–என்.குணசேகரன்
மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எழுச்சி, அவ்வப்போது விவசாய பாதிப்புகளுக்காக எழுகிற தற்காலிக போராட்டம் அல்ல. இந்திய விவசாய நெருக்கடி மிகக் கடுமையானது என்பதை இந்தப் போராட்டம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.
ஆளுகிற வர்க்கங்கள் கடைபிடிக்கிற கொள்கைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாய பொருட்களை சந்தை சரக்காக மாற்றி, ஏகபோக மூலதனத்தின் ஆதிக்கத்தை விவசாயத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் தேவைகளை அடிப்படையாக கொண்டுள்ளன.முன்பு இருந்த குறைந்தபட்ச ஆதாரவிலை,கொள்முதல், பொது விநியோகம், மானியங்கள் போன்ற ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை களைந்து அவற்றை மேலும் வலுப்படுத்துவதுதான் இன்றைய தேவை.மாறாக அந்த ஏற்பாடுகளை முற்றாக தகர்க்கும் வேலையை அரசு மேற்கொண்டுள்ளது. கார்பரேட்டுக்களின் தேவைக்காக பெரும்பகுதியான நிலத்தை உணவு தான்ய உற்பத்தியிலிருந்து மாற்றி ஏற்றுமதிக்கு உகந்த பணப்பயிர்களின் உற்பத்தியாக மாற்றுவது உணவுப் பஞ்சத்தினை ஏற்படுத்தி உணவுப் பாதுகாப்பை அழித்திடும்.அது மட்டுமல்லாது விவசாய வேலைவாய்ப்பையும் அழித்திடும். வேலையின்மையால், உணவு உற்பத்தி அதிகரித்தாலும் வாங்கும் சக்தி குறைவால் மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும்.இன்றே இதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
இதற்கு மாறாக மக்கள் நலன் காக்கும் மாற்று வழியில் விவசாய வளர்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டும்.உள்நாட்டு மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு ஏற்ற வகையில் நிலப் பயன்பாடு இருக்க வேண்டும்.இதற்கு நிலம் ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு விட்டு விடாமல் சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மக்கள் தேவை சார்ந்த விவசாய கொள்கைகளில் விவசாயத்திற்கு அரசு முதலீட்டை அதிகரிப்பது முக்கியமானது.நீர்ப்பாசனம், விவசாய ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் பொது முதலீட்டை அதிகரிப்பது உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கு உதவும்.இதன் மூலம்,நவீன தொழில்நுட்பத்தை காரணம் காட்டி விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் அடிபணிந்து கிடக்கும் நிலையை தவிர்க்க முடியும்.
இந்த மாற்று வழிகள் வெற்றிகமானவை என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் உண்டு. சோசலிச நாடுகள் இந்த மாற்றுப் பாதையில் பயணித்து சாதனைகள் படைத்துள்ளன .
நாடு தழுவிய அளவில் வீறு கொண்டு எழுந்த விவசாயிகள் எழுச்சி அடிப்படை மாற்றத்தை நோக்கி இந்தியா செல்ல வேண்டும் என்கிற எதிர்கால பார்வையையும் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்திய புரட்சி , இந்திய சோஷலிசம் குறித்த பிரச்சனைகளையும், சவால்களையும் முக்கிய நிகழ்ச்சி நிரலாக விவசாயிகள் போராட்டம் முன்னிறுத்தியுள்ளது.
வேறுபட்ட கொள்கை வழிகள்
கடந்த காலங்களில் நிகழ்ந்த சோஷலிச புரட்சிகள் விவசாய பிரச்சினையைத் தீர்ப்பதில் பல்வேறு அனுபவங்களை கொண்டுள்ளன. வீழ்ச்சி அடைந்தாலும் கூட சோவியத் புரட்சி அனுபவமும் மதிப்புமிக்கது. வறுமையாலும் பின்தங்கிய நிலைமையாலும் வாடிக் கொண்டிருந்த ரஷ்ய பெரும்பான்மை மக்களான விவசாயிகளை பெருமளவில் முன்னேற்றம் காண செய்த சாதனையை முன்னாள் சோவியத் யூனியன் சாதித்தது.
சீன சோசலிசமும் மகத்தான சாதனைகளை படைத்துள்ளது.
மாசேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் அன்று இருந்த வர்க்கங்களை ஆய்வுசெய்து விவசாய பிரிவினரை திரட்டி வர்க்க கூட்டணியை உருவாக்கியது.குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலமற்ற விவசாயிகள், ஏழை விவசாயிகள்,நடுத்தர விவசாயிகள் உள்ளடங்கிய விவசாய பிரிவினரும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கமும் இணைந்த வர்க்க கூட்டணி வலு மிக்கதாக கட்டமைக்கப்பட்டது.
அந்தக் கூட்டணி அன்றைய சீன ஏகாதிபத்திய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளை முறியடித்து புரட்சி வெற்றி கண்டது. நிலத்தில் தொழிலாளி -விவசாயி வர்க்க கூட்டணி அதிகாரம் படைத்ததாக மாறியது.மாசேதுங் காலத்திலும் அதன் பிறகு 1980-ஆம் ஆண்டுகளில் டெங்ஜியோபிங் தலைமையிலான அரசாங்கம் பல மாறுதல்களைக் கொண்டு வந்தது. பல விவசாய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவையனைத்தும் விவசாயிகளை பாதுகாப்பதற்கும் நாட்டின் உற்பத்தி மற்றும் வணிகம் பெருகுவதற்கும் அவற்றால் கிடைக்கும் பலன்கள் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் பயன்பட்டன.
கிராமப்புற வளர்ச்சி சீனாவில் மக்கள் நலனை மையப்படுத்திய நகர்ப்புற வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது. இந்தியா போன்ற முதலாளித்துவ நாடுகளில் நகரமயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு நடைபெறும் நகரமய வளர்ச்சி,விவசாய நசிவு காரணமாக வறுமையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து விரட்டப்பட்ட மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால் உருவானது. இதனால் இன்று ஏற்பட்ட விளைவு என்ன? நகரங்களும் வறுமையின் பிடியில் தப்பவில்லை. ஒரே நேரத்தில் கிராமப்புற வறுமையும், நகர்ப்புற வறுமையும் தீவிரமான சூழலில் நகர்ப்புற வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. இதுவே இந்தியா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளின் வளர்ச்சி பாதையாக அமைந்தது.
இதற்கு நேர்மாறாக சீனாவில் ஒரே நேரத்தில் கிராமப்புற செழிப்பும் நகர்ப்புற செழிப்பும் ஒரு சேர இணைந்து வளர்ந்தது. இதற்கேற்பவே சீன சோசலிசப் பாதை கட்டியமைக்கப்பட்டது.
இன்று இந்தியாவில் விவசாய உற்பத்தி ஓரளவு முன்னேற்றத்தை கண்டாலும், கிராமப்புறங்களில் சத்தான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைவு பிரச்சனையால் வாடுகிற மக்கள்தொகை அதிகம்.ஐக்கிய நாட்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட பட்டினி குறியீட்டு தரவரிசையில் 107 நாடுகளில் 94வது இடத்தில் இந்தியா உள்ளது. பட்டினி பிரச்சனை இந்தியாவில் நீடிப்பதற்கு முக்கிய காரணம். இந்திய ஆளும்வர்க்கத்தின் விவசாயக் கொள்கைகள். இந்தியாவில் தற்போது கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் உணவு பாதுகாப்பு மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகி அதிகரிக்கும் என்றும், பட்டினித் துயரம் தீவிரமாகும் என்றும் விவசாய இயக்கங்கள் ஆதாரப்பூர்வமாக விளக்கி வருகின்றனர்.
ஆனால் சீனாவில் 2013 ஆண்டு கணக்குப்படி உலக மொத்த நிலப்பரப்பில் ஆறு சதவீதமே உள்ள சீன நாடு, உலக மொத்த ஜனத்தொகையில் 22 சதவீத மக்களுக்கு உணவு அளித்து வருகிறது.அந்த அளவிற்கு சீன சோசலிசம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.
முதலாளித்துவ நாடுகள் பலவற்றில் தனிநபர் சராசரி உணவு தானிய அளவு மிகக் குறைவாகவே உள்ளது.இந்தியாவில் தனிநபருக்கு சராசரி உணவு தானிய அளவு ஆண்டுக்கு 179 கிலோகிராம் ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரம்.சீனாவின் நிலையை இத்துடன் ஒப்பிடுகிறபோது சோஷலிசத்தின் மேன்மை புலப்படும்.
