Site icon சக்கரம்

இந்தியாவின் செய்திக்கு தமிழ் தலைமைகளின் பதில் என்ன?

கே.மாணிக்கவாசகர்

ரு வாரத்துக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பியிருக்கிறார். அவரது விஜயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் இலங்கை அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தம் பற்றிப் பிரஸ்தாபித்ததின் மூலமும், தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் கௌரவத்தின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்திச் சொன்னதின் மூலமும் இந்தியாவின் ஒரு செய்தியை வெளிப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.

தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் சில கடும்போக்கு அரசியல்வாதிகள் மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர். மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர் மறுப்புத் தெரிவித்தாலும், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அது பற்றி இதுவரை கருத்து எதனையும் கூறவில்லை. ஆனால் அமைச்சர் உதயகம்மன்பில மாகாண சபை முறைமையைத் தொடர்ந்து வைத்திருப்பதா இல்லையா என அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறியிருப்பதன் மூலம் அதுபற்றி அரச மட்டத்தில் சில அபிப்பிராயங்கள் இருப்பதை ஊகிக்க முடிகிறது.

இலங்கையில் இனப்பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கங்களுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் காலத்துக்குக் காலம் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், 1987 இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையே நடைமுறைக்கு வந்த ஒரேயொரு தீர்வாக இருக்கின்றது.

இதில் இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவெனில், வழமைபோல இந்த ஒப்பந்தம் அரசாங்கத்துக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்படாமல் இரண்டு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்டதாகும். அதாவது ஒரு பக்கத்தில் இலங்கை அரசாங்கமும், மறுபக்கத்தில் இலங்கை தமிழ் மக்கள் சார்பாக இந்திய அரசாங்கமும் கைச்சாத்திட்ட ஒப்பந்தமாகும். அதனால் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் இருந்த இலங்கை அரசு விருப்பமுடன் கைச்சாத்திடவில்லை என்பதும், இந்திய அரசின் நிர்ப்பந்தத்தினாலேயே கைச்சாத்திட்டது என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஒப்பந்தம் iயெழுத்தான நேரத்தில் அன்றைய எதிர்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமின்றி, அன்றைய அரசாங்கத்தின் பிரதமரான ஆர்.பிரேமதாச தலைமையிலான ஐ.தே.க. அணியினரும் இதை எதிர்த்தார்கள் என்பதுடன், ஜே.வி.பியும் இந்த ஒப்பந்தத்தை மையமாக வைத்து தனது இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியையும் நிகழ்த்தியது.

எது எப்படியிருப்பினும், இந்தியாவின் செல்வாக்கு நிர்ப்பந்தம் என்பன காரணமாக தமிழர்களின் மரபுவழித் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை நிர்வாகம் நடைமுறைக்கு வந்தது. இத்தகைய ஒரு அதிகாரப் பகிர்வையே தமிழரசுக் கட்சி முன்வைத்து வந்த சமஸ்டி முறையும், கம்யூனிஸ்ட் கட்சி 1954 இல் முன்வைத்த பிராந்திய சுயாட்சியும் வலியுறுத்தின. எனவே தமிழர் தரப்பு இந்த மாகாண சபை முறைமையைப் பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

அன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பிரதான அரசியல் பிரதிநிதியாக இருந்த புலிகள், ஒப்பந்தத்தை எதிர்த்த பிரேமதாசவுடன் கூட்டுச்சேர்ந்து ஒப்பந்தம் அமுலாவதை கண்காணிக்க வந்த இந்திய அமைதிப்படையுடன் வலிந்து போருக்குப் போனார்கள். அது மாத்திரமின்றி, ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தார்கள். பின்னர் இந்திய அமைதிப்படையுடன் போர் புரிவதற்கு உதவிய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவையும் கொலை செய்தார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகாண முயன்ற சந்திரிகா மீதும் குண்டுத் தாக்குதல் நடத்தி அவரது ஒரு கண்ணையும் பறித்தார்கள்.

புலிகளின் இந்த அராஜகங்களையும், தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரான செயல்களையும், அன்றைய தமிழ் தலைமையும் சரி, அதன் தொடர்ச்சியான இன்றைய தமிழ் தலைமையும் சரி வேடிக்கை பார்த்தார்களே தவிர, உருப்படியான செயல்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை. மாகாண சபை முறை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தொடர்ந்து கூறி வந்தது. 2000 ஆம் ஆண்டில் சந்திரிக கொண்டு வந்த சமஸ்டிக்கு ஒப்பான தீர்வையும் ஐ.தே.கவுடனும், ஜே.வி.பியுடனும் சேர்ந்து தோற்கடித்து நிறைவேறாமல் தடுத்தார்கள்.

இவர்களது இந்த நடவடிக்கைகளால்தான் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்களை வழங்க மறுத்ததுடன், ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையையும் தனித்தனியாகப் பிரித்தார்கள். இப்பொழுது மாகாண சபை முறைமையையே இல்லாதொழிப்பது பற்றி ஆலோசிக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

புலிகள் மேற்கு நாடுகளின் சதித்திட்டத்துக்கு இரையாகி ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததின் மூலம், இந்தியாவை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி நிற்கும் கைங்கரியத்தைச் செய்தனர். அதுவும் இலங்கை அரசுகள் தமிழர் பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு வழி சமைத்தது. அதாவது, புலிகளும் சரி, இன்றைய தமிழ் தலைமையும் சரி, தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வதில் அக்கறை செலுத்துவதைவிட, தமது சொந்த அரசியல் ஆதாயங்களையே முதன்மைப்படுத்திச் செயல்பட்டனர். அந்த நிலையே இன்றும் தொடர்கிறது.

தமிழ் தேசியவாதத் தலைமைகள் எல்லாமே இராஜதந்திரத்துடனும் தீர்க்கதிரசனத்துடனும் நடந்து, தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாண உழைப்பதை விடுத்து, தமது தேர்தல் வெற்றிகளை இலக்காக வைத்து தமிழ் மக்களை உசுப்பேத்தும் சில்லறைப் பிரச்சினைகளைக் கிளறி விடுவதையே தமது அரசியல் வழிமுறையாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

இந்த நிலைமையில், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனையில் (உள் நோக்கங்கள் இருப்பினும்) மீண்டுமொருமுறை அக்கறை செலுத்த முன்வந்திருக்கும் இந்திய அரசின் அணுகுமுறையை இப்பொழுதாவது தமிழ் தலைமைகள் சரியாகப் பயன்படுத்துமா அல்லது ‘பழைய கிழவி கதவைத் திறவடி’ என்ற கதைதானா?

Exit mobile version