-சொனால்டி தேசாய் (Sonalde Desai),
மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர்
மிகவும் மதிப்புக்குரியதாகக் கருதப்படும் ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ ஆய்விதழில், வெளிவந்துள்ள புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று, மக்கள்தொகைக் கொள்கை வகுப்போரிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆய்வானது அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமைந்துள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டுக்கான நிறுவனத்தால் (ஐஎச்எம்இ) நடத்தப்பட்டது. உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும், நடப்பு நூற்றாண்டின் மத்தியில் இந்திய மக்கள்தொகை உச்சத்தை எட்டும் என்றும் இந்த ஆய்வுக் கட்டுரை விவாதிக்கிறது. மேலும், 21-ம் நூற்றாண்டின் இறுதியில், அதன் மக்கள்தொகையானது யாரும் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகவும் குறைவாகிவிடும், தற்போதைய தோராய அளவான 135 கோடியிலிருந்து 109 கோடியாகக் குறைந்துவிடும். 72.4 கோடியாகவும்கூட அது குறைந்துவிடும் என்கிறது.
கொரோனா பற்றிய மதிப்பீடுகளைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு, கொரோனாவின் காரணமாக அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 81,000 பேர் இறக்கக்கூடும் என்று ஐஎச்எம்இ 2020 மார்ச் மாதத்தில் மதிப்பிட்டது நினைவுக்கு வரலாம். தற்போது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள மரணங்கள் அந்த கணிப்பைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகமாகிவிட்டது. ஆரம்பநிலை மாதிரிக்கான அடிப்படை அனுமானங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை. ஐஎச்எம்இ-யின் மக்கள்தொகை மதிப்பீடுகளும் கவனத்தோடு ஆராயப்பட வேண்டிய அடிப்படை அனுமானங்களே. 2100-ல் இந்தியப் பெண்கள் சராசரியாக 1.29 குழந்தைகளுடன் இருப்பார்கள் என்று அவர்கள் கணிக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் அவளையும் அவளது கணவனையும் மாற்றீடு செய்ய, இரண்டு குழந்தைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், இது மக்கள்தொகைச் சரிவுக்கு இட்டுச்செல்லும். இந்தியாவில் கருவுறுதலின் விகிதம் 1.29 என்கிற இந்த முன்கணிப்பானது அதே மாதிரியின்படி அமெரிக்காவில் 1.53 ஆகவும், பிரான்ஸில் 1.78 ஆகவும் இருக்கும் என்ற கணிப்போடு மாறுபடுகிறது. இந்தியப் பெற்றோர்கள் அமெரிக்க, பிரெஞ்சுப் பெற்றோர்களைக் காட்டிலும் குறைவாகவே குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பதை நம்ப முடியவில்லை.
2050 வரையில், ஐஎச்எம்இ-யின் கணிப்புகள் ஏறக்குறைய ஐநாவின் மதிப்பீடுகளை ஒத்தே இருக்கின்றன. 2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 164 கோடியாக இருக்கும் என்று ஐநாவின் கணிப்பு கூறுகையில், 2048-ல் அது 161 கோடியாக இருக்கும் என ஐஎச்எம்இ கணிக்கிறது. நடப்பு நூற்றாண்டின் இரண்டாவது பாதியில்தான் இரண்டு கணிப்புகளும் வேறுபடுகின்றன. 2100-ல் இந்திய மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் என்று ஐநா கணிக்கையில் ஐஎச்எம்இ-யோ 109 கோடியாக இருக்கும் என்கிறது.
இந்த வேறுபாட்டின் ஒரு பகுதி, ஐஎச்எம்இ-யின் மாதிரியானது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தடைகள் பற்றிய விவரங்களை மிகவும் அதிகமாகவே நம்பியதன் காரணமாக ஏற்பட்டது. தேசிய பயன்முறைசார் பொருளியல் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (என்சிஏஇஆர்) தேசிய தரவுப் புத்தாக்க மையத்தில் சாந்தனு ப்ரமாணிக்கும் அவரது சகாக்களும் நடத்திய ஆய்வு, தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் கருத்தடை முறையின் பயன்பாடுகள் மோசமான வகையில் மதிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அதன் விளைவாக, தேவை பூர்த்திசெய்யப்படாத நிலையில் இருக்கும் கருத்தடைப் பயன்பாடுகள் ஐஎச்எம்இ ஆய்வு மாதிரியில் மதிப்பிட்டதைக் காட்டிலும் குறைவாக இருப்பதோடு 2100-ல் கருவுறுதல் குறையும் என்ற நம்ப முடியாத கணிப்புக்கும் காரணமாகியிருக்கிறது.
கருவுறுதல் எண்ணிக்கையின் சரிவு
ஐநா அல்லது ஐஎச்எம்இ கணிப்புகளில் நாம் எதை எடுத்துக்கொண்டாலும், இந்தியாவின் மக்கள்தொகை எதிர்காலத்தில் உச்சத்தை எட்டி, அதைத் தொடர்ந்து கருவுறுதல் எண்ணிக்கையின் சரிவால் மக்கள்தொகையும் சரிவைச் சந்திக்கும். 1950-ல் இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு ஆறு குழந்தைகளாக இருந்தது. தற்போது அது 2.2-ஆக இருக்கிறது. நெருக்கடிநிலைக் காலக்கட்டத்தில் மிகப் பெரிய அளவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களையும், கட்டாய மலடாக்கலையும் ஒருசேர நடைமுறைப்படுத்தியும்கூட 1960-ல் 5.9-ஆக இருந்த மொத்தக் கருவுறுதல் விகிதம் 17% மட்டுமே குறைந்து 1980-ல் 4.9-ஆக இருந்தது. ஆனால், 1992-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அது 35% குறைந்து 3.4-லிருந்து 2.2-ஆகக் குறைந்தது.