தற்போது சீனாவின் தனிநபர் உணவு தானிய சப்ளை அளவு 470 கிலோ கிராம் என்ற அளவில் பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. இதுசர்வதேச அளவில் நிச்சயிக்கப்பட்டு உள்ள 400 கிலோ கிராம் என்கிற அளவை விட உயர்ந்தது. இனிவரும் காலத்தில் இதனை மேலும் அதிகரிக்க சீனா அரசும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் திட்டமிட்டுள்ளனர். வருகின்ற 2030 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 80 கோடி டன்களாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது தனிநபர் உணவு தானிய சப்ளை சராசரி 600 கிலோகிராம் ஆக உயர்ந்து, உணவுப் பாதுகாப்பில் உலக சாதனையை சீனா படைக்க உள்ளது .
ஆனால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தையும், உணவு உற்பத்தியையும், விநியோகத்தையும் தாரைவார்க்க நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவை உணவுப் பற்றாக்குறையை தீவிரப்படுத்தும். தற்போது 179 கிலோ தனிநபர் உணவு தானிய சப்ளை சராசரியும் கூட மேலும் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது.மாறாக உள்நாட்டுத் தேவைகளை மையப்படுத்திய உற்பத்தி, நிலத்தில் சமூக கட்டுப்பாடு,உற்பத்தி திறன், கட்டமைப்பு மேம்பட அரசின் பொதுமுதலீடு போன்றவை அவசியம். இதனையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் குறிப்பிடப்படுகிறது:”பாசன வசதி மற்றும் மின்சார வசதி அதிகரிக்கப்படுவதோடு, இவற்றில் முறையான மற்றும் சமமான பங்கீடு, விவசாயத்துறை வளர்ச்சிக்கு உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம், விவசாய முறையை மேம்படுத்த விவசாயிகளுக்கு உதவி, தரமான விதைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி திறன் அதிகரிப்பு.”-(பாரா 6.4 -4)
ஆனால், இதற்கு மாறாக,முதலாளித்துவ கார்ப்பரேட் இலாப வேட்டைக்கு வழிவகுக்கும் பாதையில் இன்றைய அரசு செல்கிறது. இந்நிலையில் விவசாயப் புரட்சி இந்தியாவில் காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.
விவசாய பிரச்சனைக்கு தீர்வு
இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசுக்கு மாற்றாக மக்களின் நலம் காக்கும் உழைக்கும் வர்க்க அரசு அமைவதுதான், உண்மையான தீர்வாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சித் திட்டத்தில் இந்த தீர்வை முன்வைக்கிறது. மக்கள் ஜனநாயக அரசு அமைவதும் அது விவசாயத்துறையில் மேற்கொள்ளும் அடிப்படை மாறுதல்களையும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அத்தகைய மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதற்கான தேவை விவசாய புரட்சி. அதை நோக்கி முன்னேறிட, உடனடி பிரச்சினைகளுக்காக விவசாயிகளை அணி திரட்டுவது அவசியமானது. மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள இடது ஜனநாயக அணி கட்டுவது என்ற அந்த லட்சியம் இதனை அடிப்படையாகக் கொண்டது.இன்றைய திரட்டலுக்கான முழக்கங்கள் அவ்வப்போது வரையறுக்கப்பட வேண்டும்.
அரசின் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்தியம் கொள்கைகளால் பாதிக்கப்படுகிற அனைத்துப் பிரிவு விவசாயிகளையும் திரட்டுவது மிக முக்கியமானது. தற்போதைய பாதிப்புக்களை மையமாக வைத்து அந்த ஒற்றுமையை முன்னெடுக்க வேண்டும். ஏற்கெனவே பல கோரிக்கைகளை விவசாய சங்கங்கள் முன்வைத்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிறு குறு மற்றும் பெரிய விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தினை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்திடவும் , நிலவுடைமை உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வர நிலச்சீர்திருத்த கோரிக்கைகளும் அவசியமானவை.இன்றும் கூட இந்தியாவில் உள்ள 62 சதவீத விவசாயிகள் 0.80 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்திலேயே சாகுபடி செய்கின்றனர். இதனால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலை தொடர்கிறது.
