இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று (03/01/2021) 39-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய 6-வது கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகளுக்கு முடிவு காணப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
இதைத்தொடர்ந்து நாளை (04/01/2021, திங்கட்கிழமை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் முக்கியமாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையை அதிகமாக நம்பியுள்ளனர். இதில் தங்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என கருதி வரும் அவர்கள், இதன் மூலம் தங்கள் காத்திருப்பு விரைவில் முடிவு பெறும் என எதிர்பார்த்து உள்ளனர்.
அதேநேரம் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பாக 6-ந் தேதி மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி மற்றும் அரியானாவில் வர்த்தக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள் அடைப்பு உள்பட பல நடவடிக்கைகளுக்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக 850 கல்வியாளர்கள் கையெழுத்துப் பிரச்சாரம்
இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்துப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஆதரவாகக் கல்வியாளர்கள் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை ஆதரித்து கல்வியாளர்கள் எழுதிய கடிதத்தில் “ மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நம்புகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும், அவர்களின் உணவு தட்டிலிருந்து பறிக்கப்படாது என்று மத்திய அரசு கூறுவதை நாங்கள் நம்புகிறோம்.
அனைத்துவிதமான தடைகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சுதந்திரமாக விற்க புதிய வேளாண் சட்டங்கள் வகை செய்கின்றன. தங்களுக்கு போட்டியான விலையுடன் ஒப்பிட்டு விற்க முடியும் என்பதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்கிறது.
விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யாது என மத்திய அரசு தொடர்ந்து உறுதியளித்திருக்கிறது.
இந்த நேரத்தில் நாங்கள் மத்திய அரசுடனும், விவசாயிகளுடன் துணை நிற்கிறோம். விவசாயிகளின் தீவிரமான நிலைப்பாட்டை வணங்குகிறோம்” எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கடிதத்தில் டெல்லி பல்கலைக்கழகம், பனாராஸ் இந்து பல்கலைக்கழகம், ஜேஎன்யு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள்.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 6 கட்டப் பேச்சு நடந்து முடிந்துள்ளது. ஆனால், இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.
புதன்கிழமை நடந்த பேச்சில் விவசாயிகளின் இரு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் கழிவுகளை எரிப்பதில் பாகுபாடு காட்டுதல், மற்றும் மின் மானியம் பரிசீலிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும்சட்டம் ஆகியவற்றில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.