–மர்லின் மரிக்கார்
இலங்கைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட இரண்டு ஜனாதிபதிகளையும் ஒரு சபாநாயகரையும் வழங்கிய வரலாற்று பெருமைக்குரியவர் அமரர் டி.ஏ. ராஜபக்ஷ (Don Alwin Rajapaksa) ஆவார். தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டியவில் பிறந்த இவர் சுதந்திரத்திற்கு முன்பே தேசிய அரசியலில் பிரவேசித்ததோடு ஹம்பாந்தோட்டை, கிருவாபத்துவ பிராந்திய மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிலும் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டவராவார்.
அவரது புதல்வர்களான முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் முழுநாட்டினதும் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் அர்ப்பணிப்பு வழங்கியிருக்கின்றனர். நாட்டை நிலைபேறான துரித அபிவிருத்திப் பாதையில் இவர்கள் இட்டுச் செல்கின்றனர்.
இந்நாடு முப்பது வருடங்கள் முகம் கொடுத்து வந்த உள்நாட்டு யுத்தத்தை முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் இவர்கள் வரலாற்றிலும் அழியாத்தடம் பதித்திருக்கின்றனர். அத்தோடு முன்னாள் சபாநாயகரும் தற்போதைய அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்நாட்டின் மறுமலர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகின்றனர்.
இவ்வாறு இந்நாட்டு நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வரும் புதல்வர்களை நாட்டுக்கு அளித்துள்ள பெருமையைப் பெற்று விளங்கும் தென்னிலங்கையின் முன்னணி அரசியல்வாதியான டி.ஏ. ராஜபக்ஷ 1906 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரக்கெட்டிய மெதமுலனவில் பிறந்தார்.
தொன் தாவித் ராஜபக்ஷ தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை வீரக்கெட்டிய மண்டாட்டுவ பாடசாலையில் பெற்றார். இவரது தந்தை அன்று வலிகட கோரளவின் விதானை ஆராச்சியாகப் பதவி வகித்தார். அதனால் அவர் டி.ஏ. ராஜபக்ஷவை இரண்டாம் நிலை கல்விக்காக காலி ரிட்ஜ்மண்ட் கல்லூரியில் சேர்த்தார். அங்கு கல்வியை நிறைவு செய்து கொண்ட டி.ஏ. ராஜபக்ஷ தனது தந்தையின் வயல் மற்றும் தென்னந்தோட்டங்களைப் பராமரிப்பதில் தந்தைக்கு உதவியாக இருந்தார்.
இதேவேளை இவரது மூத்த சகோதரரான தொன் மெத்திவ் ராஜபக்ஷ அரசியலில் பிரவேசித்ததோடு 1936 முதல் அரச பிரதிநிதிகள் சபையின் ஹம்பாந்தோட்டை உறுப்பினராகப் பதவி வகித்தார். அவருக்கும் உதவி ஒத்துழைப்புகளை நல்கக் கூடியவராக விளங்கினார் அமரர் டி.ஏ. ராஜபக்ஷ.
இவ்வாறான சூழலில் இவர் மாத்தறை, பாலட்டுவவை சேர்ந்த தந்தினா சமரசிங்க திஸாநாயக்கவை திருமணம் செய்து இல்லற வாழ்வில் பிரவேசித்தார். இவர்களுக்கு பிள்ளைகள் 09 பேர் ஆவர். அவர்களில் ஆறு ஆண் பிள்ளைகளும் மூன்று பெண்பிள்ளைகளும் அடங்குவர். சமல் ராஜபக்ஷவும் மற்றொரு பிள்ளையும் அமரர் டி.ஏ. ராஜபக்ஷ அரசியலில் பிரவேசிக்க முன்னர் பிறந்தவர்களாவர்.
டி.எம். ராஜபக்ஷ 1945 இல் திடீரென நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் மக்களின் தொடர் அழுத்தம் காரணமாக போட்டியிட்ட டி.ஏ. ராஜபக்ஷ போட்டியின்றித் தெரிவானார். அதன் ஊடாக இவர் நேரடி அரசியலில் பிரவேசித்தார். இதே வருடம்தான் டி.ஏ. ராஜபக்ஷ தம்பதியினருக்கு மற்றொரு புதல்வராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிறந்தார். அதேநேரம் கோட்டாபய ராஜபக்ஷ 1949 இலும், பசில் ராஜபக்ஷ 1951 இலும் டி.ஏ. ராஜபக்ஷ தம்பதியினருக்கு பிள்ளைகளாக பிறந்தனர்.
அதேநேரம் இடைத்தேர்தலில் போட்டியின்றி தெரிவான டி.ஏ. ராஜபக்ஷ அரச பிரதிநிதிகள் சபை உறுப்பினரானதோடு விவசாய மற்றும் காணி கமிட்டியிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது கிருவாபத்துவ விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நல்ல வாய்ப்பாக அமைந்தது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு 99 வருட குத்தகைக்கு ஐந்து ஏக்கர்படி காணிகளை பெற்றுக் கொடுத்தார். அத்தோடு நடுத்தர வருமானம் பெறுபவர்கள் 10 முதல் 50 ஏக்கர்கள் வரை காணிகளைப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்து கொடுத்தார். இது கிருவாபத்துவ பிராந்தியத்தின் வேளாண்மை மற்றும் தெங்கு செய்கையின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
இது இவ்வாறிருக்க, சோல்பரி அரசியலமைப்பின் கீழ் சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்ற தேர்தல் 1947 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் மேற்கு கிருவாபத்துவ பிரதேசம் உள்ளடக்கிய பெலியத்த தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டி.ஏ. ராஜபக்ஷ. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த டி.ஏ. ராஜபக்ஷ இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருந்த சுதந்திரம் தொடர்பில் முழுமையான திருப்தி கொண்டவராக இருக்கவில்லை.
