பேராதனை பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள பெரும் கௌரவம்
நனோ தொழில்நுட்பம் கலந்த பருத்தி துணியைப் பயன்படுத்தி நூறு சதவீதம் வைரஸ்களை ஒழிக்கக் கூடிய உலகத் தரம் வாய்ந்த முகக்கவசத்தை உருவாக்கியதில் பேராதனை பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது.
கொவிட்19 வைரஸ் குறித்து பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் காமினி ராஜபக்ஷ தலைமையிலான ஆய்வுக் குழுவானது நீண்ட காலமாக நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கொவிட் வைரஸ் மற்றும் பிற வைரஸ்கள், பக்டீரியாக்கள் போன்ற நுண்கிருமிகளை அழிக்கக் கூடிய ஒரு விசேட முகக்கவசம் எனவும் இதுவே உலகில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள அதிபாதுகாப்பான முகக்கவசம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிக உயர்ந்த தொழில்நுட்பத்தின் ஊடாக மூன்று படைகளில் இந்த முகக்கவசம் அமைந்துள்ளது. உமிழ்நீர் போன்ற பொருட்களை அகற்றக் கூடியதாகவும் மற்றும் வைரஸ்கள், பக்டீரியாக்களை அழித்து, திரவத்தன்மை மற்றும் ஈரப்பதன் என்பவற்றை உறிஞ்சக் கூடிய வகையில் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் வளியை வடிகட்டக் கூடிய வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பேராதனை பல்கலைக்கழக குழுவினால் உலகில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ள விசேட முகக்கவசத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி, அதனை சந்தைப்படுத்துவதற்காக 03.03.2021 அன்று கண்டி ஒக்ரே ஹோட்டலில் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் வைபமொன்று நடைபெற்றது.
இவ்வைபவத்தில் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க, பிரதி துணைவேந்தர் பேராசிரியர் பராக்கிரம கருணாரத்ன மற்றும் விசேட வைத்தியர் சமிந்த ஹேரத், உள்ளூர் புடைவை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹேமந்த பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் உள்ளூர் புடைவை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹேமந்த பெரேரா மற்றும் பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க ஆகியோர் இந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான வர்த்தக ஒப்பந்தமொன்றிலும் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிசன்னமாகியிருந்த வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இங்கு உரையாற்றுகையில், இவ்வாறு ஆரோக்கியமுள்ள புதிய புதிய தயாரிப்புகளை உறுதிப்படுத்துவோருக்காக வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரங்களை துரிதப்படுத்துமாறு தேசிய புலமை சொத்துக்களுக்கான சட்ட பணியகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட்டாலும், அதை உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வணிக உற்பத்தியாக வழங்குவதில் பல தடைகள் உள்ளன. புதிய ஆக்கங்களை உருவாக்கும் படைப்பாளர்களை பாராட்டுவதற்கோ அல்லது அவர்களுக்கு அரசியல் மற்றும் நிதி ரீதியிலான வகையில் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதற்கோ விசேட பொறிமுறையொன்று இதுவரை எங்களிடம் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“இந்த புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு என்னைச் சந்தித்த போது உள்ளூர் புடைவை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரையும் அழைத்து வருவதாக நான் பல்கலைக்கழக குழுவிடம் தெரிவித்திருந்தேன். அதன்படி நான் அவரை இங்கு அழைத்து வந்துள்ளேன். இவ்வாறு நான் சங்கத்தின் தலைவரை அழைத்து வந்துள்ளமைக்கு முக்கிய காரணமொன்று இருக்கின்றது. அதாவது, இந்த வகை தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் அரசாங்க நிதியைப் பெற்றுக் கொள்வது ஒரு கடினமான காரணம் என்பதனால், இது போன்ற நடவடிக்கைகளை சர்வதேசம் வரையும் முன்னெடுத்துச் செல்லக் கூடிய வணிகத்துறை சார்ந்தோரை நாம் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதினால் நான் அவரை அழைத்து வந்தேன்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நனோ தொழில்நுட்பம் கலந்த பருத்தி துணியைப் பயன்படுத்தி நூறு சதவீதம் வைரஸ்களை ஒழிக்கக் கூடிய உலகத் தரம் வாய்ந்த முகக்கவசத்தை உருவாக்கியதில் பேராதனை பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது. மேலும் இந்த நோக்கத்திற்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
எனது அமைச்சின் கீழ் உள்ள வர்த்தக திணைக்களம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திப் பணியகம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் 28 நாடுகளுடன் ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து வருடத்திற்கு ஆறு முறை உரையாடுகின்றனர். ஆகவே இந்த புதிய தயாரிப்புகள் குறித்த இந்த மாதக் கூட்டத்தில் பங்கேற்க இந்த தயாரிப்பு குழுவுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படும். நாடு முழுதும் இந்த முக்கவசத்திற்கு அதிக கேள்வி இருக்கிறது. இதனை தேசிய மற்றும் சர்வதேச மடடத்தில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள அமைச்சு மூலம் உச்சக்கட்ட நடவடிக்ைககள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய முகக் கவசத்தை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் காமினி ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில் “சுமார் ஒரு வருடமாக ஆய்வு செய்யப்பட்டு தயாரக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசமானது மைக்ரோ மற்றும் நனோ தொழில்நுட்பம் கலந்த பருத்தி துணியைப் பயன்படுத்தி நூறு சதவீதம் வைரஸ்களை ஒழிக்கக் கூடியதாகும். இது உலகத் தரம் வாய்ந்ததாகும். மேலும் மூன்று உறைகளைக் கொண்ட இந்த புதிய வகை தயாரிப்பை இதுவரை வேறு எந்த நாடும் உருவாக்கவில்லை. இது வாரத்திற்கு சுமார் 20 முறை சலவை செய்யப்பட்டாலும், அது பழுதடைந்து விடாது. இதனை, சுமார் 20 வார காலம் பயன்படுத்தலாம். முகக்கவசம் தயாரிக்க பருத்தி துணி பயன்படுத்தப்பட்டிருப்பதனால் அதன் பயன்பாட்டிற்குப் பிறகு இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. ஏனெனில் இது குறுகிய காலத்தில் சிதைந்தவிடும்” எனக் குறிப்பிட்டார்.