–முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
நாவல் கொரோனா (Novel coronavirus) வைரஸ் தொற்று ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், மீண்டும் தொற்றாது என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. இது தவறு, இரண்டாம் முறை தொற்று ஏற்படும் என்று தற்போது தெரியவந்துள்ளது.
ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவத் துறையில் பணியாற்றும் கெல்வின் கைய் வாங் தொ (Kelvin Kai-Wang To) எனும் நுண்ணுயிரியலாளர் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டாம் முறை தொற்று ஏற்பட்டுள்ளதைத் திட்டவட்டமாகக் கண்டறிந்தார்.
ஒரு முறை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மறுதொற்று ஏற்படு வது சாத்தியமா என்ற சந்தேகத்தை இந்தக் கண்டறிதல் ஏற்படுத்தியது. “இது எதிர்பார்த்த ஒன்றுதான், பீதியடையத் தேவையில்லை, இரண்டாம் முறை நோய் கடுமையாக இருக்காது” என அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக நோய்த் தடுப்பாற்றல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் அகிகோ இவாசாகி (Akiko Iwasaki) கூறியுள்ளார்.
இரண்டாம் முறை
உடல்நலத்துடன் இருந்த 33 வயதுடைய அந்த ஹாங்காங் இளைஞருக்கு மார்ச் மாதம் இருமல், தொண்டைப் புண், தலைவலி, காய்ச்சல் போன்றவை ஏற்பட்டன. மூன்று நாள்கள் கடந்த பின்னர் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மார்ச் 29 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்குள் அவருக்கு இருந்த நோய் அறிகுறிகள் அனைத்தும் நீங்கியிருந்தன. இரண்டு முறை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்த பின்னர், ஏப்ரல் 14 அன்று வீடு திரும்பினார்.
பணி நிமித்தமாக ஸ்பெயின் சென்று இங்கிலாந்து வழியே ஆகஸ்ட் 15 அன்று அவர் நாடு திரும்பினார். ஹாங்காங் விமான நிலையத்தில் அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. திடுக்கிடும் வகையில் அந்தப் பரிசோதனை முடிவு பாசிடிவாக அமைந்தது.
முதல் முறை அவருக்கு மிதமான நோய்தான் ஏற்பட்டிருந்தது. மூன்று நாள் காய்ச்சலுக்குப் பிறகு, நோய் அறிகுறி நீங்கியிருந்தது. இரண்டாம் முறை நோய் அறிகுறியில்லாத் தொற்று தான் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்றின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வந்தது புலப்பட்டது.
முதல் முறை தொற்று ஏற்பட்டபோது மருத்துவமனையில் சேர்ந்த பத்து நாள்களுக்குப் பிறகும் IgG அளவீடு பாசிடிவ் ஆகாத நிலையில் இரண்டாம் முறை மருத்துவமனையில் சேர்ந்த ஐந்தாம் நாளே IgG பாசிடிவ் ஆனது. அதாவது, முதல் முறை கிருமியை ஒழிக்கும் IgG ஆன்டிபாடி (எதிரணு) உருவாக நீண்ட நாள் எடுத்தது. ஆனால், இரண்டாம் முறை IgG எதிரணு விரைவில் சுரந்து கிருமித் தொற்றைக் கட்டுக்குள் வைத்தது.
முதல் தொற்றின் தொடர்ச்சியா?
முதல் முறை தொற்று நீங்கிய பின்னரும் சில நாள்களுக்குப் பிறகு இரண்டாம் முறை பாசிடிவ் என ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை காட்டி யுள்ளது. ஆனாலும், அதை மறுதொற்று எனக் கொள்ள முடியாது. காலிப் பெருங்காய டப்பாவில் பல நாள்களுக்கு மணம் மட்டும் இருப்பதைப் போல், ஒருமுறை ஏற்படும் வைரஸ் தொற்றில் மிச்சம் மீதி இருக்கும் வைரஸ் துண்டுகள் தொற்று நீங்கிய பின்னரும் பரிசோதனையில் பாசிடிவ்வாகத் தென்படும். எவ்வளவு நாள்கள்வரை வைரஸ் துகள்கள், நமது உடலில் இருக்கும் என்பது இன்னும் விடை கண்டறியப்படாத புதிர்.
முதல்முறை ஏற்பட்ட தொற்றின் தொடர்ச்சியா அல்லது இரண்டாம் முறை புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளதா எனவும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.
நோய்க் கிருமி தாக்கிய சில நாள்களில் கிருமிக்கு எதிரான IgM வகை எதிரணு ரத்தத்தில் தென்படும். ஆனால், விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அந்த இளைஞரின் உடலில் எதிரணு தென்படவில்லை. எனவே, கிருமி தாக்கம் ஏற்பட்டுச் சில நாள்கள்தான் ஆகியிருக்க வேண்டும்.
நோயாளியிடமிருந்து முதன்முறை எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. எனவே, அந்த வைரஸ் மரபணு வரிசை இரண்டாம் முறை தொற்று ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரியின் மரபணு வரிசையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
மரபணு வரிசை ஆய்வு
கொரோனா வைரஸ் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை திடீர் மரபணு மாற்றத்தை (Mutation) அடையும். எனவே, இன்றைக்குப் பரவிவரும் வைரஸ் மரபணு வரிசை, முன்னர் இருந்த வரிசையிலிருந்து மாறுபடும். அதேபோல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஒவ்வொரு பகுதியிலும் உருவாகும் வைரஸ் மரபணு வரிசை, சற்றே வேறுபாட்டுடன் இருக்கும். எனவே, மரபணு வரிசையை வைத்து உலகின் எந்தப் பகுதியிலிருந்து குறிப்பிட்ட கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்துவிடலாம். அந்த இளைஞருக்கு முதன்முறை ஏற்பட்ட தொற்று எதிர்பார்த்ததுபோல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்கா – இங்கிலாந்தில் உருவான 19A கரோனா வைரஸ் துணையினத்தைச் சார்ந்தது.
