-வேந்தன்
இந்திய மத்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படுத்த இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 12) இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
நேற்று (ஜனவரி 11) வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பல வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வராமல் போனதற்காக மத்திய அரசை குறை கூறியதோடு, ‘வேளாண் சட்டங்களை தடை செய்ய நேரிடும்’என்றும் எச்சரித்தது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 12) அந்த வழக்கு விசாரணையின்போது மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்கவும், இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குழுவில் பூபிந்தர் சிங் மான் (பாரதிய கிசான் ஒன்றியத்தின் தேசியத் தலைவர்), டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி (வேளாண் பொருளாதார நிபுணர்) மற்றும் அனில் கன்வத் (ஷெட்கரி சங்கதானத்தின் தலைவர்) ஆகியோர் அடங்குவர்.
இந்த உத்தரவை இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அறிவித்தனர்.
பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் தங்கள் வாதங்களை முன்வைக்க குழு முன் செல்லலாம் என்று கூறினார் தலைமை நீதிபதி. “குழு யாரையும் தண்டிக்காது அல்லது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காது. அது எங்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்” என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டதன் மூலம் அந்தக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரம், தலைமை நீதிபதி போப்டே மேலும் கூறுகையில், இந்தக் குழுவும் அதன் செயல்பாடுகளும் உச்சநீதிமன்றத்தின் முன் தற்போதைய நீதித்துறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கருதப்படும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.