விவசாயத்திற்கான டீசல் மற்றும் உரத்திற்கான மானிய வெட்டு,வரம்பற்ற முறையில் வேளாண்மைப் பொருள் இறக்குமதி ,விவசாயம்,பாசனம்,ஊரக மேம்பாடு ஆகியவற்றில் அரசு பொது முதலீட்டை பெருமளவு குறைத்தது, விவசாயத்தை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி, விதை, தொழிட்நுட்பம் உள்ளிட்ட அனைத்துவிதமான வேளாண் இடுபொருட்களின் , கடுமையான விலையேற்றம், பாசனம் மற்றும் மின்சாரத்துறை திட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டு அதனால் விவசாயப் பயன்பாட்டுச் செலவு அதிகமான நிலை,
விவசாயிகளுக்கு அரசு நிறுவனக்கடன்கள் கிடைக்காமல் தனியார் கடன் பிடியில் விவசாயிகளை சிக்க வைத்தது,ஏற்றுமதி நோக்கிலான விவசாயப் பணப் பயிர் பெருக்கததை ஊக்குவித்தது,தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளை பாதுகாப்பதற்கு பதிலாக தற்போது அந்த சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்துவது,கார்ப்பரேட் வேளாண்மை / கூட்டு பண்ணையம் (Contract Farming) ஊக்குவிப்பதற்கான தற்போதைய சட்டங்கள் என பல பிரச்சனைகள் விவசாயிகளை திரட்டுவதற்கும் எதிர்ப்பியக்கம் கட்டுவதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.
ஏற்கனவே இடதுசாரிகள் தலைமை தாங்கும் விவசாய அமைப்புகளும் இதர பல விவசாய அமைப்புகளும் இந்த கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர் .
இதன் இந்தப் போராட்டத்தில் விவசாயப் புரட்சி லட்சியத்திற்கு வலுவூட்டும்.
விவசாயப் புரட்சியே இன்றைய நிகழ்ச்சி நிரல்
“புதிய இந்தியா” என்கிற முழக்கத்தோடு மோடி தலைமையில் வகுப்புவாத நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் துவக்க பணிகள் துவங்கிய தினத்தையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை உருக்குலைத்து பிரிவு 370 ரத்து தினத்தையும் முன்னிறுத்தி ஆகஸ்ட் 5-ஆம் தேதி “புதிய இந்தியா”வுக்கான துவக்கம் என்று ஆர்எஸ்எஸ் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இந்த பிரச்சாரம் மதச்சார்பற்ற, சமத்துவ ,சோசலிச ,இந்திய கனவை சிதைக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஏகாதிபத்தியத்தை எதிர்த்து காலனிய விடுதலையை சாதித்த மிக முக்கிய துவக்கமாக அமைந்தது. ஓரளவு மதச்சார்பற்ற பாதையில் இந்தியப் பயணம் துவங்கியது. ஆனால் அரசு, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசாக இருந்ததால் அது வெற்றிப் பயணமாக அமையவில்லை. எனவே நிறைவேறாமல் போன இந்திய கனவினை விவசாயப் புரட்சியே நிறைவேற்றம். அதுவே தற்போதைய நிகழ்ச்சி நிரல் ஆகும்.
அந்த விவசாயப் புரட்சியின் நோக்கம் என்ன? மக்கள் ஜனநாயக அரசினை நிறுவிட வேண்டும் என்ற மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துவதாக விவசாய புரட்சி அமையும்.
மக்கள் ஜனநாயக அரசு தொழிலாளி -விவசாய உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தில் வீற்றிருக்கிற உண்மையான மக்களாட்சி ஆகும்.
இப்போது மூன்று களங்களில் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பது விவசாயப் புரட்சியை அடைவதற்கான வழியாக அமைந்துள்ளது. அவை “ஏகாதிபத்திய எதிர்ப்பு”, “ஏகபோக மூலதன எதிர்ப்பு”, “நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு”. இந்த மூன்றும் தற்போது முன்னெடுப்பது ஒரு மாற்று அரசை நிறுவுவதற்கான தேவையாக அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் தனது செயல்பாட்டில் பிரிக்க முடியாத கடமைகளாக இந்த மூன்றையும் தன்னுள் கொண்டுள்ளது.கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு போராட்டங்களையும் இந்த மூன்றில் வகைப்படுத்த இயலும். இந்த மூன்று தளங்களில் மாபெரும் போராட்டங்களையும், தியாகங்களையும் செய்த வீரஞ்செறிந்த வரலாறு கொண்டது கம்யூனிஸ்ட் இயக்கம்.
இந்த மூன்றும் இணையாக நடத்தவேண்டிய எதிர்ப்பு இயக்கங்கள். எனினும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கம் எழுச்சியாக வெடித்து எழுகின்ற வாய்ப்பு உள்ளது.
