–கி.நிவேதிகா
பல வருடங்களாகப் போராடிப் பார்த்த தொழிலாளர்கள் 1886-ம் ஆண்டில், தங்களின் கடைசி ஆயுதமாய் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் மே 1-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் மே முதல் நாள் உழைக்கும் மக்களின் நாளாக, சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வின்றி உழைக்கும் மக்களின் ஓய்வுக்காக இந்நாள் விடுமுறை தினமாக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டோ கொரோனாவின் காரணமாக வீட்டுக்குள் முடங்கிப்போய் இருக்கும் தொழிலாளர்கள் மிக நீண்ட ஓய்வினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து துயரில் வாடுகிறார்கள். தங்களின் தொழில்களுக்கு எப்போது திரும்பப்போகிறோம் என்கிற அச்சம் உலகையே ஆட்டிக்கொண்டிருக்கிறது.
நாம் இன்று வாழும் இந்த நவீன யுகம் ஆண்டாண்டு காலமாய் உழைத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கத்தின் வியர்வைத் துளிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான ஒரு தினம் என்பது எவ்வளவு கொண்டாட்டமாக இருக்க வேண்டும். ஆனால், மிகுந்த போராட்டங்களுக்கும் வலிகளுக்கும் பிறகே வரலாறு தொழிலாளர்களுக்கென ஒரு தினம் கொண்டாட அனுமதித்தது.
ஆம், அத்தனை சுலபமாக கடந்துவிடக் கூடிய போராட்டங்கள் இல்லை அவை.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, நாடுகள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு தொழில்துறையில் ஜாம்பவான்களாக முயன்று கொண்டிருந்த காலம். முதலாளிகளால் தொழிலாளர்கள் சக்கையாகப் பிழியப்பட்டனர். வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கோ, நலனுக்கோ முக்கியத்துவம் தரப்படாமல் இருந்த காலகட்டம் அது. சர்வசாதாரணமாக பதினெட்டிலிருந்து இருபது மணிநேர வேலை தொழிலாளர்கள் மீது நிர்பந்திக்கப்பட்டது.
அந்தச் சூழலிலும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் தரப்படாமல் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. இந்த அநியாயத்தை எதிர்த்து தொழிலாளர்கள் அமெரிக்காவில் போர்க்கொடி தூக்கினர். வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். தொடக்கத்தில் இந்த வேலை நிறுத்தங்களின் பிரதானக் கோரிக்கை `அதிக ஊதியம்’ என்பதே. ஆனால், வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம்தான் தாங்கள் சுரண்டப்படுவதைத் தவிர்க்க முடியும் என்பதை உணர்ந்த தொழிலாளர்களின் போராட்டங்கள் வேலை நேர குறைப்புக்கான கோரிக்கையாக வலுக்கத் தொடங்கியது.
1806-ம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தின் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போதுதான் தொழிலாளர்களின் கஷ்டங்களும் அவர்களின் உழைப்பின் மீதான சுரண்டலும் உலகுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த நகரின் இயந்திரத் தொழிலாளர்கள் ஆரம்பித்த சங்கம்தான் உலகின் முதல் தொழிலாளர் சங்கம் என்கிறது வரலாறு.
1820, 1830-ம் ஆண்டுகளில் பத்து மணிநேர வேலை நேரம் என்கிற கோரிக்கையை வகுத்து நிர்வாகத்திடம் போராடினர் தொழிலாள வர்க்கத்தினர். வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தன் முதல்படியை எடுத்து வைத்தது. அதன்படி அரசாங்க ஊழியர்களின் வேலைநேரம் பத்து மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இது எந்தவித பலனையும் அளிக்கவில்லை. அனைவருக்கும் பத்து மணிநேர வேலை என்கிற தங்களின் கோரிக்கையோடு தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கடுமையான உழைப்பில் உருவான கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (Communist Manifesto) பாட்டாளி வர்க்கத்திடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்ஸ் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. பெறுவதற்கோ பொன்னான ஒரு உலகம் காத்திருக்கிறது” என அறைகூவல் விடுத்தார். அவரின் இந்தப் பிரபல வாக்கியம் பல தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும் பின்னாளில் வரலாறு படைக்கவும் காரணமாக இருந்தது.
1850-களில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் தோன்றியிருந்தன. பத்து மணிநேர கோரிக்கை இச்சங்கங்களின் அறிவுறுத்தல்களால் எட்டு மணி நேர வேலைக்கான கோரிக்கையாக மாறியது. அமெரிக்கா மட்டுமன்றி எங்கெல்லாம் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறதோ அங்கெல்லாம் கிளர்ந்தெழுந்தனர் தொழிலாளர்கள். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் கட்டடத் தொழிலாளர்கள், “8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுது போக்கு, 8 மணி நேர ஓய்வு” என்கிற தங்கள் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வெற்றியும் கண்டனர். இவ்வெற்றி உலகின் அத்தனை தொழிலார்களுக்கும் போராடினால் வெற்றி கிட்டும் என்கிற உத்வேகத்தை அளித்தது.