இரண்டாம் முறை ஏற்பட்ட தொற்றின் வைரஸ் முன்னதிலிருந்து மாறுபட்டு, ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்தில் உருவான 20A வைரஸ் துணையினத்தைச் சார்ந்ததாக இருந்தது. இரண்டுக்கும் இடையே மரபணு வரிசையில் 23 எழுத்துகள் வித்தியாசம் இருந்தன. எனவே, அந்த இளைஞருக்கு 142 நாள்களுக்குப் பிறகு இரண்டாம் முறை வேறு துணையின கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது.
ஒருவேளை ஒரு முறை கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மறுமுறை தொற்று ஏற்படாது என்றால் அவர்க ளுக்கு நோயும் ஏற்படாது, எனவே அவர்களால் மற்றவர்களுக்கு நோய்க் கிருமியைப் பரப்பவும் முடியாது. இதனால் நமக்கு அருகே உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் கிருமித் தொற்று ஏற்பட்டுவிட்டால், அதுவரை கிருமி தாக்காத நம்மைக் கிருமி வந்தடையும் சாத்தியமும் குறையும். இதுதான் சமூக நோய்த் தடுப்பாற்றல் எனப்படும் மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி.
ஆய்வு முடிவு சுட்டுவது என்ன?
கொரோனா வைரஸைப் பொறுத்தவரை ஒரு முறை நோய்த் தொற்று ஏற்பட்டுக் குணம் அடைபவர்களுக்கு மறுமுறை தொற்று ஏற்படக்கூடும். எனவே, சமூக நோய்த்தடுப்பாற்றல் சாத்தியமில்லை என்றாகிறது. எனவே, தடுப்பூசிதான் நாவல் கரோனா வைரஸுக்கு எதிரான ஒரே ஆயுதம் என்கிறார் பேராசிரியர் அகிகோ இவாசாகி. இரண்டாம் முறை கிருமித் தொற்று ஏற்பட்ட அந்த நோயாளிக்கு ஒருசில நாள்களிலே கிருமியை ஒழிக்கும் IgG எதிரணு சுரந்துவிட்டதால், அறிகுறியற்ற அளவே நோய் ஏற்பட்டது. அதாவது கிருமியை நம்மால் இனம் காண முடிந்தும், அந்தக் கிருமி பெருமளவு செல்களில் புகுந்து தன் இனத்தைப் பெருக்கிக் காட்டுதீபோல் உடலெங்கும் பரவும் வகையில் தீவிரமாகத் தொற்றியிருக்கவில்லை.
ரத்தத்தைப் போன்று திரவத்தில் நீந்திச் செல்லும் வைரஸ்களை அழிக்கும் எதிரணுக்களை (ஆன்டிபாடி), பி செல் எனும் நோய்த் தடுப்பாற்றல் செல்கள் உருவாக்குகின்றன. ஆனால், செல்களுக்குள் புகுந்துவிட்ட வைரஸ்களை இந்த எதிரணுவால் தொட முடியாது. கில்லர் டி செல் எனும் வேறு நோய்த் தடுப்பாற்றல் மண்டலச் செல்களே வைரஸ் புகுந்த செல்களை அழிக்கும். இந்த இரண்டு நோய்த் தடுப்பு மண்டல செல்களும் முதல் தடவை கொரோனா தொற்று ஏற்படும்போது, கொரோனா வைரஸ்களை இனம்காணும் திறனைப் பெற்றுவிடும்.
சிறுவயதில் சைக்கிள் ஓட்டக் கற்ற திறன், இடையில் சைக்கிள் ஓட்டாமல் இருந்தாலும்கூட முதுமையில் மறந்து விடுவதில்லை. அதுபோல் வைரஸின் நினைவை இந்த டி செல் – பி செல் நினைவு மண்டலங்கள் ஞாபகத்தில் வைத்து இருக்கும். மறுமுறை நோய்க் கிருமி தாக்கும்போது, இவை விரைவில் செயலில் இறங்கும்.
“இரண்டாம் முறை தொற்று ஏற்பட்ட உடன் ரத்தத்தில் IgM எதிரணு அளவிடக்கூடிய செறிவில் இருக்கவில்லை என்றாலும் சடசடவென எதிரணு தயாராகிறது, நோய்க் கிருமியின் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்துகிறது. முதல் முறை பெற்ற நோய்த் தடுப்பாற்றல் திறன் மீண்டும் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டதாக இல்லை. அதேநேரம் நோய் தீவிரமடைவதிலிருந்து தடுக்கிறது” என்கிறார் பேராசிரியர் அகிகோ இவாசாகி. இரண்டாம் முறை தொற்று ஏற்பட்டால் வெறும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள்தாம் ஏற்படுமே தவிர, ஆபத்தில்லை என்கிறார் அவர்.
என்றாலும் ஏற்கெனவே நோய் கண்டவர்கள் மீதும் தடுப்பூசிகளைச் செலுத்தி ஆராய்ச்சி செய்தால்தான், அவற்றின் பலன் குறித்து அறிய முடியும். அதேபோல் தடுப்பூசிகள் போதுமான அளவு டி செல் விளைவை ஏற்படுத்துகின்றனவா எனவும் ஆராய வேண்டியது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.