஏ. ராஜபக்‌ஷவின் பங்களிப்பும் கிடைத்தது.

அரச மந்திரிகள் சபையை பிரதிநிதித்துவம் செய்த தெற்கு சிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் டீ. ஏ. ராஜபக்‌ஷவுக்கு அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் வயல் ஓடையில் கையைக் கழுவிய பின்னர் வேட்பாளர் மனுவில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகின்றது. அரசியலை விரும்பாத எளிமையான கிராமவாசியான அவர், பொதுமக்களின் வேண்டுகோளுக்காக அரச பிரதிநிதிகள் சபைக்கு ஹம்பாந்தோட்டை இடைத்தேர்தலில் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.

1951ம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய போது அவரின் நிழலாக டீ. ஏ.வும் எதிர்க்கட்சியில் அமர்ந்தார். 1952இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது பண்டாரநாயக்கவோடு இணைந்தார். டீ. ஏ. வின் மறைவுக்குப் பின்னர் அவரின் சேவையை லக்ஷ்மன் ராஜபக்‌ஷவும், ஜோர்ஜ் ராஜபக்‌ஷவும் முன்னெடுத்துச் சென்றார்கள்.

1970ம் ஆண்டு அமரர் ராஜபக்‌ஷவின் புதல்வரொருவரை தேர்தலில் நிறுத்தும் தேவை சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கு ஏற்பட்டது. அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து தந்தை, தாயாரின் வழிகாட்டலுடன் மஹிந்த ராஜபக்‌ஷ 24வயதில் பாராளுமன்றத்துக்கு வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர் என்னும் சாதனையுடன் பிரவேசித்தார்.

1977ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முன்னணி அரசு தோல்வியடைந்ததுடன் முதற் தடவையாக முல்கிரிகல தொகுதியும் ராஜபக்‌ஷவிடமிருந்து கைநழுவியது. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பெலியத்தை தொகுதியும் கிடைக்கவில்லை. 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கம் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் குடியுரிமையையும் பறித்தது. அத்துடன் தேர்தலையும் நிறுத்தி விட்டது.

1982ம் ஆண்டு குடம், விளக்கு என்னும் பெயரில் சர்வஜன வாக்கடுப்பு மூலமாக அரச நிர்வாகத்தை நீடிக்க ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார். 1985ம் ஆண்டு முல்கிரிகல இடைத்தேர்தலில் போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்ய ஐ.தே. கட்சி முயற்சி செய்தது. அவர் பொலிஸில் சரண​ைடந்தார். ஆயினும் போலி குற்றச்சாட்டின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கைவிலங்குகளுடனேயே கலந்து கொண்டார்.

1987ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து தெரிவானார். அவருடன் மூத்த சகோதரர் சமல் ராஜபக்‌ஷவும் தெரிவானார். 1988/1989புரட்சி காலத்தில் விசேடமாக தென்மாகாணம் உள்ளிட்ட அனைத்து பாகங்களிலும் இளைஞர்கள் பலர் கொன்றொழிக்கப்பட்ட வேளையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவும் மனித நேயமிக்க சட்டத்தரணியாகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறக்க முடியாது.

ஒன்றரை தசாப்த காலமாக நாட்டை ஆண்ட ஐ. தே. கட்சி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தங்களது மனதில் இருந்த எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. கிளர்ச்சியோடு தனது தலைவியின் குடியுரிமையும் பறிக்கப்பட்ட பின்னணியில் ஸ்ரீல. சு. கட்சி பலவீனமடைந்தது. 1994ம்ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முகங் கொடுக்க கட்சியை பலம் பொருந்தியதாக ஆக்க மஹிந்த ராஜபக்‌ஷ முன்னணி வகித்தார். அரச அடக்குமுறைக்கும் மற்றும் கிளர்ச்சிக்கும் முகங்கொடுத்து அவர் ஆட்சியிலிருந்த அரசாங்கத்துக்கு எதிரான சக்தியை வழிநடத்தினார். ஆர்ப்பாட்டங்கள், பாதயாத்திரை மூலம் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பத்துக்கு அதன் மூலம் வழிகோலப்பட்டது. அதனால் ஸ்ரீல. சு. கட்சி உள்ளிட்ட முற்போக்கு அணிகளுக்கு புத்துயிர் கிடைத்தது.

