Site icon சக்கரம்

மனித இன உருவாக்கத்தில் வைரஸின் பங்கு!

இ. ஹேமபிரபா

கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுதும் பரவியிருக்கிறது. இது நமக்குப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனால், வைரஸ் தொற்றுகள் நமக்குப் புதிதல்ல. மனித இனம் உருவாவதற்கு முன்பே வைரஸ் இருந்தது. நம் மூதாதையர்களின் மீதும் வைரஸ் தொற்றியது. வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல்நலச் சீர்கேடு உண்டாகும்; கேடு விளைவிக்கும் என்பதைக் காண்கிறோம். ஆனால், மனித இன பரிணாம வளர்ச்சியில் வைரஸ் தொற்று உதவியிருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தைக்கு உணவளிக்கும், தாய் சேயை இணைக்கும் நஞ்சுக்கொடி (placenta) உருவாவதற்கு, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வைரஸ் தொற்றுதான் காரணமாக இருந்திருக்கிறது!

மனித மரபணுவில் 8 சதவீதம்

குரங்குக்கும் மனிதர்களுக்கும் ஒரே மூதாதையர் என்பது நாம் அறிந்ததே. உலகில் ஒரு செல் உயிரினம் தோன்றிய காலம் தொட்டே பரிணாம வளர்ச்சியும் சேர்ந்தே நிகழ்ந்துவந்துள்ளது. பல்லுயிர்கள் இன்று வாழ்வதற்கும் அதுவே காரணம். சூழலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் உயிரினம், பரிணாம வளர்ச்சி அடையும். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிரினம் இப்போது இல்லாமல் போனதற்கோ உருமாறிப்போனதற்கோ காரணம், பரிணாம வளர்ச்சியே.

ஓர் உயிரினமானது சூழலுடன் மேற்கொள்ளும் உறவாடுதல்தான் பரிணாம வளர்ச்சிக்குத் தொடக்கப் புள்ளி. வைரஸ் எப்படி பரிணாம வளர்ச்சியில் பங்குவகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, வைரஸ் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். வைரஸ் சுயமாகப் பெருகும் திறனைப் பெற்றிருக்கவில்லை. அதற்கு ஓர் ஓம்புயிர் (host) தேவை. விலங்கு/மனித செல்தான் வைரஸுக்கு ஓம்புயிர். வைரஸ் தன்னுடைய மரபணுத் தொகுதியை மனித செல்லுக்குள் செலுத்தும். மனித செல்லின் இயக்கத்தைப் பயன்படுத்தி, வைரஸ் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்கிறது.

வைரஸ் வகைகளில் ரெட்ரோ வைரஸ் (retrovirus) என்றொரு பிரிவு உள்ளது. இந்த வகை வைரஸ்கள் மனித செல்லின் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், மனித மரபணுத் தொகுதியோடு இணையவும் முடியும் என்பதே இவற்றின் தனித்துவம். பொதுவாக வைரஸ்களின் மரபணுத் தொகுதி, ஓரிழை கொண்ட ஆர்.என்.ஏ.வால் (RNA) ஆனது. மனித மரபணுத் தொகுதி ஈரிழை கொண்ட டி.என்.ஏ.வால் (DNA) ஆனது. இந்த ரெட்ரோவைரஸ்களின் மரபணுத் தொகுதி மனித செல்லுக்குள் புகுந்தவுடன், ஈரிழையாக மாறி மனித மரபணுத் தொகுதியுடன் இணைந்துவிடும்.

ரெட்ரோவைரஸ்கள் நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற செல்களுடன் இணையும்போது, அடுத்த தலை முறைக்குக் கடத்தப்படாது. ஆனால், விந்து அல்லது கருமுட்டையைப் போன்று இனப்பெருக்கத்துக்கு உதவும் செல்களுடன் இணையும்போது, அது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. தாய் – தந்தையின் டி.என்.ஏ. குழந்தைக்கும் கடத்தப்படும். ஆக, மனித மரபணுத் தொகுதியில் இணைந்துள்ள வைரஸ் மரபணுத் தொகுதியும் கடத்தப்படும். இப்படியாக, தற்போது மனித மரபணுத் தொகுதியில் 8 சதவீதம் வைரஸின் மரபணுத் தொகுதியும் உள்ளது.

நஞ்சுக்கொடியை உருவாக்கிய வைரஸ் தொற்று

கர்ப்பம் தரிக்கும்போது, தாய் சேயை இணைக்கும் நஞ்சுக்கொடி (placenta) என்கிற சவ்வுப் படலம் உருவாகும். பொதுவாக ஓர் உறுப்பில் லட்சக்கணக்கான செல்கள் இருக்கும். அதேநேரம், மற்ற உறுப்புகளிலிருந்து நஞ்சுக்கொடி சவ்வுப்படலத்தின் உருவாக்கம் சிறிது மாறுபடுகிறது. இதில், பல செல்கள் பிணைந்து ஓர் அடுக்கை உருவாக்குகின்றன; இந்தப் பிணைப்பின்போது, செல்களில் உள்ள உட்கரு முதலான அனைத்துப் பொருள்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இவ்வாறு பல அடுக்குகளைக் கொண்ட உறுப்பாக நஞ்சுக்கொடி உள்ளது. இந்தப் பிணைப்பு நடப்பதற்குத்தான் மனித மரபணுவுடன் இணைந்த வைரஸின் மரபணுத் தொகுதி உதவுகிறது.