அமெரிக்காவில் அனைத்து தொழிலாளர்களுக்குமான ஒருங்கிணைந்த சங்கத்தின் தேவையை உணர்ந்து 1866-ல் தேசிய தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த ஆண்டு பால்டிமரில் நடந்த சங்க மாநாட்டில் 8 மணிநேர வேலை நாளை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக வில்லியம் சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் இந்த தேசிய தொழிலாளர் சங்கத்தைப் போன்றே லண்டனில் `ஃபர்ஸ்ட் இன்டர்நேஷனல்" என பொதுவாக அறியப்படும்
சர்வதேச தொழிலாளி சங்கம்’ 1866-ல் ஜெனிவாவில் 8 மணிநேர வேலை நாளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இப்படியாக இந்த இரு அமைப்புகளும் ஒரே கொள்கைகளோடு செயல்பட்டு வந்தன.
`வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்றும் இம்மாநாடு முன்மொழிகிறது” என எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்துக் கார்ல் மார்க்ஸ் 1867-ல் வெளியான தனது மூலதனம் புத்தகத்தில்
வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார்.
பல வருடங்களாகப் போராடிப் பார்த்த தொழிலாளர்கள் 1886-ம் ஆண்டில், தங்களின் கடைசி ஆயுதமாய் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் மே 1-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தனர். தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்த காலகட்டம் அது. இப்போராட்டங்களின் மையப்பகுதியாக சிகாகோ இருந்தது. முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பு நாடு முழுவதும் பரவி புரட்சிக்கான உணர்வோடு உழைக்கும் வர்க்கத்தினர் இருந்தனர். தங்களின் தொழிற்கருவிகளை கீழே வைத்துவிட்டு சாலையை நோக்கித் திரண்டு வந்த தொழிலாளர்களின் படை உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. 8 மணிநேர வேலை நாள் என்கிற கோஷம் விண்ணைப்பிளந்தது. ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் திரண்டெழுந்து தொழிலாள வர்க்கத்தின் மொத்தப் போராட்ட வரலாற்றையும் மே 1 என்கிற இந்த ஒற்றை நாளில் தூக்கி நிறுத்தினர். புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
ஆனால், அரசும் முதலாளிகளும் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. இரண்டு நாள்கள் கழிந்து அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மே 4-ம் தேதி, ஹே மார்க்கெட் (Hay market) சதுக்கத்தில் கண்டன கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அமைதியாகக் கூடிய மக்கள், தலைவர்களின் பேச்சுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். வன்முறை நடக்க வாய்ப்பேயில்லை என அங்கிருந்தவர்கள் நம்பிக்கொண்டிருக்க எங்கிருந்தோ எறியப்பட்ட குண்டு ஒன்று ராணுவ அதிகாரி ஒருவரைக் கொன்றது.
யார் இதைச் செய்தது என்பதைக் கூட விசாரிக்காமல் காவலர்கள் கூட்டத்தினரை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். இதில் பதினைந்து தொழிலாளர்கள் பலியானார்கள். நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் மிகமுக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஃபர்ஸ்ட் இன்டர்நேஷனல் கலைக்கப்பட்டு சோஷலிச மற்றும் தொழிலாளர் கட்சிகளால் இரண்டாம் இன்டர்நேஷனல் தோற்றுவிக்கப்பட்டது. 1891-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் இன்டர்நேஷனலின் தீர்மானம்படி மே 1-ம் நாள் சிகாகோ போராட்டத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் சர்வதேச தொழிலாளர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பை உலக மக்கள் அனைவரும் அறியும் நாளாக இந்த நாள் பார்க்கப்பட்டது.
தற்போது 80 நாடுகளுக்கும் மேல் மே 1 தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் போராட்டங்களில் கவனம் ஈர்த்த அமெரிக்காவானது செப்டம்பரின் முதல் திங்களன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறது.
இந்தியாவில் முதன்முறையாக 1923-ம் ஆண்டு சிங்காரவேலர் என்கிற தமிழர் மே தினத்தை மெரினாவில் செங்கொடி ஏற்றி கொண்டாடியுள்ளார். 1957 வரை இந்த தினம் விடுமுறை நாளாக இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு விடுமுறை நாளாக மே முதல் நாளை அறிவித்தது.
இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் இருக்கும் உழைப்பாளிகள் சிலை 1959-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. உழைக்கும் நான்கு மனிதர்கள் சிலையில், இரண்டு மற்றும் நான்காவது மனிதர்களுக்கு, அரசு கலைக்கல்லூரியின் நைட்வாட்ச்மேன் மாடலாக இருந்தார் என்பது கூடுதல் சிறப்பு.
இதுமட்டுமன்றி சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா 1990-ம் ஆண்டு மேதின பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொழிலாளர்களும் அவர்களது உழைப்பும்தான் இப்பூவுலகின் இயக்கத்தை நின்றுவிடாமல் சுழல வைக்கிறது. உலகில் மிகப்புனிதம் என ஒன்று இருக்குமென்றால் அது தொழிலாளர்களின் வியர்வைத் துளிகளேயன்றி வேறெதுவாக இருந்துவிட முடியும்!