18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மொத்தக் கருவுறுதல் விகிதமானது மாற்றீடு விகிதமான 2-ஐக் காட்டிலும் குறைந்துபோகும் வகையில் என்ன நடந்தது? இதற்கு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வெற்றியே காரணமென்று நினைக்கலாம். ஆனால், இந்தியாவின் கொள்கை முடிவுகள் குறித்த விவாதங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தன்னுடைய முதன்மை நிலையை இழந்து வெகுகாலமாகிவிட்டது. 1975-க்கும் 1994-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியர்கள் கட்டாய மலடாக்கம், ஆணுறை விநியோகம், கருப்பையினுள் கருத்தடைச் சாதனங்களைப் பொருத்துதல் (காப்பர்-டி) ஆகியவற்றை இலக்கு நிர்ணயித்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டனர். இத்தகைய இலக்குகள் அடிக்கடி வெளிப்படையாகவோ அல்லது உள்ளடங்கிய வகையிலோ கட்டாயப்படுத்துதலுக்கு இட்டுச்சென்றது. 1994-ல் மக்கள்தொகை மற்றும் மேம்பாடு குறித்த கெய்ரோ மாநாட்டுக்குப் பிறகே இந்த இலக்குகள் கைவிடப்பட்டன.
குடும்பக் கட்டுப்பாட்டுக்கான நிதியுதவிகள் நிறுத்திக்கொள்ளப்பட்டதால், பெருங்குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தண்டிக்கும் வகையில் அமைந்திருந்த கடுமையான கொள்கைகள் பெருமளவில் பயனற்றுப்போயின. மூன்றாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைப் பிறப்புகளுக்கு மகப்பேறு விடுமுறையை மறுத்தல், மகப்பேறுத் திட்டங்களுக்கான பயன்களைக் குறைத்தல், பெருங்குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்குவது ஆகியவற்றை உள்ளிட்டதாக இந்தக் கடும் நடவடிக்கைகள் இருந்தன. என்றாலும், இந்தக் கொள்கை முடிவுகள் நடைமுறையில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்பட்டதில்லை என்று எழுதியிருக்கிறார், மத்திய பிரதேசத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான நிர்மலா புச்.
விரும்பி நடந்த புரட்சி
அரசுக் கொள்கைகள் சிறுகுடும்ப அமைப்பை ஊக்கப்படுத்துவதோ அல்லது அது குறித்த அக்கறையில்லாமல் இருப்பவர்களிடம் கருத்தடைச் சாதனங்களை விநியோகிப்பதோ பெருங்குடும்பமே சிறந்தது என்ற தம்பதியரின் எண்ணத்தைக் கைவிடச்செய்துவிடுமா? 1990-க்குப் பிறகு ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களே இதில் முக்கியப் பங்காற்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தக் காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மென்மேலும் சிறிதாகிவிட்டது; பள்ளி, கல்லூரிச் சேர்க்கைகள் அதிகரித்துள்ளதோடு அரசுப் பணிகளில் சேர்வதற்கான வாய்ப்பும் போதுமான வகையில் அமைந்துள்ளது; பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது மென்பொருள் சேவை நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பொருளாதாரப் பயன்களை அடைந்திருக்கின்றன. எனவே, பெற்றோர்களும் தங்களது குடும்ப விருத்திக்கான திட்டங்களைப் பற்றி மறுபரிசீலிக்க ஆரம்பித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. விவசாயிகள் தங்களது குழந்தைகளைக் கூடுதல் தொழிலாளிகளாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்த காலம் மாறி, தற்போதைய லட்சியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதை வெற்றிக்கான நுழைவுச்சீட்டாகப் பார்க்கிறார்கள்.
மேலை நாடுகளில் கருவுறுதல் எண்ணிக்கையின் சரிவைப் பற்றிய ஆய்வுகள், அதற்குக் குடும்பங்களின் பின்வாங்கலையே காரணமாகச் சொல்கின்றன. இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதைக் குடும்பக் கடமையாக நினைப்பது அதிகரித்திருப்பதோடு, அவர்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகளவில் செலவழிக்கவும் செய்கிறார்கள். கார்னெல் பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகையியலாளர் அலாகா பாசுவுடன் இணைந்து நான் நடத்திய ஆய்வு, வெவ்வேறு அளவுகளைக் கொண்ட, ஆனால் ஒரே அளவிலான வருமானம் உள்ள குடும்பங்களை ஒப்பிட்டுப் பார்த்தது. அந்த ஆய்வில், சிறிய மற்றும் பெரிய அளவிலான குடும்பங்கள் அனைத்துமே தங்களது ஓய்வுநேரச் செயல்பாடுகள், வேலைகளில் பெண்களின் பங்கேற்பு, அவர்கள் வாங்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் எந்த வேறுபாடும் இல்லை என்பது தெரியவந்தது. எனினும், சிறிய அளவிலான குடும்பங்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கும் பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புவதற்காக அதிக அளவில் செலவிடுகின்றன. தனக்காக அல்லாமல் இப்படிக் குழந்தைகளுக்காகச் செலவிடுவது, கருவுறுதலின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணமாகிறது.
மக்களே விரும்பி ஏற்றுக்கொண்ட புரட்சிகர மாற்றம் ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்பதையே மக்கள்தொகைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கருவுறுதலின் எண்ணிக்கைக் குறைவை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்றால், சுகாதார மற்றும் குடும்ப நல அமைப்பு இந்தச் சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கும்வரை, அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு மட்டுமே கருத்தடை, பாலியல் மற்றும் மகப்பேறு நலச் சேவைகளை வழங்குவதை நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
தமிழில்: புவி
மூலக்கட்டுரை: India’s population data and a tale of two projections