ஏனெனில் டி.எஸ். சேனநாயக்க டொமினியன் அந்தஸ்து கொண்ட சுதந்திரத்தையே பெற்றிருந்தார். அதனால் பிரித்தானிய கொடி தொடர்ந்தும் இலங்கையில் பறந்ததோடு, திருகோணமலை துறைமுகத்திலும் சீனக்குடாவிலும் கட்டுநாயக்காவிலும் பிரித்தானிய படைகளின் முகாம்களும் இருந்து கொண்டிருந்தன.
நாட்டுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் டி.ஏ. ராஜபக்ஷ இருந்தார். இந்நிலைப்பாட்டை அன்றைய பிரதமரும், ஐ.தே.க தலைவருமான டி.எஸ். சேனநாயக்கவிடம் அவர் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறினார். இதே நிலைப்பாட்டில் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாநாயக்க உள்ளிட்ட சிலரும் இருந்தனர். இவர்கள் இந்நாட்டுக்கு முழுமையான சுதந்திரம் பெற்றுக் கொள்வதன் அவசியத்தை டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும் ஐ.தே.க விலும் வலியுறுத்தி வந்தனர்.
டி.எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐ.தே.க முன்னெடுத்த கொள்கைகள் குறித்து அதிருப்தி அடைந்த நிலையில் எஸ்.டப்ளியூ.ஆர்.பண்டாநாயக்க 1951 ஜுலை 12 ஆம் திகதி அரசாங்கத்தின் சபை முதல் பதவி, சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பதவி என்பவற்றைத் துறந்து எதிரணிக்குச் சென்றார். அவருடன் டி.ஏ. ராஜபக்ஷ, ஹேர்பட் சிரீ. நிஷ்ஷங்க உள்ளிட்ட சிலரும் இணைந்து சென்றனர்.
அரசாங்கத்திலிருந்தும் ஐ.தே.கவிலிருந்தும் வெளியேறிய இவர்கள், நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படவென புதிய அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், எஸ். தங்கராசா உள்ளிட்ட பலரும் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, டி.ஏ. ராஜபக்ஷ உள்ளிட்டோருடன் இணைந்து கொண்டனர். இவர்களது அயராத முயற்சியில் 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி சுதந்திரக் கட்சி உதயமானது. என்றாலும் இக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதற்குள் சுதந்திர இலங்கையின் இரண்டாவது பொதுத்தேர்தல் 1952 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் சு. கட்சி சார்பில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு டி.ஏ ராஜபக்ஷ வெற்றி பெற்றார். அத்தேர்லில் சு.கட்சி 09ஆசனங்களை வென்றெடுத்ததோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவி எஸ்.டப்ளியூ.ஆர். பண்டாரநாயக்காவுக்கு கிடைக்கப் பெற்றது.
இக்காலப் பகுதியில் பண்டாரநாயக்க, டி.ஏ. ராஜபக்ஷ உள்ளிட்டோர் அயராது முன்னெடுத்த முயற்சிகளின் பயனாக 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சு. கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுக் கொண்டது. அத்தேர்தலிலும் டி.ஏ. ராஜபக்ஷ பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து பண்டாரநாயக்க அரசாங்கத்தில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராக டி.ஏ. ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அத்தோடு இலங்கையில் பறந்த பிரித்தானிய கொடியை இறக்கி வைத்ததோடு, அந்நாட்டு படை முகாம்களையும் பிரதமர் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் மூடியமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கா 1959 இல் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமரான விஜயானந்த தஹநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் டி.ஏ. ராஜபக்ஷ விவசாய, காணி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் சிரீமாவோ பண்டாநாயக்க தலமையிலான அரசாங்கத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் பிரதி சபாநாயகராகவும் நியமனம் பெற்று சேவையாற்றினார்.
1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் டி.ஏ. ராஜபக்ஷ தோல்வி அடைந்தார். இச்சமயம் இவரது பிள்ளைகளான சமல், மஹிந்த, கோட்டாபய, பசில் உள்ளிட்டோர் கொழும்பிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர்.
அரசியலில் பிரவேசிக்கும் போது செல்வச் செழிப்பு மிக்கவராக விளங்கிய அமரர் டி.ஏ ராஜபக்ஷ 1965 இல் அரசியல் அதிகாரத்தை இழந்த போது பொருட்செல்வம் இல்லாதவராகவே விளங்ககினார். அதனால் பிள்ளைகளின் படிப்பு செலவையும் குடும்பச் செலவையும் சமாளிக்க முடியாத நிலையில் தம் வாகனத்தைக் கூட விற்றார். ஏனெனில் அச்சமயம் தம்மிடமிருந்த தென்னந்தோட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் போதியதாக இல்லாததே காரணமாகும். இவ்வாறான சூழ்நிலையில் நோய்வாய்ப்பட்ட டி.ஏ. ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 1967.11.07 அன்று காலமானார்.
அவர் விட்டுச் சென்றுள்ள முன்னுதாரணங்களையும் முன்மாதிரிகளையும் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அவரது புதல்வர்கள் திறம்படப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.