
இந்தியா முழுவதும் பரவிய கொரோனோ இரண்டாம் அலை டெல்லி மாடலின் கோர முகத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிக்காட்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவை வெற்றிகரமாகக் கையாண்டதாக மோடிக்கு நன்றி என டெல்லி பா.ஜ.க தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அரவிந்த் கெஜ்ரிவாலும் தமது அரசு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாக சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார்.
டெல்லி மாடலும், தற்காலிக சுடுகாடும்
டெல்லி மாடல் என அழைத்த அவர், இது அனைத்து கட்சிகளாலும், அனைத்து தரப்பு மக்களாலுமே சாத்தியமானது என நன்றி நவிழ்ந்தார்.
ஆனால், இந்தியா முழுவதும் பரவிய கொரோனோ இரண்டாம் அலை டெல்லி மாடலின் கோர முகத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிக்காட்டி உள்ளது.
மற்ற மாநிலங்கள் தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த டெல்லி அரசு தற்காலிக இடுகாடுகளை உருவாக்கி உள்ளது. எங்கும் விடாமல் சிதைகள் எரிந்த வண்ணம் உள்ளன.
ஒவ்வொரு நாளும் கோவிட் 19-ஆல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, 350 முதல் 400 வரை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சில மயானங்களில், 100 க்கும் மேற்பட்ட சிதைகள் எரிவதைக் காண்வதாக கூறுகிறார்கள் செய்தியாளர்கள்.
ஆம், டெல்லி அரசு கொரோனாவின் இரண்டாம் அலை முன் தோற்று நிற்கிறது. மக்கள் தாம் முழுவதுமாக கைவிடப்பட்டதாகவே உணர்வது அவர்கள் பேசுவதிலிருந்தே தெரிகிறது. தி பிரிண்ட் (The Print) தளத்தில் இதழியலாளர் சிவம் எழுதி உள்ள கட்டுரையில் டெல்லி மாடலை ஒரு வெற்று வித்தை என்று குறிப்பிடுகிறார்.
முதல் அலையின் போது டெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் குறித்த தகவலைத் தெரிந்து கொள்ள ஒரு செயலியை வெளியிட்டது. ஆனால், அந்த செயலியும் சரியாக வேலை செய்யவில்லை. இப்போது அந்த செயலியை டெல்லி அரசே மறந்துவிட்டது என தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் சிவம்.
திட்டமிட்டுச் செயல்படும் அரசாக அல்லாமல், வெறும் ஜனரஞ்சக அரசாக மட்டுமே கெஜ்ரிவால் அரசு இருக்கிறது. மக்கள் லஞ்ச ஊழல் குறித்துப் பேசினால், அவர் அதற்காக இயக்கம் தொடங்குவார். மக்கள் அதனை மறந்துவிட்டால் தாமும் மறந்துவிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அட்லி மெர்சல் படத்தில் ஜல்லிக்கட்டு காளையைப் பயன்படுத்தியது போலத்தான், மக்கள் உணர்வு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருந்த போது, அதனைத் தனது போஸ்டரில் வைத்தார் அட்லி.
ஆனால், மக்கள் நல அரசை நடத்துவது, சினிமா எடுப்பது போல அல்ல தானே?
தவறான தரவுகள்
கொரோனா மரணங்கள் குறித்த தவறான தரவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தொடக்கத்திலிருந்தே வழங்கியதாகக் குற்றஞ்சாட்டுகிறார் சிவம். கொரோனாவால் மரணித்தவர்கள் என்று டெல்லி அரசு ஒரு எண்ணிக்கையைத் தர, சுடுகாடுகளிலிருந்து வந்த எண்ணிக்கை வேறாக இருந்தது என்கிறார் அவர்.
கொரோனாவை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கட்டுப்படுத்த தவறியதாக டெல்லியின் அனைத்து தரப்பு மக்களுமே கருதுகின்றனர். டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு படி மேலே சென்று, “நீங்கள் செய்தது எல்லாம் போதும். உங்களால் இந்த நிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசைக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள கோருவோம்,” என்று கூறி உள்ளது.
ஒட்சிசன், ரெம்டெசீவர் தட்டுப்பாடு நிலவுகிறது என மருத்துவமனைகள் தொடுத்த வழக்கில்தான் விபின் மற்றும் ரேகா அடங்கிய அமர்வு இவ்வாறாகக் கூறி உள்ளது.
சரி… இப்போது டெல்லி மருத்துவமனைகளில் நிலவும் ஒட்சிசன் தட்டுப்பாட்டுக்கு டெல்லி அரசு மட்டுமே காரணாமா? பி.எம்.கேர்ஸ் ஆகிஸிஜன் உற்பத்தி மையத்திற்காக வழங்கிய பணத்தை கெஜ்ரிவால் அரசு முறையாகப் பயன்படுத்தவில்லையா? இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மையா?
உண்மை இல்லை என்கிறது கெஜ்ரிவால் அரசு.
ஒட்சிசன் தட்டுப்பாடு
மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் தான் ஒட்சிசன் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளைவிட்டது. இதில் மாநில அரசின் பணி அவர்களுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது மட்டும்தான். இந்த சங்கம் முழுக்க முழுக்க ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்திற்கான பணிகளை மேற்கொண்டது. இவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் தாமதப்படுத்தவிட்டு, பிரச்னை கை மீறியதும் மாநில அரசைக் குற்றஞ்சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்ற டெல்லி கெஜ்ரிவால் அரசின் கேள்வியைப் புறந்தள்ள முடியாது.
இனியாவது…
இது ஏதோ இப்போதைய பிரச்னை மட்டும் அல்ல. குறைந்தபட்சம் இப்போதாவது டெல்லி அரசு மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தொடங்க வேண்டும். ஒற்றை எய்ம்ஸை, பெரிய பெரிய மருத்துவமனைகளை மட்டுமே முன்னிறுத்துவது இதற்குத் தீர்வல்ல. ஏராளமான சிறிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை உண்டாக்க வேண்டும் என்கின்றனர்.
கெஜ்ரிவால் அரசு தமது 2015 – 2020 காலகட்டத்தில் மொஹல்லா (neighbourhood) கிளினிக் திட்டத்தைக் கொண்டுவந்தது. இது உலக சுகாதார அமைப்பால் பாராட்டப்பட்டது. இதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் டெல்லி மக்கள்.