அதன் பலனாக 1994ம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு பிரதமர் பதவி கிடைத்தது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிப் பதவியும் கிடைத்தது. அதன் மூலம் சரித்திரபூர்வமான வெற்றியை அடைந்தது. புதிய அரசாங்கம் தனக்கு வழங்கிய மீன்பிடித்துறை அமைச்சின் பதவியுடன் அவர் திருப்தியடைந்தார். மீன்பிடித் தொழிலுக்கும் மற்றும் மீனவர் சமூகத்துக்கும் பாரிய பணிகளை ஆற்றியுள்ளார். பின்னர் அவர் தொழில் அமைச்சரானார்.

மஹிந்த ராஜபக்‌ஷ தொழிலாளர் தலைவனாக தொழிலாளர் பக்கம் நின்ற தலைவராவார். தொழிலாளர் சாசனத்தை கொண்டுவர பாடுபாட்டார். பிற்காலத்தில் அரச தலைவராகி தொழிலாளர்களுக்காக பெற்றுக் கொடுத்த வரப்பிரசாதங்களை மறந்து விட முடியாது. அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை வந்து 2004ம் ஆண்டு உருவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமராக முதிர்ச்சியும் பொறுமையும் கொண்டவராக பாராளுமன்ற அரசியல் வாழ்க்கைக்கு மூன்று தசாப்தங்கள் கடந்த பின்னரே தெரிவானார்.

குறுகிய காலத்தில் அதாவது 2005நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானது அரசியலுக்கு மாத்திரமல்ல நாட்டின் எதிர்கால பயணத்துக்கும் முக்கிய திருப்புமுனையாகும். அவர் அதிகாரத்துக்கு வந்த போது இலங்கை பிரிவினைவாத பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கியிருந்தது. அவர் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் நாடு பிரிவினைவாத சக்தியின் கையில் சிக்கியிருக்கும். அன்று அவருக்கிருந்த முக்கிய சவால் எல். ரி. ரி. ஈ. பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை ஒன்றிணைப்பதாகும்.

முதலில் எல். ரி. ரி. ஈ. யினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரைவாக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதோடு பயங்கரவாதத்துக்கு விடையை யுத்த ரீதியாக வழங்க நாட்டின் இக்கட்டான நிலைமையை கருதி முடிவெடுத்தார். அவ்வாறான முடிவை அவர் எடுத்த வேளையில் பலம் வாய்ந்த உலக நாடுகள் கூட எல். ரி. ரி. ஈ.யை தோற்கடிக்க முடியாதெனக் கூறின. ஆனால் நாடடில் பெரும்பன்மையோர் தம்மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் தனது சகோதரர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜக்‌ஷவின் துணையுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். முப்பது வருட கால யுத்தத்திலிருந்து நாட்டை விடுவித்தது இலங்கை சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். ஏகாதிபத்திய சக்திகள் அவர் மீது குற்றம் சுமத்தி அவருக்கும், இராணுவ வீரர்களுக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்க பல வழிகளில் முயற்சி செய்தன. இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் 2005ம் ஆண்டு முன்வைத்த ‘மஹிந்த சிந்தனை’ திட்டத்தை அர்ப்பணிப்புடன் செயற்படுத்தினார். இலங்கையை ‘ஆசியாவின் ஆச்சரியம்’ என மாற்றுவதே அவரின் கனவாகும். அதற்கான முயற்சிகளை அவர் எடுத்தார். கிராம எழுச்சி, பாதை அபிவிருத்தி போன்ற திட்டங்களை செயற்படுத்தினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம்,அதிவேகப் பாதைகள் அமைக்கப்பட்டன. தாமரைத் தடாக மண்டபம், தாமரைக் கோபுரம் என்பன அவரின் காலத்தின் அடையாளங்களாகும்.

