Site icon சக்கரம்

இலங்கை – வடபுல மூத்த இடதுசாரி தோழர் சி.தருமராசன் மறைந்தார்

தோழர் மணியம்

னடாவில் வாழ்ந்து வந்த தோழர் சின்னத்துரை தருமராசன் எம்மைவிட்டு, இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டார். 88 வயதில் 2021 ஜனவரி 03 ஆம் திகதி அதிகாலை 01 மணியளவில் முதுமை அவரை காவு கொண்டுவிட்டது. இறுதிவரை தான் வரித்துக்கொண்ட மார்க்சிய நிலைப்பாட்டிலிருந்து வழுவாது வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் தோழர் தருமராசன்.

தோழர் தருமராசன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அயலூரான கல்லுவத்தில் திருமணம் செய்தார். (கல்லுவத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தோழர் விசுவானந்ததேவன் போன்றவர்களை இடதுசாரிகளாக உருவாக்கியது தோழர் தருமராசன் அவர்களே) இரண்டு ஆண் மக்கள் உண்டு. (கனடாவில் வாழ்கின்றனர்)

தமது இளம் வயதிலேயே இடதுசாரி அரசியலில் நாட்டம் கொண்டுவிட்டார். சிறு வயதில் வடமராட்சியில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அரசியல்வாதியான தர்மகுலசிங்கத்தால் (ஜெயம்) ஈர்க்கப்பட்டார். பின்னர் 1956 இல் பொன்.கந்தையா கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பருத்தித்துறைத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோது, சிறுவனாக இருந்த தருமராசன் அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அக்கறையுடன் கலந்து கொண்டார்.

அதன் காரணமாக வடமராட்சியில் இடதுசாரி அரசியலில் நாட்டம் கொண்டிருந்த குமாரசாமி மாஸ்டர, சின்னத்தம்பி மாஸ்டர், செல்லத்தம்பி மாஸ்டர், சிவலிங்கம் மாஸ்டர், தங்கவடிவேல் மாஸ்டர், சேவற்கொடியோன் மாஸ்டர், ரகுநாதன் மாஸ்டர், கவிஞர் பசுபதி, போஜியா போன்றவர்களுடன் தொடர்பு ஏற்பட்டதுடன், வடமராட்சியில் மார்க்சிய அரசியல் வகுப்பு எடுப்பதற்குச் சென்ற தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் தொடர்பும் ஏற்பட்டது. தோழர் தருமராசன் உட்பட இவர்கள் எல்லோரும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக மாறினர்.

1964 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சித்தாந்தப் பிளவு ஏற்பட்டு சோவியத் சார்பு – சீன சார்பு என இரு பிரிவுகள் உருவானபோது தருமராசன் சீன சார்பு அணியினருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற தருமராசன் அங்கு தோழர் கார்த்திகேசன் போன்றவர்களுடன் இணைந்து முழுநேரமாகக் கட்சி வேலைகளில் ஈடுபட்டார். 1964 இல் கட்சி யாழ் புத்தக நிலையம் என்ற பெயரில் மார்க்சிய நூல்களை விற்பதற்காக ஒரு புத்தகசாலையை ஆரம்பித்தபோது, அதன் உருவாக்கத்தில் பங்குபற்றியதுடன், அந்தப் புத்தகசாலையிலும் சிறிது காலம் பணியாற்றினார்.

பின்னர் கல்லுவத்தில் திருமணம் செய்துகொண்டு, இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இணைந்து பருத்தித்துறை சாலையில் நீண்டகாலம் சாரதியாகப் பணியாற்றியதுடன், இறுதிக் காலத்தில் சாரதிப் பயிற்றுனராகவும் கடமை புரிந்தார். அங்கு பணியாற்றிய காலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி இ.போ.ச. ஊழியர்களுக்கென உருவாக்கிய இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் வட பிராந்தியத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றினார். அவரது காலத்தில் இ.போ.ச. ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நடைபெற்ற வேலைநிறுதப் போராட்டங்கள், பேச்சுவார்தைகள் என்பனவற்றுக்குச் சிறப்பான முறையில் தலைமைத்துவம் வழங்கினார். அத்துடன் வட பகுதியில் வேறு பல தொழிற்துறைகளில் தொழிற்சங்கங்கள் உருவாவதற்கும் பங்களிப்பு வழங்கினார்.

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் எல்லோரையும் போல தோழர் தருமராசனின் குடும்பத்தையும் பாதித்தது. ஊரைவிட்டு வெளியேற வேண்டிய சூழல். முதலில் மனைவியுடன் வவுனியாவுக்கு இடம் பெயர்ந்து அங்கு சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர் கனடாவில் இருந்த மகனின் அழைப்பின் பேரில் மனைவியுடன் கனடாவுக்கு இடம் பெயர்ந்து வாழத்தொடங்கினார்.

கனடாவுக்குச் சென்ற பின்னரும் தோழர் தருமராசன் தனது முற்போக்கு பணிகளைக் கைவிடவில்லை. அங்குள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் இணைந்து உருவாக்கிய ஆக்கபூர்வ சிந்தனை செயற்பாட்டுக்கான மையம் என்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். இறுதி; காலத்தில் அந்த அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டார். அந்த அமைப்பு நடத்திய பெரும்பாலான கருத்தரங்குகள், மேதினக் கூட்டங்கள் என்பன தோழர் தருமராசனின் தலைமையிலேயே நடைபெற்றன. கூட்டங்களுக்கான அழைப்பை சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிலுள்ள இடதுசாரித் தோழர்கள் இணைந்து ‘வானவில்’ என்ற மாதாந்தப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்த போது அதன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் தோழர் தருமராசன் வழங்கிய பங்பளிப்பு அளப்பரியது. பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் இடம்பெற வேண்டிய விடயதானங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கியதுடன், பத்திரிகை அச்சிடும் மற்றும் அஞ்சலில் அனுப்பும் செலவுகளுக்காக மாதாமாதம் நிதியுதவியும் செய்து வந்தார். அத்துடன் நின்றுவிடாது பத்திரிகை வெளிவந்ததும் குறிப்பிட்ட பிரதிகளைப் பெற்று தனது அயலவர்களுக்கும், வேறு இடங்களில் உள்ளவர்களுக்கும் விநியோகித்தும் வந்தார். அவரது இந்தப் பணிகளுக்கெல்லாம் அவரது துணைவியாரும் பூரண ஒத்துழைப்பு வழங்கியமை அவர் பெற்ற பெரும் பாக்கியம்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த காரணத்தால் மற்றவர்களுடனான அவரது தொடர்புகள் கடைசிக் காலத்தில் சற்றுத் தடங்கல்பட்டுவிட்டது. அல்லது தினசரி எல்லாத் தோழர்களுடனும் ஒரு தடவையாவது தொலைபேசியில் உரையாடாமல் விடமாட்டார்.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை முற்போக்கு அரசியல் பணிகளுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு உன்னத மனிதனை நாம் இழந்துவிட்டோம். ஆனால் அவரது நினைவு என்றென்றும் தோழர்களினதும் மக்களினதும் மனங்களில் வாழும்.

Exit mobile version