வைரஸ் தன்னைப் பெருக்கிக் கொள்ள ஓம்புயிரின் செல்லுடன் இணைய வேண்டும், பிறகுதான் தன்னுடைய மரபணுத் தொகுதியை ஓம்புயிரின் செல்லுக்குள் புகுத்த முடியும். இதற்காக வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரதம் உதவும். இது உறைபுரதம் (envelope protein – ENV புரதம்) எனப்படும். வைரஸின் மேற்பரப்பில் இருக்கும் இந்த ENV புரதமானது, ஓம்புயிரின் செல்லின் பரப்பில் உள்ள புரதத்தோடு இணைய உதவும். வைரஸ் மரபணுவுடன் இணைந்த குறிப்பிட்ட மனித செல்களுக்கு இந்த ஆற்றல் வாய்க்கிறது. இந்த காரணத்தால், மனித செல்கள் தாய் சேயை இணைக்கும் நஞ்சுக்கொடி உருவாவதற்கு ஏற்ற செல் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.

குட்டி ஈனும் உயிரினங்களாக மாற்றிய வைரஸ்

மனித உடலில் வைரஸ் மரபணுக் குறியீட்டைக் கொண்ட புரத மானது சின்க்டின் (synctin) புரதம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை யில் மனிதர்களிடம் சின்க்டின் -1, சின்க்டின் -2 என்னும் இரண்டு புரதங்கள் இருக்கின்றன. இந்தப் புரதங்கள் மனிதரிடம் மட்டும் கண்டறியப்படவில்லை. குரங்கு, யானை, நாய், எலி எனப் பெரும்பாலான பாலூட்டி இனங்களிடம் வெவ்வேறு வகையான சின்க்டின் புரதம் இருப்பது தெரியவந்துள்ளது.

எலியில் உள்ள சின்க்டின் புரதத்தை சின்கடின்-ஏ, சின்கடின்-B என்று ஆய்வாளர்கள் வகைப்படுத்தி யுள்ளார்கள். சின்கடின்-ஏ புரதம் நீக்கப்பட்ட எலிகளில் தாய் சேயை இணைக்கும் நஞ்சுக்கொடி சரியாக உருவாகாமல் கருத்தரித்த 11.5 முதல் 13.5 நாள்களிலேயே கரு இறந்து விடுவது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சின்க்டின் புரதம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளும் தாய் சேயை இணைக்கும் நஞ்சுக்கொடி உரு வாவதற்கு ரெட்ரோவைரஸ் மூலம் பெறப்பட்ட சின்க்டின் புரதம்தான் உதவிசெய்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

பாலூட்டி இனங்களிடையே காணப்படும் சின்க்டின் புரத ஒற்றுமைக்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆதி உயிரினம் ஒன்றின் இனப்பெருக்க செல்களில் ரெட்ரோவைரஸ் தொற்றி இருக்க வேண்டும். காலப்போக்கில் பல்வகை உயிரினங்கள் உருவானபோது, வெவ்வேறு விதமான சின்க்டின் புரதங்களும் உருவாகியிருக்க வேண்டும். அதனால்தான், பாலூட்டி உயிரினங்களிடம் இந்த சின்க்டின் புரதம் காணப்படுகிறது. மனித இனம் தோன்றி வெறும் 1.3 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

முட்டையிடும் உயிரினங்களாக இருந்து குட்டி ஈனுபவையாக மாறி நடைமுறையில் தாய் சேயை இணைக்கும் நஞ்சுக்கொடி முக்கியப் பங்கு வகிக்கிறது. தாயையும் சேயையும் இணைக்கும் தொப்புள்கொடியானது (Umblical cord) இந்த சவ்வுப் படலத்தின் மூலமே குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஒக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்தையும் செலுத்துகிறது. ரெட்ரோவைரஸ் தொற்று உண்டாக வில்லை என்றால், உயிரினங்களுக்குத் தாய் சேயை இணைக்கும் நஞ்சுக் கொடியை உருவாக்கும் திறன் கிடைத்திருக்காது. அத்தகைய கற்பனைச் சூழலில், பாலூட்டிகள் தோன்றாமலே கூடப் போயிருக்கலாம். அப்படியென்றால், வைரஸ் தொற்று இல்லாமல் இருந்திருந்தால் மனிதர்களே கூட உருவாகியிருக்க மாட்டார்கள்.

அதேநேரம் ரெட்ரோவைரஸ்களால் நமக்கு நன்மை மட்டும் கிடைக்கவில்லை. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) ஒரு ரெட்ரோவைரஸ். அக்கி போன்ற நோய்களை ஏற்படுத்தும் ஹெர்பெஸ் வைரஸும் (Herpes virus) ரெட்ரோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இவ்வகை வைரஸ்கள் மனித மரபணுவுடன் பிணைந்துவிடுவதால், நம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தால் இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்ட செல்களைக் கண்டறிவது சிரமம். எனவே, இந்த வைரஸ்கள் உண்டாக்கும் நோயைக் குணப்படுத்துவதும் சிக்கல் வாய்ந்ததாகிறது.

மனித மரபணுவோடு கொரோனா இணையுமா?

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ரெட்ரோவைரஸ் தொற்றால் உருவான தாய் சேயை இணைக்கும் நஞ்சுக்கொடி, வைரஸ் தொற்றிலிருந்து குழந்தையைக் காக்கவும் இன்றைக்கு உதவுகிறது. தாய்க்கு கொரோனா தொற்று இருந்தாலும், சேய்க்குத் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு இந்த சவ்வுப் படலமும் ஒரு முக்கிய காரணம்.

அதேநேரம், கொரோனா வைரஸுக்குத் தன்னுடைய ஓரிழை ஆர்.என்.ஏவை, ஈரிழை டி.என்.ஏவாக மாற்றும் வல்லமை கிடையாது. இதனால், கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் தொற்றியிருந்தாலும், அடுத்த தலைமுறைக்கு எந்தப் பயனையும் தராமல் அழியப் போகிறது நாவல் கொரோனா வைரஸ்.

Exit mobile version