2010ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவானார். அவருடன் இராணுவத்தின் முன்னாள் தளபதியே போட்டியிட்டார். அன்று மக்கள் தூர நோக்குடன் எடுத்த முடிவினால் நாடு அழிவிலிருந்து மீட்கப்பட்டது. மஹிந்த சிந்தனை என்னும் எதிர்கால நோக்கத்தினூடாக பாரிய அபிவிருத்திகளை நாட்டில் மேற்கொண்டார். 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிட்டார். அவ்வேளையில் அவருடைய அணியிலிருந்து சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சியின் அபேட்சகராகி அவரைத் தோற்கடித்தார். தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்ட அவர் மறுநாளே மெதமூலனைக்குச் சென்று விட்டார்.

இலங்கையின் பல இடங்களிலிருந்தும் வந்த மக்கள் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைத்துச் சென்றார்கள். நல்லாட்சி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாகம் குரோதத்தையும் பழிவாங்கலையுமே விதைத்தது. மக்களுக்கான சேவைகளைச் செய்யவில்லை என்பதை ஓகஸ்ட் 5ம் திகதி தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. அதிகாரத்துக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைமையைக் கூட வழங்காது பழிவாங்கல் மற்றும் குரோதத்தை வெளிப்படுத்தினார்கள். அதேவேளை தேசிய பாதுகாப்பையும் பலவீனமாக்கி ஈஸ்டர் தாக்குதலுக்கு வழிகோலினார்கள்.

நாடு மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டது. உலக பலம் வாய்ந்த நாடுகளின் போட்டி காரணமாக எமது நாடு ஒரே யுத்தகளமாக மாறியது. நல்லாட்சி என்னும் திருமணம் முடிவடைந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜக்‌ஷவை பிரதமராகப் பதவியேற்க அழைப்பு விடுத்தார். அவ்வாறு நல்லாட்சி அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வர கிடைத்த சந்தர்ப்பம் மக்கள் விடுதலை முன்னணி போன்ற சக்திகளின் பங்களிப்பால் தவிடு பொடியாக்கப்பட்டது.

2015ம் ஆண்டின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது எனக் கருதி பசில் ராஜபக்‌ஷ தலைமையில ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாகியது. நல்லாட்சி அரசாங்கம் உருவாகி மூன்று மாதங்களுக்குள் மக்களின் எதிர்ப்பு, பாதயாத்திரை, காலிமுகத் திடல் மே தினக் கூட்டம் போன்ற மக்கள் நடவடிக்கை மூலம் பாரிய சக்தியாக மாறியது. மத்திய வங்கியைக் கொள்ளையடித்த நல்லாட்சி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் தமது முதல் தீர்ப்பை வழங்கினார்கள். 2019நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு தனது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதியாக்கினார்.

69இலட்சம் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அன்று முதல் நாடு புதிய பாதையில் பயணித்தது. மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் பதவியேற்றார். சில மாதங்களிலேயே நாடு கொவிட் 19தொற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பலம் வாய்ந்த நாடுகள் கூட அதனைக் கட்டுப்படுத்தத் திணறிய வேளையில், இலங்கையில் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் கொவிட் 19தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலேயே ஓகஸ்ட் 5ம்திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இலங்கை சரித்திரத்திலேயே என்றுமில்லாத வெற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய அரசாங்கத்தை அமைக்க மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

தேர்தல் சரித்திரத்திலேயே அதிகூடிய வாக்குகளான 5,27,364விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்து மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். சவாலை வெற்றி கொண்ட தலைவராக தனது சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த ‘சுபீட்சத்தின் நோக்கு’ திட்டத்தை செயற்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவார். இலங்கை உருவாக்கிய இந்த புகழ் பெற்ற யுகபுருஷருக்கு நாம் அவரது எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்களைத் தெரிவிப்பது நாட்டை நேசிக்கும் மக்களின் கடமையாகும்.

-தம்மிக்க செனவிரத்ன
தமிழில்: வி. ஆர். வயலட்

Exit mobile version