இன்றைக்கு நாம் காணுகிற மகத்தான விவசாயிகள் போராட்டம் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் , ஏகபோக மூலதனம் இந்திய விவசாயத்தை தனது மூலதனக் குவியல் லாப வேட்டைக்காக அபகரித்துக் கொள்ள முயற்சிப்பதை எதிர்த்து நடைபெறும் மாபெரும் போராட்டம்.
விவசாய புரட்சியில் முக்கிய கூறாக சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு அமைந்துள்ளது. விவசாயிகளின் ஒற்றுமை கிராமப்புற இயக்கம் சாதி – பாலின ஒடுக்குமுறை தளைகளை முறியடித்து முன்னேறும் போராட்டம். எனவே சாதிய,மத, பிற்போக்கு மூடத்தனத்தனங்களை முறியடித்தே விவசாய புரட்சி முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது.
விவசாயப் புரட்சியே மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியாக உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் வலியுறுத்துவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.கட்சித் திட்டம் பாரா 3.15 அதனை விவரிக்கிறது. “விவசாயப் பிரச்சனை என்பதே இந்திய மக்களின் முன்பாக உள்ள மிக முக்கியமான தேசியப் பிரச்சனையாகத் தொடர்ந்து நீடிக்கிறது” என்றும் “தீவிரமான, முழுமையான விவசாய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட புரட்சிகரமான மாற்றம் தேவைப்படுகிறது” என்றும் கட்சி திட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
வர்க்கக் கூட்டணி
மக்கள் ஜனநாயக லட்சியத்தை அடைய தொழிலாளி விவசாயி வர்க்க கூட்டணி அடிப்படையாக அமைந்துள்ளது. ரஷ்ய புரட்சியின் போது லெனின் விவசாயிகளின் நிலம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள், திரண்டுபோராட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன் அவர் நிற்கவில்லை. மூலதனத்தின் கொடூர ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகவும், சோசலிச லட்சியத்தை நோக்கியும் தொழிலாளர் விவசாயிகள் ஒற்றுமை வலுவாக கட்டியமைக்கப்பட வேண்டுமென்று வழிகாட்டினார்.
விவசாயிகளுக்கு இடையே ஏராளமான பிரிவுகள், அவர்களிடையே வேறுபாடான நலன்கள் உண்டு என்பதை கவனமாக ஆய்வு செய்ய லெனின் வலியுறுத்துகிறார். நிலவுடைமையாளர்களுக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேறுபட்ட நலன்கள் உண்டு. ஏகபோக மூலதனத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராகவும் தொழிலாளர் -விவசாயிகள் ஒற்றுமை உருவாக்குகிற போது இந்த சிக்கலான பிரச்சனைகளை புரட்சிகர இயக்கம் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் லெனின்.
முதலாளித்துவ அரசினை அகற்றாமல் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் விடுதலை இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்திட வேண்டும். இந்த வர்க்க உணர்வினை வலுப்படுத்தும் போதுதான் தொழிலாளி விவசாயி ஒற்றுமை அழுத்தமாக வலுப்பெறும். அது வே,புரட்சியை நோக்கி சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும்.
“சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” என்கிற நூலில் இதனை விரிவாக லெனின் விளக்குகிறார். சமூகத்தின் மிக முக்கிய வர்க்கங்களான தொழிலாளிகளும் விவசாயிகளும் தங்களை அடிமைப்படுத்தும் முதலாளித்துவ கொள்கைகள், நிறுவனங்களிலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில் சமூகத்தை சோசலிசத்தை நோக்கி முன்கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என்று லெனின் வழிகாட்டுகிறார். இந்திய நாட்டிலும் இப்படிப்பட்ட தொழிலாளி விவசாயி ஒற்றுமை விவசாய புரட்சியின் உந்து சக்தியாக அமைந்துள்ளது. அதனை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் தற்போதைய விவசாயிகள் எழுச்சி எடுத்துரைக்கிறது.
விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம், முன்பு நடைபெற்ற மும்பை முற்றுகை, நாடு முழுவதிலும் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற விவசாயிகளின் பல போராட்டங்கள் அனைத்தும் விவசாயப் புரட்சியை இந்திய அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் முக்கிய நிகழ்ச்சி நிரலாக முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இது புரட்சிகர சக்திகளுக்கு சாதகமான சூழல்.இதற்கேற்ப புரட்சிகர இயக்கத்தின் செயல்பாடு அமைந்திட வேண்டும்.
–மார்க்சிஸ்ட், டிசம்பர் 2020